`முதலீடு செய்யுங்கள், லாபத்தைப் பங்கிட்டு கொள்ளலாம்! '- விவசாயம் செய்வதாக கூறி கோடிக் கணக்கில் மோசடி

0

``நிலத்தின் மீது முதலீடு செய்தால் அதில் இயற்கை விவசாயம் செய்து அதன் மூலம் விளையும் பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் கிடைக்கும். அந்த லாப பணம் முதலீடு செய்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்" எனக் கூறி தனியார் நிறுவனம் ஒன்று டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து முறைகேடு செய்துள்ளதாகவும், தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனக் கூறியும் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகார்

Also Read: புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் 1.8 கோடி மோசடி... செயலாளர், மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்!

நாகர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஓய்வுபெற்ற விமானப் படை ஊழியர் என்று கூறப்படுகிறது. இவர் `ஏசிஐஆர் வெல்த் டெவலப்பர்ஸ் பார்ம் இந்தியா' என்ற பெயரில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அன்பழகன், அவரது மனைவி ஜெர்லின் மற்றும் ரமேஷ், பிரபாகரன், ராஜசேரன், ஜோதிபாசு, ரதீஸ் உள்ளிட்டோர் அதன் இயக்குநர்களாக செயல்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிறுவனத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் நாகர்கோயில் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் முதலீடு செய்யக் கூறி பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர். தொடக்கத்தில் சிலருக்கு பணம் கொடுத்து வந்த அந்த நிறுவனம் தற்போது பணம் தராததால், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்து பார்ம் இந்தியா நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்றுத் தரும்படி தஞ்சாவூர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து தஞ்சாவூரைச் சேர்ந்த, வாழ வழி வகுக்கும் மக்கள் நல முன்னேற்ற நலச்சங்கத்தின் தலைவர் நாகராஜனிடம் பேசினோம். ``பார்ம் இந்தியா என்ற நிறுவனம் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருச்சி, நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தின் மீது முதலீடு என்று கூறி பொதுமக்களிடம் 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை வசூல் செய்துள்ளனர். பொதுமக்கள் கொடுக்கும் பணத்தினை கொண்டு நிலத்தினை வாங்கி அதில் இயற்கை விவசாயம் செய்து, அதில் விளையும் பொருள்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வோம் என்றும், அதில் கிடைக்க கூடிய லாப பணம் முதலீடு செய்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றும், பின்னர் ஐந்து ஆண்டுகள் முடிவில் அசல் தொகையுடன் வட்டியும் சேர்த்து திருப்பித்தரப்படும் என ஆசைகாட்டியுள்ளனர்.

விவசாயம் பெயரில் ஏமாற்றப்பட்டவர்கள்

இதனால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 10,000 பேர் வரை கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பணம் வசூலித்துள்ளதாக தெரிகிறது. பணம் செலுத்தியவர்களுக்கு ரசீதும் கொடுத்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு பணம் முதலீடு செய்தவர்களில் சிலருக்கு மட்டும் முதிர்வுத் தொகை கொடுத்துள்ளனர். அதன் பின்னர் எந்த ஒரு நபருக்கும் பணம் தரவில்லை. பொறுத்திருந்து பார்த்த பலரும் அவர்களது அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டு வந்தனர்.

இதோ தருகிறோம் எனக் கூறியே கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். எங்கள் பகுதியில் படித்த இளைஞர்களை முகவர்களாக நியமனம் செய்து பணம் வசூலித்துள்ளனர். பொதுமக்களிடம் நம்பிக்கையினை ஏற்படுத்தவே இந்த முறையைக் கையாண்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்

Also Read: ``கே.ஒய்.சி அப்டேட் பண்ணணும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க!" - வினோத் காம்ப்ளியிடம் ரூ.1.14 லட்சம் மோசடி!

அவர்கள் சொன்னதை உண்மை என நம்பி விவசாயிகள் உட்பட பலரும் பணம் முதலீடு செய்துள்ளனர். பணம் தராததைத் தொடர்ந்தே அவர்கள் ஏமாற்றியுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த நிறுவனத்தைச் சேர்ந்த அன்பழகன், அவர் மனைவி ஜெர்லின் மற்றும் இயக்குநர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும் பொதுமக்களிடம் வசூல் செய்து வாங்கிய நிலத்தை கையக்கப்படுத்த வேண்டும். இது தொடர்பாக சுமார் 300 பேருடன் சென்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் பணம் திருப்பி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் அந்த நிறுவனம் மேற்கொண்டு யாரையும் ஏமாற்றாமல் தடுக்கும் வகையில் அரசு மற்றும் போலீஸ் விரைந்து செயல்பட வேண்டும்'' என தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3oTwfDO
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*