நாடோடி குடும்பம் பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரம் - ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து!

0

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் மீன் விற்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்ப முயன்ற செல்வமேரி என்ற மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்டதாக கடந்த திங்கள்கிழமை சிலர் வீடியோ வெளியிட்டனர். மீன் விற்றுவிட்டுவந்ததால் நாறும் எனக்கூறி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அந்த மூதாட்டி நியாயம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் நேரகுறிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை வடசேரி பேருந்து நிலையத்தில் நாடோடி பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த முதியவர், பெண் மற்றும் ஒரு குழந்தை ஆகியோரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக மற்றொரு வீடியோ வலைதளங்களில் பகிரப்பட்டது.

பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டவர்

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வள்ளியூர் வழியாக திருநெல்வேலி செல்லும் அரசு பஸ்ஸில் இந்த சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து நாடோடி பழங்குடியினக் குடும்பத்தை பேருந்திலிருந்து இறக்கிவிட்டதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் நெல்சன் மற்றும் நடத்துநர் ஜெயபாலன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அருகிலிருக்கும் நிலைய காப்பாளரிடம் தெரிவிக்காமல் டிரைவரும், கண்டக்டரும் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், பொறுப்பற்ற முறையில் பணி செய்து அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தியதாகவும் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அந்த அரசு பேருந்து திருவட்டாறு டெப்போவைச் சேர்ந்தது என்பதால் திருவட்டாறு பணிமனை கிளை மேலாளர் அனிஷ் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஒரு வாரத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆறு போர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்ட நாடோடி குடும்பம்

விசாரணையில் நாடோடி பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மது அருந்திவிட்டு பேருந்தில் தகராறு செய்ததாகவும், அவர்களை இறக்கி விடாமல் இருந்தால் நாங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கிவிடுவோம் என்று பயணிகள் சத்தம்போட்டதால் அவர்கள் இறக்க்கிவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் கிளைமேலாளர் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

Also Read: `அவங்களை மன்னிச்சுவிடணும்... பிள்ளைங்களை பாதிக்கும்!’ - பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட மூதாட்டி



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ywOulP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*