ரூ.110 கோடி டெபாசிட் தொகைக்கு `செக்’.. சிக்கிய 1,000 பக்க ஆவணங்கள்! -சிக்கலில் வேலுமணி?!

0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி டெபாசிட் தொகை ரூ.110 கோடியை பறிமுதல் செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் வேலுமணி மற்றும் அவருக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர்.

வேலுமணி ரெய்டு

இதுகுறித்து வேலுமணி, அவரின் சகோதரர் அன்பரசன், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த ரெய்டின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கே.சி.பி இன்ப்ரா, ஆலம் கோல்டு மற்றும் டைமண்ட் ஆகிய நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.110.93 கோடி டெபாசிட் தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியது. இதை எதிர்த்து சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

டெபாசிட் தொகை முடக்கம்

அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே இந்தத் தொகை வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக சேர்த்தது என்று குற்றச்சாட்டின் கீழ் வருவதால், அதை பறிமுதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டெபாசிட் தொகையை இடைக்காலமாக பறிமுதல் செய்து விசாரிக்க உத்தரவிட்டது. மேலும் இதுகுறித்து கே.சி.பி இன்ப்ரா மற்றும் ஆலன் கோல்டு அண்ட் டைமண்ட் நிறுவனங்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெய்டு

தேர்தல் நேரத்தில் வந்துள்ள இந்த உத்தரவால் இது வேலுமணி தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் வேலுமணி டீமை பொருளதார ரீதியாக முடக்கி, செயல்படவிடாமல் வைப்பதற்கான செக் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வேலுமணி வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் மற்றும் விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். “ரெய்டு நடத்தியதில் இருந்தே தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் பொறியியல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வேலுமணிக்கு நெருக்கமான அதிகாரிகளை விசாரித்துள்ளோம்.

வேலுமணி

முக்கியமாக கோவை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் சம்மந்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களை கைப்பற்றியுள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” என்றனர்.

இந்த உத்தரவு அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையை வைத்து என்னை மிரட்டப் பார்க்கின்றனர். என்னுடைய வீட்டிலோ, சம்மந்தப்பட்டவர்கள் வீட்டிலோ எந்த ஆவணமும், பணமோ பறிமுதல் செய்யப்படவில்லை.” என்று வேலுமணி கூறியிருக்கிறார். ஆனால், அ.தி.மு.கவினர் உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளனர். வழக்கு அதிகபட்சம் ஓராண்டில் முடிவதற்கான வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

கோவை தேர்தல்

குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் வேலுமணி, அவர் தொடர்புடையவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக வெளியாகும் தகவல்கள் அ.தி.மு.கவை மிரள வைத்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, கோவை மாவட்டத்தில் தி.மு.க-க்கு அ.தி.மு.க கடுமையான போட்டியை அளிக்க திட்டம் போட்டு வருகிறது. எனவே இந்த வழக்கை வைத்து தி.மு.க-வினர், அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளை மிரட்டி தேர்தல் களத்தில் பின்வாங்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவை அ.தி.மு.க அலுவலகம்

தேர்தல் நெருங்க நெருங்க மேலும் அதிரடி நடவடிக்கைகளை அரங்கேற்றவும் தி.மு.க திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக கோவை அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் அமைதியோ அமைதி நிலையில் இருக்கின்றனர்!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pQhIZiP
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*