``தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; முடிந்த பிறகு ஒரு பேச்சு!” - ஸ்டாலினை விமர்சித்த பழனிசாமி

0

``திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக. கடந்த 9 மாதங்களில் மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.410 கோடி அளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளது” என தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். முதலில் கும்பகோணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அதன் பிறகு தஞ்சாவூர் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்காக ரயிலடியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முன்புறம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை சமீபத்தில் கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசியதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி 51 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர், ``முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை சந்திக்க தயாரில்லை. கொல்லைபுறம் வழியாக தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். அதிமுக நிர்வாகிகளை விலை பேசுவது, ஆசை வார்த்தைகளை கூறி அதிமுக வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற வைத்தது போன்றவற்றை செய்து வருகிறது.

அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம்

அதிமுகவை எதிர்த்து வெல்ல கூடிய சக்தி திமுகவுக்கு இல்லை. மக்களை சந்தித்து வெற்றி பெறக்கூடியதும், தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி அதிமுக. 2006-ல் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சும் என திமுக இரட்டை வேடம் போடுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை. மக்களின் நிலை, பொருளாதார நிலை உயர அடித்தளமிட்ட கட்சி அதிமுக. இந்தப் பொன் விளையும் பூமியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வருவதற்காக ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதாதான். அதிமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகளை வாழ வைத்தது ஜெயலலிதாவின் ஆட்சி.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் போது திமுக 565 வாக்குறுதிகள் அளித்தனர். அதனை புத்தகமாக அச்சிட்டு கொடுத்தனர். ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. ஸ்டாலின் 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மகன் உதயநிதி ஸ்டாலின் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லி காதில் பூ சுற்றுகின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக. கடந்த 9 மாதங்களில் நாட்டு மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை.

சமையல் எரிவாயு ரூ. 100 தருவதாகக் கூறினார். அதற்கு பதிலாக சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்ந்துவிட்டது. நகைக்கடன் தள்ளுபடி 35 லட்சம் பேருக்குக் கிடைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுக் குறைத்தாலும், திமுக அரசுக் குறைக்கவில்லை. ஸ்டாலின் ஒரு விளம்பர பிரியர். தினம் அவருக்கு ஒரு போட்டோ பத்திரிகையில் வர வேண்டும். நூற்றுகணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட சைக்கிள் ஓட்டுறார், ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். உங்க உடம்பு நல்லா இருக்கு, மக்களுக்கும் நல்லது செய்யுங்க.

தேர்தல் பிரச்சாரம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் கிடக்கிறது. இதனால் விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் திறந்தவெளியில் கிடப்பதால், மழையில் நனைந்து மீண்டும் முளைக்கிறது. பொங்கல் பரிசுத் தொகை அதிமுக ஆட்சியில் ரூ. 2,500 வழங்கப்பட்டபோது, ரூ. 5,000 வழங்க வேண்டும் எனக் கூறியவர் ஸ்டாலின்.

ஆனால்,அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசுத் தொகையே கொடுக்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ. 410 கோடி அளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றுவது உள்ளாட்சி அமைப்பு. இதில்,அதிமுக வெற்றி பெற வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/5ipCeWO
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*