வேட்பாளர்களான மகன் மற்றும் 2 மருமகள்கள்; குடவாசல் ராஜேந்திரன் வீட்டில் சுவாரஸ்யம்!

0

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மருமகள்கள் வேட்பாளர்களாகக் களம் இறங்கி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது இப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான அரசியல் பிரமுகராக வலம் வந்தவர் குடவாசல் ராஜேந்திரன். அ.தி.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளராக இருந்த இவர், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். உட்கட்சி பூசலால் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட குடவாசல் ராஜேந்திரன் சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இளைய மருமகள் கீர்த்தி

இந்நிலையில்தான் தற்போது நடைபெற உள்ள குடவாசல் பேரூராட்சி தேர்தலில், இவரின் மகன் மற்றும் இரண்டு மருமகள்கள், வெவ்வேறு வார்டுகளில் வேட்பாளர்களாகக் களம் இறங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பேசும் இப்பகுதி மக்கள், ``எங்க பகுதியில குடவாசல் ராஜேந்திரன் குடும்பம் ரொம்பவே பிரபலமானது. அதனால, இப்போ அவங்க குடும்பத்துல இருந்து மூணு பேர் வேட்பாளர்களாக இறங்கி பிரசாரத்துல ஈடுபட்டுக்கிட்டு இருக்குறதுனால தேர்தல் களம் களைகட்டி இருக்கு.

குடவாசல் ராஜேந்திரனுக்கு ரெண்டு மகன்கள். இரண்டு பேருமே அ.தி.மு.க-வில இருக்காங்க. முதல் மகன் அரசன்கோவன், 10-வது வார்டுல போட்டியிடுறார். இவரின் மனைவி காயத்ரி 6-வது வார்டுல போட்டியிடுறார். குடவாசல் ராஜேந்திரனோட இரண்டாவது மகன் தென்னன்கோவன், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவரா இருக்கார். இவரின் மனைவி கீர்த்தி 9-வது வார்டுல போட்டியிடுறார். இதனால இவங்களோட ஒட்டுமொத்த குடும்பமும் பிரசாரத்துல இறங்கி கலக்கிக்கிட்டு இருக்கு. குறிப்பா, இரண்டு மருமகள்களுமே ரொம்ப பிஸியா இருக்காங்க.

மூத்த மருமகள் காயத்ரி

குடவாசல் மாதிரியான கிராமப்புறங்களை உள்ளடக்கிய பகுதியில இதை மக்கள் ரொம்பவே ஆச்சர்யமா பேசிக்குறாங்க. குடவாசல் பேரூராட்சியில மொத்தம் 15 வார்டுகள்; 40 வேட்பாளர்கள் களத்துல இருக்காங்க. இதுல 19 பேர் பெண்கள். பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வார்டுகள்ல மட்டுமல்லாம, பொது வார்டுகள்லயுமே கூட நிறைய பெண்கள் ஆர்வமா போட்டியிடுறாங்க. இது நல்ல மாற்றம்.

முன்னாடியெல்லாம், தேர்தல் களங்கள்ல பெண்களை வேட்பாளர்களாகப் பார்க்குறதுங்கறது ரொம்பவே அரிது. தயக்கம், பயம், கூச்சம்னு இருப்பாங்க. ஆனா இப்ப அப்படியில்ல’’ என உற்சாகமாகத் தெரிவித்தார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/iuFekAU
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*