சிவகாசி மாநகராட்சி - சில சவால்கள்!
பட்டாசு உற்பத்தியில் உலகில் முதலிடத்திலுள்ள சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது ’குட்டி ஜப்பான்’ என அழைக்கப்படுகிறது ’சிவகாசி’. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள், இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்கின்றன. சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,050 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய அச்சுத்தொழிலும் பிரதானத் தொழில். தீப்பெட்டித் தொழிலும் கணிமான அளவில் நடந்து வருகிறது. சிவகாசியைப் பொறுத்த வரையில் பூர்வீகத்தினரை தவிர பிழைப்பிற்காக வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் கணிசமானோர் இடம் பெயர்ந்து இங்கு வந்தவர்கள்தான் அதிகம்.
சிவகாசியின் மிக முக்கியப் பிரச்னையே போக்குவரத்து நெரிசல்தான். சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையிலும், திருத்தங்கல் - சிவகாசி சாலையிலும் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் ஆகிய சில எக்ஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயில்கள் ரயில்களும் தினமும் வந்து செல்கின்றன. அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கேட் திறந்தபிறகு ஒருவரையொருவர் முந்தியடித்துச் செல்வதால் விபத்துகளும் நடக்கின்றன. இங்கு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
விருதுநகர் மாவட்டத்திலேயே சிவகாசியில்தான் இ.எஸ்.ஐ நிதியின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. ஆனால், சிவகாசியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்திட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இம்மருத்துவமனை மேம்படுத்தப்பட்டால், பட்டாசு ஆலைகளில் எதிர்பாரா வகையில் ஏற்படும் தீ விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களை உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பாமல் இங்கேயே சிகிச்சை அளிக்க முடியும்.
தற்போதைய சிவகாசி பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்மாயில் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீர் கலந்து காணப்பதை தடுப்பதுடன், கண்மாயையும் ஆழப்படுத்த வேண்டும், சாலைகள் விரிவாக்கம், போதிய இட வசதியுடன் பேருந்து நிலையம் என்பதும் இப்பகுதி மக்களின் கோரிக்கை.
சிவகாசியில் மட்டும் மொத்த தொழில் வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை எட்டுகிறது. ஆனால், இன்றும் கட்டமைப்பு வளர்ச்சியில் பின்தங்கியே உள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடக்கும் முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பதால் மேயர் பதவியைக் கைப்பற்றிட தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே பலத்த போட்டி நிலவுகிறது.
திமுக vs அதிமுக:
மொத்தமுள்ள 48 வார்டுகளில் தி.மு.க 32 வார்டுகளிலும், காங்கிரஸ் 12 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டிலும் போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க., 48 வார்டுகளிலுமே போட்டியிடுகிறது. இதன் மேயர் பதவி பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்படலாம் என அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பொதுப்பிரிவு பெண்கள் என ஒதுக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று ஆளும்கட்சி, எதிர்கட்சியினர் ஆரம்பத்தில் குழப்பம் அடைந்தனர். சிவகாசி தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாக அரசன் அசோகன் உள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யாக மாணிக்கம்தாகூர் உள்ளார். இத்தொகுதிக்குட்பட்ட சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளிலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு இருப்பதால் மேயர் பதவியைக் கேட்டு அடம்பிடித்தது காங்கிரஸ். அதே நேரத்தில், மாநாகராட்சி முதல் மேயர் பதவியை விட்டுத்தர முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளதாம் தி.மு.க.
சிவகாசியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் வலுவாக உள்ளது. ஆனால், திருத்தங்கலில் அ.தி.மு.க வலுவாக உள்ளது. திருத்தங்கலில் அதிக எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க தொழில்துறை அமைச்சரும் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்கம் தென்னரசு வியூகம் வகுத்து வருகிறார். அதேபோல சிவகாசியில் அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட அ.தி.மு.க ச்செயலாளருமான ராஜேந்திர பாலாஜி தன் ஆதரவாளர்களை முடுக்கி விட்டுள்ளார். ஸ்வீட் பாக்ஸ்கள் மூலம் வெற்றிகளை குவித்து விடலாம் என நினைக்கிறதாம் ராஜேந்திர பாலாஜி தரப்பு.
தி.மு.கவில் முன்னாள் ஒன்றியச் செயலாளர் சந்திரனின் மகள் சூரியா, சிவகாசி நகர வர்த்தகஅணிச் செயலாளர் இன்பத்தின் மனைவி சங்கீதா மேயர் ஆகியோர் ரேஸில் உள்ளனர்.
அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் தீவிர ஆதரவாளரான திருத்தங்கல் நகராட்சியின் முன்னாள் சேர்மன் பொன் சக்திவேலின் மனைவி அழகுமயில் மட்டுமே முன்னிறுத்தப்பட்டுள்ளார். சிவகாசியில் காங்கிரஸ் வலுவாக உள்ள நிலையில் மேயர் பதவியை தி.மு.க-வுக்கு விட்டுக்கொடுத்ததைப் போல துணைமேயர் பதவியை பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியினர் உறுதியாக இருப்பதால், சிவகாசி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ அரசன் அசோகனின் அண்ணன் மகன் கார்த்திக்கை கதர்சட்டைகள் முன்னிறுத்தியுள்ளது.
அதேநேரத்தில் தி.மு.கவில் சிவகாசி நகராட்சியின் முன்னாள் துணைச்சேர்மன் ஞானசேகரனும் முட்டி மோதுகிறார். அ.தி.மு.கவில் திருத்தங்கல் நகராட்சியின் முன்னாள் சேர்மன் பொன் சக்திவேல், ராஜேந்திரபாலாஜி தனது அக்கா மகன் வசந்தகுமார் ஆகியோரும் துணை மேயர் பதவி கனவில் மிதக்கின்றனர்.
தந்தையின் அரசியல் பலம், பண பலம், ஆளும்கட்சி செல்வாக்கினால், கூட்டணி பலம் என தற்போதைய சூழலில் சூரியாவே மேயர் ரேஸில் முன்னணியில் இருக்கிறாராம். துணை மேயர் பதவியையும் கைப்பற்றிவிட வேண்டும் என தி.மு.க முனைப்புடன் இருப்பதால் துணை மேயர் ரேஸில் ஞானசேகரன் முந்திச் செல்கிறார்!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/hA5dqva
via
