3 தலைமுறை போராட்டம்; முதன்முறையாக வாக்களித்த தூத்துக்குடி நாடோடி பழங்குடிகள்!

0

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாடோடி பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் குடும்பமாக செல்லும் இடங்களிலேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஊசிமணி, பாசி விற்றும், பச்சை குத்தியும், வேட்டையாடுதல் தொழில் செய்தும் பிழைப்பு நடத்துகின்றனர். நாடோடிகளாய் திரியும் இவர்களுக்கு நிரந்தர முகவரியும், இருப்பிடமும் இல்லாததால் அவர்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு என எந்த அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, தமிழகம் முழுவதும் வசித்து வரும் நாடோடி பழங்குடிகளுக்கு அடையாளம் உருவாக்கும் பொருட்டு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அதன்படி தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்த 54 நாடோடி பழங்குடிகள் குடும்பத்தில் தகுதியுள்ள 36 பேருக்கு முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 3 தலைமுறை போராட்டத்துக்குப் பின்பு, அரசால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் அடையாள அட்டை என்பதால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை நாடோடி பழங்குடிகள் குடும்பத்தினர் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.

முதன்முறையாக வாக்களித்த தூத்துக்குடி நாடோடி பழங்குடி!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. முதல்முதலாக வாக்குரிமை பெற்ற நாடோடி பழங்குடிகள் குடும்பத்தினர் 36 பேருக்கும் போல்பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 9.30 மணிக்கு குடும்பமாக வந்திருந்த நாடோடி பழங்குடிகள் சமூகத்தினர் வரிசையில் நின்று தங்களது முதல் வாக்கை பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முதன்முறையாக வாக்களித்த தூத்துக்குடி நாடோடி பழங்குடிகள்!

இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "எங்களுக்கு பல்வேறு உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் முதன்முறையாக வாக்களிக்கும் உரிமையை அரசு அளித்துள்ளது. இதனால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கோம். மூணு தலைமுறையா வாக்குரிமைக்காகப் போராடி வந்தோம். இப்போதான் அந்த உரிமை எங்களுக்கு கிடைச்சிருக்கு. குடியிருக்க அரசு எங்களுக்கு வீடு கட்டித் தரணும்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் 

Umn news Tamil 


via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*