ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட, பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான குழு தற்போது ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் கச்சா எண்ணெய்-எரிவாயு எடுக்கும் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளது எனவும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் கழிவுகளை கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் உள்ளன எனவும் சுல்தான் இஸ்மாயில் குழு கூறியுள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய மிகவும் ஆபத்தான திட்டங்களான மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் போன்ற எண்ணெய்-எரிவாயு திட்டங்கள் காவிரி டெல்டா பகுதிகளை தொடர்ந்நு அச்சுறுத்திக் கொண்டே இருந்தன. இந்நிலையில், இப்பகுதி மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக கடந்த 2020-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாம அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.
ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வரம்புக்குள் முழு காவிரிப்படுகையும் கொண்டுவரப்படவில்லை. மேலும், பழைய எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் நடைபெறுவதை அச்சட்டம் தடுக்கவில்லை. இதுதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தார்கள்.
மேலும் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளையும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பேராபத்துகளில் இருந்து பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வந்தார்கள். இதற்கிடையே அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் கிணறுகள் மற்றும் கடலூர் மாவட்டத்தில் 5 கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கோரிய போது, அதை தமிழ்நாடு அரசு நிராகரித்தது. மேலும் தமிழ்நாடு முழுவதுமே எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி இல்லை என்று அறிவித்தது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும், இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஆராய, பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் ஆய்வுக்குழுவை தமிழக அரசு அமைத்தது.
நீரியல் விரிசல் உள்ளிட்ட எண்ணெய் கிணறு துரப்பண தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், ரசாயன பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள், நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலத்தடி நீரின் அளவு, இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் நிலத்தின் மட்டம் கீழிறங்கி தாழ்ந்து போகுமா? நிலத்தடித் தட்டுகள் இடம்பெயர்ந்து நகருமா? என்ற ஆய்வுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் எவ்வாறு பாதிக்கப்படும்? தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாடு எந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்? என இக்குழுவினர் இன்னும் பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து இக்குழுவினர், தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் நேரடி களஆய்வு செய்து தயாரித்த ஆய்வறிக்கை தமிழக தொழிற்துறை செயலாளரிடம் அளிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் நீர்வளம், நிலவளம் பாதிக்கப்படுவதாகவும் ஒ.என்.ஜி.சி நிறுவனம் கழிவுகளை கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் உள்ளன எனவும் சுல்தான் இஸ்மாயில் குழு கூறியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பாளரும் காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகருமான மருத்துவர் பாரதிச்செல்வன், ``எண்ணெய்-எரிவாயு எடுக்கும் திட்டங்களால் காவிரி டெல்டா மாவட்ட கிராமங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தடி நீரில் ரசாயனத்தன்மை கலந்திருப்பதாகவும் இதனால் இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணெய்-எரிவாயு எடுக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் போராடினார்கள். அப்போது பேச்சுவார்த்தையின்போது, இதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்களோ, ஆய்வறிக்கைகளோ இல்லை என ஒ.என்.ஜி.சி அதிகாரிகள் வாதிட்டார்கள்.
தற்போது சுல்தான் இஸ்மாயில் குழுவினர் அளித்த ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டு, காவிரி டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இயற்கை எரிவாயு-எண்ணெய் எடுக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இங்கு செயல்படுத்தப்பட்டு வரும் பெரும்பாலான கிணறுகளுக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை ஒ.என்.ஜி.சி நிறுவனம் பெறவில்லை.
இது சட்டத்திற்கு புறம்பான செயல். சுல்தான் இஸ்மாயில் குழுவின் அறிக்கையை தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, காவிரி டெல்டா மக்களுக்கு தமிழக அரசு நிரந்தரமான நிம்மதியை நிலைபெற செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/8AFEhHp
via
