`நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலே குறி!’ - போலி மதுபான ஆலைக்கு சீல்... 6 பேரை கைது செய்து போலீஸ் அதிரடி

0

தஞ்சாவூர் அருகே போலி மதுபான ஆலை நடத்தி மது பாட்டில்கள் தயாரித்து வந்ததை தனிப்படை போலீஸ் டீம் கண்டு பிடித்ததுடன், அதில் ஈடுப்பட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அப்போது விற்பனை செய்யவும் டாஸ்மாக் பார்களுக்கு அனுப்பவும் அதிக அளவில் போலி மதுபாட்டில்கள் தயாரித்து வந்ததாக போலீஸ் விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி கிராமத்தில் போலி மதுபானங்கள் தயாரிக்கபடுவதாக எஸ்.பி.ரவளிப்பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்த எஸ்.பி ரவளி பிரியா சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸ் டீம் சோதனை நடத்தியதில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வருவது தெரிய வந்தது.

பின்னர் தனிப்படை போலீஸ் டீம் அந்த இடத்திற்கு சென்றனர். அங்கு மது தயாரித்து கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் போலீஸாரை கண்டதும் தப்பித்து ஓட முயன்றனர். இதையடுத்து அந்த ஆறு பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் மதுபான ஆலையில் சோதனை நடத்தினர். மதுப் பாட்டில்கள், இரண்டு மூட்டையில் மூடி, மதுவினுடைய கம்பெனி பெயரை கொண்ட ஸ்டிக்கர் என ஒரு பெரிய சாராயத் தொழிற்சாலையாகவே அந்த ஆலை செயல்பட்டு வந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

போலிமதுபான ஆலையை கண்டுபிடித்த போலீஸ் டீம்

இதனை தொடர்ந்து மது ஆலை செயல்பட்டு வந்த இடத்தை வல்லம் டிஎஸ்பி பிருந்தா நேரில் பார்வையிட்டார். தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸாரிடம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், ``போலி மதுபான ஆலை நடத்துவதற்காக தஞ்சாவூர் பொட்டுவாச்சாடி வடக்கு தெருவைச் சேர்ந்த மெல்வின் சகாயராஜ்(41) துலுக்கம்பட்டியில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தை, மாத வாடகைக்கு எடுத்து போலி மது தயாரிப்பில் ஈடுப்பட்டு வந்துள்ளார். மெல்வின் தலைமையிலான டீம் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக போலி மதுபானம் தயாரிப்பிலும் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

மெல்வின் சகாயராஜ்

மெல்வின் சகாயராஜ் சிறையில் இருக்கும் போது காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பாபு (42) என்பவன் பழக்கமாகிறான். காரைக்காலில் சாராய வியாபாரத்தில் கொடி கட்டி பறந்து சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட ராமுவின் அக்கா மகன் தான் இந்த பாபு என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது ஒரு கொலை வழக்கும், பல்வேறு மதுகடத்தல் வழக்குகளும் உள்ளது.

இவர்களுடன் சேர்ந்து தஞ்சாவூர் விளார் சாலையைச் சேர்ந்த அறிவழகன்(30), மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டியன்(33), திருவாரூர் மாவட்டம் திருக்கண்ண மங்கையைச் சேர்ந்த முத்துக்குமார் (29), காரைக்கால் அருகேயுள்ள கோவில்பத்து திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பழனியப்பன்(38) ஆகியோர் போலி மது தயாரிப்பில் ஈடுப்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மது தயாரிப்பில் ஈடுப்பட்ட ஆறு பேரையும் கைது செய்தோம். முத்துக்குமார் மீது மூன்று கொலை வழக்குகள் உள்ளது.

காரைக்காலை சேர்ந்த பாபு

மேலும் போலி மதுபான ஆலையில் இருந்து 700 மதுபாட்டில்கள், 2,000 காலி மதுபாட்டில்கள், 2 மூட்டைகளில் மதுபாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் கேன்கள், மதுபானம் தயாரிக்க பயன் படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் போலி மதுபான ஆலைக்கு சீல் வைத்திருக்கிறோம். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும். அதற்காக அதிகள அளவில் மதுப்பாட்டில்கள் தயாரித்ததாகவும், மதுப்பாட்டில்களை டாஸ்மாக் பார்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வந்ததாகவும் தெரிவித்தனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்து வருவதாகவும்” தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/CSge1lt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*