கரூர் மாநகராட்சி 12-வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கிருத்திகாவுக்கு ஆதரவு தெரிவித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில், தி.மு.க ஆதரவுடன் செயல்படுவதாக சொல்லப்படும் சுயேச்சை வேட்பாளர், 'தென்னை மரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்' என்று கும்பலாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நெருங்கிவிட்டதால், கரூர் மாநகராட்சியில் தேர்தல் பிரசாரக் களம் சூடுப்பிடித்துள்ளது. கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. அதில், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டுகளை பிரிக்கும்போதே, தி.மு.க மாவட்டப் பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கும், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிக்கும் பிரச்னை வெடித்தது. தன்னை தி.மு.கவினர் ஒருமையில் திட்டியதாக குற்றம்சாட்டிய ஜோதிமணி, தி.மு.கவினர்களை பார்த்து, 'நான் உங்க வீட்டு விருந்துக்கு வரவில்லை. எனக்கும் ஒருமையில் பேச தெரியும்' என்று பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பிறகு, இரு கட்சி தலைமைகளும் பேசியதால், இந்த பிரச்னை அத்தோடு முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 வார்டுகளில் ஒன்றான 12 வது வார்டுக்கு உட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில், கிருத்திகா என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். ஆனால், அவரை எதிர்த்து தி.மு.க ஆதரவுடன் சுயேச்சையாக மஞ்சுளா பெரியசாமி என்பவர் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது.
Also Read: ``நான் இங்கே விருந்துக்கு வரவில்லை!"... திமுக-வினருக்கு எதிராகக் கொதித்த ஜோதிமணி - நடந்தது என்ன?
இதேபோல், 16 வது வார்டில் காங்கிரஸ் சார்பில் பெரியசாமி என்பவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சுயேச்சையாக, தி.மு.கவைச் சேர்ந்த மாணவர் அணி துணை அமைப்பாளர் பூபதி என்பவர் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் தி.மு.கவின் ஆதரவாளர்களுடன் வாக்கு கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு கூட்டணி கட்சியினர் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லையாம். மேலும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் காங்கிரஸ் கட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, 12-வது வார்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருத்திகா பாலகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிக்க சென்றபோது, அதன் எதிரே அதே பகுதியில், தி.மு.க ஆதரவுடன் செயல்படும் சுயேச்சை வேட்பாளர், 'தென்னை மரச் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்' என்று வாக்கு சேகரித்தார். இரண்டு தரப்பும் ஒரே இடத்தில் கும்பலாக இருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க, அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு, ஜோதிமணி அந்த இடத்தை விட்டு, உடனடியாக வேறு பகுதிக்கு வாக்குகள் சேகரிக்க சென்றார். இந்நிலையில், நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர்,
``காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி வாக்கு சேகரிக்க செல்லுமிடத்தில் எல்லாம், இதேபோல் சுயேச்சை வேட்பாளர்களுக்கு தி.மு.கவினர், ஆதரவு கொடுத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்டுகள் தான் கொடுத்தார்கள். ஜோதிமணியை ஒருமையில் பேசி அவமானப்படுத்தினார்கள். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 2 வார்டுகளில் சுயேச்சைகளை தி.மு.கவினர் நிறுத்தி, அவர்களுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரம் செய்யும்போது, தி.மு.கவினர்களோடு சுயேச்சை வேட்பாளர்கள் சரியாக வந்து வாக்கு சேகரிக்கின்றனர். நாங்கதான் தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள்னு அவங்க வாக்காளர்களிடம் பதிய வைக்க இப்படி முயற்சி பண்றாங்க. இது, செந்தில் பாலாஜிக்கு தெரிந்து நடக்குதா, இல்லை தெரியாமல் நடக்குதான்னே தெரியலை. இதுதான் கூட்டணி தர்மமா?. தி.மு.க, கூட்டணிக் கட்சிகளை மதிக்கும் விதம் இதுதானா?. இந்த இரண்டு வார்டுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்றால், அதற்கு முழுக்காரணம் தி.மு.கவினர் தான்" என்கிறார்கள்.
ஆனால், இதுகுறித்து தி.மு.கவினரிடம் பேசினால், "காங்கிரஸ் கட்சியினர் சொல்லும் அத்தனையும் கட்டுக்கதைகள். சுயேச்சைகளுக்கும், எங்களுக்கும் என்ன சம்பந்தம்?. ஏற்கனவே, எங்கள் மீது ஒருமையாக பேசியதாக குற்றம்சாட்டிய ஜோதிமணி தான், இதுபோல் தவறான தகவல்களை பரப்புகிறார். இதனால், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு தான் பாதிப்பு" என்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3vlRJky
via
