`கோயில் நகரம்’ கும்பகோணம்!
`கோயில் நகரம்’ என பெயர் பெற்ற கும்பகோணத்தில் மாநகராட்சி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளிலும் மேயர் நாற்காலியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. கடைசியாக நகராட்சியாக இருந்த போது அதிமுக வசம் இருந்ததை, தற்போது திமுக கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அக்கட்சியை சேர்ந்தவர்கள் வேகத்தை அதிகப்படுத்தி தேர்தல் வேலை செய்து வருகின்றனர்.
`கோயில் நகரம்’ என அழைக்கப்படும் பாரம்பர்யமிக்க நகரம் கும்பகோணம். சுவாமிமலை ஐம்பொன்சிலை, திருபுவனம் பட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, டிகிரி காபி என புகழ்பெற்ற பொருள்களின் மூலம் பெரிய அளவில் வணிகம் நடைபெற கூடிய பகுதியாகவும் இருந்து வருகிறது. நகராட்சியாக இருந்த கும்பகோணம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு தனது முதல் தேர்தலை சந்திக்கிறது. மொத்தம் 48 வார்டுகளை கொண்ட கும்பகோணம் மாநகராட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளிடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
கும்பகோணம் மாநகராட்சி சவால்கள்!
அதிமுகவை சேர்ந்த தொழில் அதிபரான பி.ஏ.சேகரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே கடந்த இரண்டு முறை நகர்மன்றத் தலைவராக இருந்தனர். `இவர்கள் பதவி வகித்த காலத்தில் பெரிய மகாமகம் நடைபெற்றது. அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவு செய்யப்படவில்லை, பெருமளவில் ஊழல் நடைபெற்றது. அதனால் நகரத்தின் எந்த கட்டமைப்பு வசதிகளும் மேம்படவே இல்லை’ என குற்றச்சாட்டு பொதுமக்கள் தரப்பில் அழுத்தமாக வைக்கப்படுகிறது.
``நிதி வருவதற்கான வழியை உண்டாக்காமல், போதிய வருமானம் இல்லாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சில சமயம் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையும் ஏற்படுகிறது” என அதன் ஊழியர்களே புலம்புவதை கேட்க முடிகிறது.
``நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கலையரங்கம், பழைய பேருந்து நிலைய இடம் போன்றவை தனி நபர் ஆதாயம் அடைகின்ற வகையில் சொற்ப வாடகைக்கு தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதனால் மாநகராட்சிக்கு வரக்கூடிய வருமானம் தடுக்கப்படுகிறது. புதிதாக மேயர் பொறுப்புக்கு வருபவர்கள் முதல் வேலையாக அந்த இடங்களை மீட்டு மாநகராட்சியே நேரடியாக வாடகைக்கு விட்டால் வருமானம் பெருகும்... நிதி நெருக்கடியிலிருந்தும் தப்பிக்கலாம்” என்கின்றனர்.
மகாமகம் போன்ற கூட்டம் கூடுகிற நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும் பகுதியில், பார்க்கிங் வசதி ஏதும் இல்லை. போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மழை நீர் வடிகால்கள் தூர்வாரப்படாததால் மழை நேரங்களில் வெள்ளத்தில் மிதக்கின்ற நிலை ஏற்படுகிறது. குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலைகள் உடைக்கப்பட்டன. அந்த பணிகளை தரமான முறையில் செய்யாததால் குடிநீர், கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குண்டும் குழியுமான சாலைகளையும் சரி செய்வதில்லை. சுற்றுலா மற்றும் வணிக நகரமாக இருப்பதால் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து செல்கின்றனர். அதனை எதிர்கொள்ளக் கூடிய கட்டமைப்பு வசதி ஏற்படுத்தாதது பெரும் குறை. முதல் மேயராக பொறுப்பேற்பவர்களுக்கு இதனை சரி செய்யக்கூடிய சவால்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
திமுக கூட்டணி!
திமுக சார்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவரான சு.ப.தமிழழகன், கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான குட்டி என்கிற தெட்சினாமூர்த்தி ஆகியோர் இடையே மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.
தமிழழகன் எளிமையானவர். கோஷ்டி அரசியல் செய்யாதவர், முதலமைச்சர் ஸ்டாலினிடம் நேரடி தொடர்பில் இருப்பவர் என்பது இவருக்கான பிளஸ். தேர்தலுக்கு பெரிய அளவு செலவு செய்யாதது இவருடைய மைனஸாக இருப்பதுடன் அவரின் ஆதரவாளர்களையும் களத்தில் சோர்வடைய செய்துள்ளதாம்.
அசோக்குமாரின் மனைவி காயத்திரி கும்பகோணம் யூனியன் சேர்மனாக இருக்கிறார். மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்பதற்காக ஊராட்சி பகுதியில் இருந்த தனது ஓட்டை தாராசுரத்திற்கு மாற்றிக்கொண்டு வந்தார். இதனை அதிமுகவினர் பிரச்னையாக கிளப்பினர். ஆனாலும் அதிகாரிகளை சரிகட்டி பிரச்னை எழாத வகையில் கவனித்து கொண்டாராம். இவர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரத்தின் தீவிரமான ஆதரவாளர்.
நான் தான் முதல் மேயர் என்கிற ரேஞ்சில் அசோக்குமார் வலம் வருகிறார். அதிமுகவில் இருந்து வந்தவர், மனைவி சேர்மனாக இருக்கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எப்படி இரண்டு பெரிய பதவிகளை தர முடியும் என்கிற ரீதியிலான கருத்துக்களை எதிர் தரப்பினர் கிளப்பி வருகின்றனர்.
தெட்சினாமூர்த்தி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் ஆதரவாளர். கட்சி பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செய்யக்கூடியவர். கொஞ்சம் அடவடியான ஆள் என்ற பெயரும் உள்ளது. இளைஞரணிக்கு முக்கித்துவம் கிடைப்பதை வைத்து மேயர் ரேஸில் முந்தி விடலாம் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார். மேலும் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் தன்னுடைய விசுவாசிகளான யாருக்காவது மேயர் வாங்கி கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக
அதிமுக சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவரான ராஜ.நடராஜன், தாராசுரம் கூட்டுறவு சொஸைட்டி தலைவர் குமரேசன், தாராசுரம் பேரூராட்சி செயலாளர் கோ.வி.கேசவன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கம் ஆசி யாருக்கு கிடைக்குதோ அவங்களே மேயர் என்கிறார்கள். அந்த வகையில் ராஜ. நடராஜனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. துரைக்கண்ணு மறைந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அவருடைய மகன் துரை.அய்யப்பனுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பண பலம் கொண்ட பி.ஏ.சேகர், அய்யப்பன் இருவருமே தேர்தலை கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விட்டனர்.
வைத்திலிங்கமும் வேட்பாளர்களே தங்கள் செலவை கவனித்து கொள்ள வேண்டும் என கூறிவிட்டார். இதனால் வேட்பாளர்க ளிடையே சுணக்கம் நிலவுவதாக சொல்லப்படுகிறது. கோஷ்டி பூசலும் உச்சத்தில் இருக்கிறது. பல நிர்வாகிகள் மேடையிலேயே வெளிப்படையாக மோதிக்கொள்கின்றனர். இதில் முறையாக கவனம் செலுத்தி வைத்திலிங்கம் தடுக்க வில்லை என்ற குறையும் இருக்கிறது. இது போன்ற காரணங்களால் கும்பகோணத்தில் அதிமுக சற்று பலவீனமாகவே காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
மேலும் பாஜக-வும் தன் பங்கிற்கு வாக்குகளை பிரிப்பது, திமுக-வுக்கு சாதகமாக இருப்பதுடன் திமுக வெற்றி பெறுவதும் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அக்கட்சியை சேர்ந்த சுப.தமிழழகன் மேயராக பதவியேற்பதற்கான ரேஸில் சற்று முந்தி நிற்பதாகவும் உள்ளூர் அரசியலை நன்கு கவனிப்பவர்கள் கூறுகின்றனர். மக்களின் முடிவு என்ன என்பது வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முழுமையாக தெரிய வரும்!
Also Read: உள்ளாட்சி ரேஸ்: `தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள் மோதும் களம்!’ - கோவை மாநகர் யாருக்கு?
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Uc2QF0P
via
