தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். இந்த நிலையில், கும்பகோணம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஏன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் இயக்கத்தின் செயலாளருமான சுவாமிமலை சுந்தர.விமலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர், ``நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம் மாநகராட்சி உட்பட இரண்டு மாநகராட்சிகளுக்கும், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளுக்கும் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தபோதே பிரமாணப் பத்திரங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
ஆனால், கும்பகோணம் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்கள் மட்டும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதற்கு கும்பகோணம் மாநகராட்சித் தேர்தல் பிரிவு அலுவலர்கள்தான் பொறுப்பு. இதனால் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை பொதுமக்கள் பார்வையிட முடியாத சூழல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு முரணானது.
வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரங்களில் என்னென்ன சொத்து விவரங்களை தெரிவித்திருக்கிறார்கள் என அறிந்துகொள்ள முடியவில்லை. தேர்தலுக்கு முன்பு சாதாரண இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், தேர்தலில் வெற்றிபெற்று பதவியைப் பிடித்த பிறகு, சொகுசு கார்களில் வலம்வருகிறார்கள். இன்னும் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவிக்கிறார்கள். வேட்பாளர்களின் சொத்து விவரங்களைத் தேர்தலுக்கு முன்பே வெளியிட்டால், இவர்கள் பதவிக்கு வந்த பிறகு இவர்களது வருமானம் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்க வாய்ப்பாக இருக்கும். ஊழலைக் கண்டுபிடிக்க ஓரளவுக்கு உதவியாக இருக்கும்.
எனவே வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை உடனடியாக பதிவேற்றம் செய்வதென்பது, மிகவும் அவசியமானது. சட்டப்பூர்வமான கடமை. ஆனால், கும்பகோணம் மாநகராட்சித் தேர்தல் அலுவலர்கள் இதை மீறியுள்ளார்கள். ஏன் இதுவரை பதிவேற்றம் செய்யவில்லை என்பதைக் கண்டறிந்து, இதற்குப் பொறுப்பான அதிகாரிகள்மீது மாநிலத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக, பிரமாணப் பத்திரங்களைப் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Also Read: `பலகோடி ரூபாய் வீட்டுமனை; போலி பிரமாண பத்திரம்!' - சிக்கலில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ
from மாவட்ட செய்திகள் https://ift.tt/CyO0Vde
via
