துரைமுருகன் `மிரட்டல்’ பிரசாரம்; மௌனம் சாதிக்கும் கே.சி.வீரமணி! -கலக்கத்தில் அதிமுக வேட்பாளர்கள்

0

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவரும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், நகைச்சுவைக் கதைகளைச் சொல்லி அனைவரையும் சிரிக்க வைக்கிறார். அவரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார். அதே சமயம், பரப்புரையின்போது எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு துரைமுருகன் பகிரங்கமாக மிரட்டல் விடுப்பதும் பரபரப்பைக் கிளப்புகிறது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், அமைச்சர் துரைமுருகன், பிப்ரவரி 13-ம் தேதி பேரணாம்பட்டில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பேசும்போது, சுயேச்சைகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்து அலற வைத்ததாகவும் கூறப்படுகிறது.

துரைமுருகன்

பேரணாம்பட்டில் பேசிய அவர், ``துரைமுருகன் சொல்கிறேன். எழுதி வெச்சுக்கோங்க. ஜி.எஸ்.டி வரி செலுத்தாமல் ஏமாற்றியதுடன் தி.மு.க-வுக்குத் தொந்தரவாக சிலர் களமிறங்கியிருக்கிறீங்க. 22-ம் தேதிக்குப் பிறகு, நகரச் செயலாளர் கொடுக்கும் லிஸ்ட்டை வைத்து, நீங்களெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பீங்க. ஒரு ரூபாய் ஜி.எஸ்.டி ஏமாற்றியிருந்தாலும் தொரப்பாடிக்கு கொண்டுப்போயிடுவோம். அங்கதான் மத்திய சிறைச்சாலை இருக்கிறது. எவன் எங்க ஓடினாலும் விடமாட்டோம். நீங்களெல்லாம் ஜெயிச்சு என்ன பண்ணப் போறீங்க.

நாங்கதான் ஆளுங்கட்சி. தி.மு.க-காரனிடம் வெச்சுக்காதே’’ என்று மிரட்டும் தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. அதுதொடர்பான காணொளியும் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது.

அதைத்தொடர்ந்து... பிப்ரவரி 14-ம் தேதி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து, துரைமுருகன் பேசினார். அங்கேயும் துரைமுருகன் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் சர்ச்சையைக் கிளம்பியது.

வாணியம்பாடியில் பேசும்போது, ‘‘நாங்கள் கொண்டு வருகிற திட்டங்கள் உங்களுக்கு வந்து சேர வேண்டுமெனில், எங்கள் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். அப்போதுதான் வாணியம்பாடி சிறக்கும். ஏதோ தவறான எண்ணத்தில் சிலரைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு வாணியம்பாடி நகரம் புறக்கணிக்கப்படும் என்று எச்சரிக்கைச் செய்கிறேன்’’ என்று அவர் பேசும் காணொளியும் வெளியாகி, பரபரப்பை மேலும் கூட்டியிருக்கிறது.

கே.சி.வீரமணி

அதிமுக சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்பி இருக்கிறார். அதில் வாணியம்பாடியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதும், திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைச்சர் கே.என் நேரு பேசியது ஆகியவற்றை குறிப்பிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

துரைமுருகனின் மிரட்டலான தொடர் பேச்சுக்கு அ.தி.மு.க தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். ஆனால், அ.தி.மு.க ஆட்சியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியோ, துரைமுருகன் பேச்சுக்கு எந்த விதமான பதிலடியும் கொடுக்கவில்லை. இதனால், துரைமுருகனின் மிரட்டலுக்கு அடிபணிய வேண்டிய தர்ம சங்கடம் ஏற்பட்டிருப்பதாகவும் குமுறுகிறார்கள் அ.தி.மு.க வேட்பாளர்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/aO124Dz
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*