வேலூர் ஓட்டேரி சிவில் சப்ளை குடோன் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். 41 வயதாகும் இந்த நபர் சுமைத்தூக்கும் வேலைச் செய்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி ஒருவருக்கு செல்வகுமார் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ‘இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது; வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன்’ எனவும் அவர் மிரட்டியிருக்கிறார். இதனால், பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்த பாதிப்புக் குறித்து யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். இந்த நிலையில், மாணவி படித்து வரும் பள்ளியில், சமீபத்தில் காவல்துறைச் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய போலீஸார், குட் டச்... பேட் டச் குறித்தும் காவலன் செயலி மற்றும் சைல்டு லைன் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
‘‘யாராவது பின்தொடர்ந்து வந்தாலும், பாலியல் தொல்லைக் கொடுத்தாலும் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்றும் தெரிவித்தனர். அதனைக் கேட்டுகொண்டிருந்த 6-ம் வகுப்பு மாணவி, வீடு திரும்பியவுடன் செல்வகுமார் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பெற்றோரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/DuNEKtQ
via
