கும்பகோணம் பட்டறையில் தொன்மையான நடராஜர் சிலை பறிமுதல்! -சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி

0

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் சாமி சிலைகள் வடிக்கும் பட்டறை ஒன்றில் 5 அடி உயரம் கொண்ட தொன்மையான நடராஜர் சிலையினை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த சிலை எந்த கோயிலுக்கு சொந்தமானது, அதன் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொன்மையான நடராஜர் சிலை

கும்பகோணம், சுவாமிமலை அருகே உள்ள டி.மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சிலை வடிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். சதீஷ்குமார் தன் பட்டறையில் தொன்மையான சாமி சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில், துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்ட போலீஸார் சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்த நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற்றனர்.

இதையடுத்து சதீஷ்குமாரின் பட்டறையில் சோதனை நடத்தினர். இதில் சுமார் 5 அடி உயரம், 4 அடி அகலம் கொண்ட ஐம்பென்னால் செய்யப்பட்ட தொன்மையான நடராஜர் சிலை பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் சதீஷ்குமாரிடம் நடராஜர் சிலை குறித்து ஆவணங்கள் எதுவும் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிலைக்கு உரிய முறையான எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.

சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி நடராஜர் சிலையுடன்

இதையடுத்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் தொன்மையான நடராஜர் சிலையை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் சாமி சிலைகள் வடிப்பவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பதுக்கி வைக்கப்பட்டிருந்த நடராஜர் சிலை மீட்ட சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் டீமை காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு, சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் இயக்குநர் ஜெயந்த் முரளி ஆகியோர் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில்,சிலை வடிக்கும் பட்டறையில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் அந்த பட்டறையில் சோதனை நடத்தியதுடன் மிகவும் தொன்மையான நடராஜர் சிலையினை பறிமுதல் செய்தோம்.

நடராஜர் சிலை

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுவதுடன் அந்த சிலைய்டினை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம்.மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் சிலை தமிழகத்தில் உள்ள ஏதேனும் கோயிலுக்கு சொந்தமானதா என்றும் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதும் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/XLAirw1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*