தாலிக்குத் தங்கம் திட்டத்தில் நடந்த முறைகேடுகள்?! - ஆர்.டி.ஐ ஆர்வலர் சொல்லும் தகவல் என்ன?

0

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில் முவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, 10-ம் வகுப்பு வரை படித்துள்ள பெண்ணின் திருமணத்துக்கு உதவித் தொகையாக 25,000 ரூபாய் பணமும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது.

அதே போல, பட்டப் படிப்பு முடித்த பெண்களுடைய திருமண உதவித் தொகைக்கு 50,000 ரூபாய் உதவித் தொகையும் திருமாங்கல்யம் செய்வதற்காக 8 கிராம் நகையும் வழங்கப்பட்டது. ஆனால், ’தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்’ என அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தை நிறுத்துவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது,.

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு உதவும் வகையில் இருந்த திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசுகையில், “தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்குவதில் முறைகேடு என 43 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தத் திட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடுகளை இதற்கு மேல் கூறி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை” என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினரிடம் வழக்கம் போல எதிர்ப்பும் ஆதரவும் நிலவுகிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சி கொண்டு வந்த திட்டம் என்பதற்காக இந்தத் திட்டம் முடக்கப்படுவதாக அ.தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க ஆதரவுக் கட்சியினரோ,அரசின் முடிவை ஆதரித்துப் பேசிவருகிறார்கள்.

திருமண உதவித் திட்டத்தில் குழறுபடிகள் நடந்திருப்பதால் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்குப் பதிலாக, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயனடைந்தவர்கள் குறித்த தகவல்களை நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள நிலையை அறியும் வகையில் அவர் கேட்டிருந்த நிலையில், சில மாவட்டங்களின் சமூக நலத்துறை அதிகாரிகள் அதற்காக தகவல்களை அளிக்கவில்லை தகவல் அளித்த மாவட்டங்களின்மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் இந்தத் திட்டத்தில் பல்வேறு குழறுபடிகள் நடந்திருக்கும் வாய்ப்பைப் புரிந்து கொள்ள முடிவதாக வழக்கறிஞர் பிரம்மா தெரிவித்தார்.

இது தொடர்பாகப் பேசிய பிரம்மா, ``தமிழகத்தில் 29 மாவட்டங்களில் இருந்து தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்ட தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி மொத்தம் 8,70,478 பேர் பயனடைந்திருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்படி, கடந்த 10 வருடங்களில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 80,912 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர் பிரம்மா

இந்தத் திட்டத்தில் மிகவும் குறைவாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஏழைப்பெண்கள் பயனடைந்திருக்கிறார்கள். அதன்படி 10 வருடங்களில் 13,674 பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் ஒரு பயனாளி கூட திருமண உதவித் தொகை பெறவில்லை என தகவல் கொடுத்திருக்கிறார்கள். அப்படியானால் அந்த வருடத்தில் தாலிக்குத் தங்கம் பெறத் தகுதியான ஒருவருக்குக் கூடவா திருமணம் நடக்கவில்லை என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

எத்தனை பேருக்கு உதவித் தொகை மற்றும் தங்க நாணயம் வழங்கியிருக்கிறோம் என எல்லா மாவட்டங்களிலும் இருந்தும் தகவல் கொடுத்திருக்கிறார்களே தவிர, பயனாளர்கள் குறித்த முழு விவரங்களையும் எந்த மாவட்டத்திலும் இருந்தும் தெரிவிக்கவில்லை.

நெல்லை மாவட்ட புள்ளி விவரம்

விசரணை நடத்தப்பட வேண்டும்!

தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தில் மோசடி அதிகமாக நடந்திருக்கிறது. அதன் காரணமாகவே முதல்வர்,ஸ்டாலின், “இதற்கு மேல் கூறி இந்தத் திட்டத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை’ எனறு பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார்.

ஆனால், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது. திட்டத்துக்குத் தகுதியில்லாத பலருக்கு பணமும் தங்கமும் கொடுக்கப்பட்டிருக்கு. அதிகாரிகள் சிலரும் இதற்குத் துணை போயிருக்கிறார்கள். அதனால் இது குறித்து உரிய விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்” என்றார்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் இந்த முடிவால், மாநிலம் முழுவதும் உயர் கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்திய அளவில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ள நிலையில், அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்பதால் அரசு கூடுதலாக புதிய கல்லூரிகளைத் தொடங்கி மாணவிகளின் உயர் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/f2M1lZB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*