20 வயதான அந்தப் பெண்ணை அரிதான நோய் தாக்கியிருந்தது. இதனால் 20 வயதிலேயே 45 வயதைப் போன்ற தோற்றத்தை பெற்றிருந்தார். மிகவும் வேதனையடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு சென்றுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு, பாரி ரோம்பெர்க் சிண்ட்ரோம் (Parry Romberg syndrome) என்ற அரிதான வகை நோய் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், “இது ஓர் அரிதான தன்னெதிர்ப்பு நோய். முகத்தில் ஒரு பக்கம் மட்டும் தசைகள் சுருங்கியும், தோலில் சுருக்கங்களுடனும், கொழுப்பு திசு அறவே நீங்கியும் வயதான தோற்றம் கொண்டிருப்பார்கள். சில நேரம் புருவத்தில் முடி உதிர்வு கூட ஏற்படும்.
இந்தப் பெண்ணுக்கும் கூட ஒரு புருவத்தில் முடி இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அவருக்கு கொழுப்பை முகத்தில் செலுத்தும் சிகிச்சை (Fat grafting ) மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை (hair transplantation) செய்யப்பட்டது.
அதாவது நம் உடலில் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பான திசுக்களை உறிஞ்சி எடுத்து முகத்தில் செலுத்தியும், பின் தலையில் உள்ள முடி வேர்களை தனியாகப் பிரித்து எடுத்து தேவையான இடத்தில் ஒட்ட வைக்கும் அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்த பின் இப்போது புதுமையான தோற்றப் பொலிவோடு இந்த பெண் தன்னம்பிக்கையாக உள்ளார். இந்த இரண்டு அறுவை சிகிச்சையும் தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் செலவாகியிருக்கும்” என்றனர்.
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவர்களுக்கு, பல்வேறு இடங்களில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/PnSihgp
via
