திருவாரூர் விநாயகர் சிலை திருட்டு வழக்கு... ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்!

0

திருவாரூர் அருகே பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றில் விநாயகர் சிலை திருடப்பட்ட வழக்கில், சிலை திருட்டில் ஈடுப்பட்ட முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருந்து போலீஸாருக்கு தண்ணி காட்டி வந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அந்த குற்றவாளியை கைது செய்தனர்.

கைது

திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி அருகே உள்ள பூங்குடிமூலை கிராமத்தில், பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒன்றரை அடி உயரம் கொண்ட உலோக விநாயகர் சிலை இருந்தது. விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழா நாள்களில் உற்சவரான உலோக விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறப்புமிக்க அந்த விநாயகர் சிலை திருட்டு போனது. இது தொடர்பாக எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலை திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள் என சிலர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள சிறுபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான அகிலன்(எ)தங்கவேல் என்பவன் மட்டும் தலைமறைவாக இருந்து போலீஸாருக்கு தண்ணி காட்டி வந்தார்.

சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட அகிலன்

அகிலனை போலீஸார் பல வகையில் தேடியும் அவன் சிக்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிலைதிருட்டு வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய சிலைதிருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த்முரளி, காவல்துறை தலைவர் தினகரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

அதன்படி கும்பகோணம் சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அகிலன் குறித்து நடத்திய தீவிர விசாரணையில் அவர் பேரளம் அருகிலுள்ள கொல்லுமாங்குடியில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் இந்திரா தலைமையிலான தனிப்படையினர், விநாயகர் சிலை திருட்டில் ஆறு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான அகிலனை கைது செய்தனர்.

அப்போது, ``போலீஸார் என்னை பிடித்து விடாத அளவிற்கு எச்சரிக்கையுடன் இருந்தேன். ஆனால் எப்படியோ என்னை கைது செய்து விட்டனர்” என பேசியிருக்கிறார். கைது செய்யப்பட்ட அகிலன் திருவாரூர் மாவட்டத்தின் மேலும் ஒரு சிலைதிருட்டு வழக்கில் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அகிலனை ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/cm1nNqB
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*