ரயில்கள் நிற்காததைக் கண்டித்து `மெகா அன்னதானம்’ - அரசின் கவனம் ஈர்க்க நூதன போராட்டம்!

0

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதுமே பெரும் பெரும் இழப்புகளை ஏற்படுத்திச் சென்றது. கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, கொரோனா தொற்று பரவல் குறையவே ரயில் சேவையானது கொஞ்சம், கொஞ்சமாக தொடங்கியது. ரயில் சேவை தொடங்கினாலும், சில நிறுத்தங்களில் ரயில் நிற்காமல் சென்று வந்தது. தற்போது, அந்த கட்டுப்பாடுகளும் தளர்ந்துவிட்டது. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் நிறுத்தத்தில் நின்று சென்ற ரயில்கள் அனைத்தும் தற்போது நிற்காமல் சென்று வருகிறது.

இதனால், இப்பகுதி பயணிகள் சேவை மற்றும் வர்த்தக சேவையானது கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, கீரனூர் நிறுத்தத்தில் ரயில்கள் நின்று செல்ல வலியுறுத்தி இப்பகுதியைச் சேர்ந்த அறவழி குழுவானது போராடி வருகிறது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அறவழிக் குழுவானது, கீரனூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நிற்க வலியுறுத்தி, நூதன முறையில் அறுசுவை அன்னதானத்தை நடத்தி அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த அன்னதானத்தில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு உணவு அருந்தினர்.

இதுகுறித்து, அறவழிக்குழுவினரிடம் கேட்டபோது, ``நாடு முழுவதுமே கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பேருந்து, ரயில் என வழக்கமான சேவைகள் அனைத்தும் இயங்கிக்கிட்டு இருக்கு.. ஆனா, எங்க பகுதியில மட்டும்,ரயில் சேவையை அதிகாரிகள் நிறுத்தி வச்சிருக்காங்க. கேள்வி கேட்டால், உரிய பதிலை அதிகாரிங்க சொல்ல மறுக்குறாங்க. கீரனூர்ல ரயிலை நிறுத்த வைக்க ஒரு வருஷத்துக்கும் மேலா அறவழியில போராடுறோம். ரயில்வேதுறைக்கு கடிதம், துறையோட மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்கிட்ட மனுன்னு ஏகப்பட்ட அறவழிப்போராட்டங்கள் பண்ணிப் பார்த்திட்டோம்.

அவங்களோட கவனத்தை ஈர்க்க முடியலை. நீதிமன்றம், தாலுக்கா அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம், 4 உயர்நிலைப்பள்ளிகள், வரலாற்று சிறப்புமிக்க சிவாலயம், தேவாலயம், பள்ளிவாசல் என இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கீரனூர் பகுதிக்கு ஒரு ரயில் கூட நிற்காமல் செல்வது வேதனையளிக்கிறது. இந்த நிலையில தான், அன்னதானம்ங்கிற நூதன போராட்டத்துல ஈடுபட்டிருக்கோம். ரயில் கீரனூர் நிறுத்தத்துல நிற்கிற வரைக்கும் எங்களோட போராட்டம் தொடரும்" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bzL0yQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*