குமரி: அரசுப்பள்ளியில் ஆசிரியர் மதமாற்றம் செய்வதாக மாணவிகள் புகார்! - அதிகாரிகள் தீவிர விசாரணை

0

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அமைந்துள்ளது கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் தையல் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம் என்பவர் ஆறாம் வகுப்பு மாணவிகளிடம் மதமாற்றம் செய்யும் விதமாக தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தையல் தைக்கும் போது ஒரு மதத்தை சார்ந்த சின்னத்தை முதலில் தைத்தபிறகே வேலை தொடங்க வேண்டும் எனவும் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசல்புரசலாக தகவல் வெளியாகவே இரணியல் காவல் நிலைய போலீஸார் நேற்று கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒரு மாணவி போலீஸாரிடம் கூறும்போது, "தையல் வகுப்பு எடுக்கும் ஆசிரியை பைபிள்தான் நல்ல புத்தகம், பகவத்கீதை கெட்டது என சொல்லுகிறார். மேலும் கதை எல்லாம் சொல்லித்தந்தாங்க.

ஸ்கூலுக்குள் மதமாற்றம் புகார் சம்பந்தமாக போலீஸ் விசாரணை

ஒரு கிறிஸ்டீனும், சாத்தானும் பைக்கில போய்கிட்டு இருந்தாங்களாம். இந்துவ சாத்தான்னு சொல்லுறாங்க. அப்போது திடீரென ஆக்ஸிடண்ட் நடந்துச்சாம். அப்ப ஒருத்தர் பைபிள் படிச்சுகிட்டு இருந்ததுனால இறந்தவங்க உயிர்பிழைச்சுட்டாங்களாம். துணி தச்சு தந்தாலும் பிளஸ் சிம்பல்தான் தச்சுதருவாங்க. மதியம் சாப்பிட்டதுக்கு அப்புறம் கையை கோர்த்து, முட்டிபோட்டு பிரேயர் பண்ணணும்னு சொன்னாங்க. அப்புறம் சாப்பிடதுக்கு பிறகு பிரேயர் பண்ண கூப்பிட்டாங்க. கிறிஸ்தவ பிள்ளைங்க மட்டும் போனாங்க, நாங்க போகல" என அந்த மாணவி கூறினார்.

அரசுப்பள்ளியில் மதமாற்றம் செய்வதுபற்றி போலீஸார் விசாரணை நடத்துவதாக தகவல் பரவியதை அடுத்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இன்று இந்து அமைப்பினர் இரணியல் காவல்நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேச கண்ணாட்டுவிளை பள்ளி தலைமை ஆசிரியர் பெர்லினை தொடர்பு கொண்டபோது, ரயில் பயணத்தில் இருப்பதாகவும் பின்னர் அழைப்பதாகவும் சொன்னார். பின்னர் அழைத்த போது அவர் போனை எடுக்கவில்லை.

கண்ணாட்டுவிளை அரசுப்பள்ளி

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி கூறுகையில், "கண்ணாட்டுவிளை பள்ளியில் நடந்தது சம்பந்தமான தக்கலை டி.இ.ஓ எம்பெருமாள் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த மாணவி வீடியோ ஏற்கனவே வெளியாகியுள்ளதால் சஸ்பெண்டுக்கு பிறகு தொடர் விசாரணை நடத்தப்படும்" என்றார். ஏற்கனவே மாணவி லாவண்யா விவகாரத்தை பா.ஜ.க கையில் எடுத்தது போன்று கண்ணாட்டுவிளை அரசுப்பள்ளி மாணவி விவகாரத்தையும் கையில் எடுத்து போராட இந்து அமைப்புகள் தயாராகி வருகிறதாம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/jSdXpBt
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*