திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ரகுராமன் வீட்டில் கடந்த மார்ச் 4-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் அன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கிளம்பிய தகவல், அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது தொடர்பாக தற்போது அனல் பறக்கும் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. தன் வீட்டில் குண்டு வீசி விட்டதாக அவரே நாடகம் நடத்தியதாகவும், இந்த உண்மை தெரியவந்ததால் சி.பி.எம் தலைமை அவர் மீது தற்போது நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் திருத்துறைப்பூண்டி தி.மு.க-வினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள்.
திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவராக தி.மு.க நகரச் செயலாளரும், 5-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.எஸ்.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்தப் பகுதி தி.மு.க-வினர் மத்தியில் பரவலாகப் பேச்சு நிலவியது. ஆனால், தி.மு.க தலைமை அந்தப் பதவியைத் தனது கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்தது. இதனால் தி.மு.க-வினர் மத்தியில் கடும் அதிருப்தி உருவானது. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், துணைத் தலைவர் பதவியை அந்தக் கட்சிக்குக் கொடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளராக இருந்த ரகுராமனின் மனைவியும், 11-வது வார்டு கவுன்சிலருமான ராமலோக ஈஸ்வரி, நகர்மன்றத் துணைத் தலைவர் வேட்பாளராக அந்தக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான், மறைமுகத் தேர்தல் அன்று அதிகாலை திருத்துறைப்பூண்டி ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள ரகுராமன் -ராமலோக ஈஸ்வரி வீட்டின் காம்பவுண்ட் சுவர்மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாகத் தகவல் கிளம்பி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காம்பவுண்ட் சுவரில் தீப்பற்றி எரிந்த நிலையிலிருந்தது. அதேசமயம் வேறு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். ஆனால், அதில் தொடர்புடைய நபர்கள் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
துணைத் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க மனம் இல்லாத தி.மு.க நகரச்செயலாளர் ஆ.எஸ்.பாண்டியன்தான், தங்களை அச்சுறுத்த மர்ம நபர்கள் மூலம் பெட்ரோல் குண்டு வீசியதாக, சி.பி.எம் கட்சியின் ரகுராமன் தரப்பினர் குற்றம்சாட்டினார்கள். ஆனால், தங்களுக்கு இதில் சம்பந்தமில்லை எனவும், இது திட்டமிட்ட நாடகம் என தி.மு.க-வினர் மறுத்து வந்தார்கள். இந்த நிலையில்தான், சி.பி.எம் தலைமை ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் உண்மை தெரியவந்ததால் நகரச் செயலாளர் பதவியிலிருந்து ரகுராமன் மாற்றப்பட்டதோடு, நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை அவர் மனைவிக்கு வழங்காமல், மற்றொரு சிபி.எம் கவுன்சிலருக்கு வழங்கியுள்ளதாகவும் இந்தப் பகுதி தி.மு.க-வினர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நகரச்செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், ``நான் பெட்ரோல் குண்டு வீசிட்டதா, ரகுராமனோட ஆதரவாளர்கள் வாட்ஸ் அப்ல தவறான தகவல் பரப்பினாங்க. அதனால் நான்பட்ட அவமானம் கொஞ்சநஞ்சமல்ல. நிறைய பேர் என்கிட்ட போன் பன்ணி விசாரிச்சாங்க. ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளானேன்.
எனக்கு கெட்டப் பேரை ஏற்படுத்தி, முடக்கி வைக்கத் தான் அந்த நாடகத்தை நடத்தினாங்க. ஆனால் இப்ப உண்மை வெளிச்சத்துக்கு வந்துடுச்சி" என்றார்.
திருத்துறைப்பூண்டி தி.மு.க வழக்கறிஞர் கார்த்தி நம்மிடம் பேசுகையில், ``பெட்ரோல் குண்டு வீசியிருந்தா, பாட்டில் சிதறிக் கிடந்திருக்கும். ஆனால் அது மாதிரி அங்க எதுவும் இல்லை. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செஞ்சு பார்த்தப்ப, சம்பவம் நடந்த நேரத்துல வெளிநபர்கள் யாரும் அங்க வரவே இல்லை. ரகுராமனே நெருப்பை பத்த வச்சி, அதை வீடியோ எடுத்திருக்கார். இந்த உண்மைகள் தெரிஞ்சதுனாலதான், சி.பி.எம் தலைமை ரகுராமனை நகரச் செயலாளர் பதவியிலிருந்து எடுத்துட்டாங்க. நகர்மன்றத் துணைத் தலைவர் பதவியை, ரகுராமனோட மனைவிக்கு வழங்காமல், ஜெயபிரகாஷ்ங்கற வேறொரு கவுன்சிலருக்கு கொடுத்துட்டாங்க. காவல்துறை விசரணையை துரிதப்படுத்தி, ரகுராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கணும்னு வலியுறுத்தி, நீதிமன்றத்துல வழக்கு தொடரப் போறோம்’’ என்றார்.
தி.மு.க-வினரின் இந்தக் குற்றசாட்டு குறித்து ரகுராமனிடம் பேசினோம். ``நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் பதவிகள், கடந்த பல வருடங்களாக ஆர்.எஸ் பாண்டியன் குடும்பத்தினர்கிட்டதான் இருந்துக்கிட்டு இருக்கு. என் மனைவி துணைத் தலைவரா தேர்ந்தெடுப்படக்கூடிய சூழல் உருவானதை அவரால் பொறுத்துக்க முடியலை. தி.மு.க கவுன்சிலர்கள் எங்களுக்கு வாக்களிக்கமாட்டங்கனு தெரிஞ்சதுனாலதான், அந்தப் பதவிக்கு போட்டியிடாமல் ஒதுங்கிட்டோம். மக்கள் பிரச்னைகளுக்காக நிறைய போராட்டங்கள் நடத்தியிருக்கேன். என்னோட வளர்ச்சியை பொறுத்துக்க முடியாமல்தான் என் மேல திட்டமிட்டே பொய் பிரசாரம் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. சம்பவத்தன்னைக்கு ராத்திரி நான் வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்தேன். எங்க அம்மா திண்ணையில் படுத்திருத்தாங்க. காம்பவுண்டு சுவர்ல நெருப்பு பத்தி எரியுதுனு அவங்க சொல்லிதான் எனக்கே விஷயம் தெரியும். உடனே போலீஸூக்கு போன் பண்ணினேன்’’என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி பேசுகையில், ``ரகுராமன் தவறு செஞ்சிருக்க மாட்டாருனு இப்ப வரைக்கு உறுதியா நம்புறோம். சி.பி.எம் நகரச் செயலாளராகவும், மாவட்டச் செயற்குழு உறுப்பினராகவும் இரண்டு பொறுப்புகள்'ல இருந்துக்கிட்டு இருந்தார். ஒரு பொறுப்பு போதும்னுதான், நகரச் செயலாளர் பொறுப்புக்கு வேற ஒருத்தரை தேர்ந்தெடுத்தோம். ரகுராமன் மனைவியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிச்சதுனாலதான், அவருக்கு பதிலாக ஜெயபிரகாஷை வேட்பாளராக அறிவிச்சோம்" என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை கண்காணிப்பாளர்ர் சோமசுந்தரத்திடம் கேட்டோம். ``நாங்க இதுவரை மேற்கொண்ட விசாரணையில், வெளிநபர்கள் யாரும் அந்த காரியத்தை செய்யலைங்கறது உறுதியாயிடுச்சி... ஆனால் விசாரணை முழுமையாக முடிஞ்சாதான், யார் குற்றவாளினு தெரியவரும்’’ என்றார்.
இந்த நாடகம் எப்போதுதான் முடிவுக்கு வருமோ?
from மாவட்ட செய்திகள் https://ift.tt/cJN1mfQ
via
