திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள மதனஞ்சேரி குந்தன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, பெயின்டர். இவரின் மனைவி ரோஜி. இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள். 21 வயதில் தினகரன் என்ற ஒரு மகனும் இருந்தார். தினகரன் கட்டுமானத் தொழில் செய்து வந்தார். ஏப்ரல் 29-ம் தேதி மாலை 6 மணியளவில், குடியாத்தம் பகுதியில் வேலை செய்துவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார் தினகரன். பேரணாம்பட்டு அருகே வந்தபோது, மரத்தின்மீது பைக் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
வேலூரிலுள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தினகரன் நேற்று காலை 7.05 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். இத்தகவலை அறிந்த பெற்றோரும், சகோதரிகளும், `ஒரே ஆண் பிள்ளையை இழந்துவிட்டோமே...’ என்று கதறி அழுதனர். இதையடுத்து, தினகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சி.எம்.சி மருத்துவமனையே எடுத்துகொண்டது.
இதயம் மட்டும், தமிழ்நாடு உடல் உறுப்பு ஆணையம் மூலம் சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 41 வயதாகும் நோயாளிக்கு பொறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணிக்கு மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இதயம் பிரித்து எடுக்கப்பட்டு, பிரத்யேக பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸில் கொண்டுச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸை அப்பல்லோ ஓட்டுநர் தினகரன் ஓட்டினார்.
வேலூரிலிருந்து வரும் பகுதிகளான ஆற்காடு, ராணிப்பேட்டை தொடங்கி வானகரம், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு வழியாக சென்னை கிரீம்ஸ் சாலை வரையிலும் போலீஸார் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலனஸ் சிக்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்தனர். 1.45 மணி நேரத்தில், அதாவது மாலை 4.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையை ஆம்புலனஸ் சென்றடைந்தது. இதையடுத்து, அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 41 வயதாகும் நபருக்கு, இளைஞரின் இதயம் பொருத்தப்பட்டது. இதயம் கடந்து வந்த நிகழ்வு பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/d2TFsO1
via
