புதுச்சேரியில் நடைபெற்றுவரும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் முதல்வராக இருக்கிறார் ரங்கசாமி. கடந்த மார்ச் மாதம் கூடிய சட்டப்பேரவையில் 5 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தார் முதல்வர் ரங்கசாமி. இந்நிலையில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது ஒப்புதல் கொடுக்காததால் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக அறிவித்தார் சபாநாயகர் செல்வம். அதையடுத்து டெல்லிக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து மத்திய அரசு ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியானது. அதனால் இன்று காலை 9:45 மணி அளவில் புதுச்சேரி சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. அப்போது நிதித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல்வர் ரங்கசாமி 2022-23 ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2022-23 ஆண்டுக்கு ரூ.11,000/- கோடி வரைவு பட்ஜெட்டை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருந்தார் முதல்வர் ரங்கசாமி. அந்த தொகைக்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அது ஒருபுறமிருக்க இலவச அறிவிப்புகளுக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், அந்த அறிவிப்புகளால் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் என்ன திட்டங்களை அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர் மக்கள். வழக்கம்போல இலவசங்களுக்கு ஆதரவாக நின்று மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறாரா அல்லது தனது ஆயுதமான இலவச அறிவிப்புகளை கையில் எடுப்பாரா என்ற கேள்வி தற்போது புதுச்சேரியில் எழுந்திருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/PU36zny
via
