பல நாடுகளைச் சேர்ந்த 100 பெண் கவிஞர்களின் படைப்பு; வளரி அமைப்பு வெளியிட்ட `மகடூஉ 100’!

0

உலகமெங்கும் வாழ்கின்ற 100 புதிய பெண் கவிஞர்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது ’வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு.

வளரி விழா

ஆண் எழுத்தால் அடையாளப்படுத்தப்படுகிற கலை இலக்கிய தளத்தில், தமிழ்ப் பெண்களின் திறமையை, புலமையை, ஆளுமையை வெளிப்படுத்துகிற களத்தை 19 நாடுகளில் செயல்படுகிற 'வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு' ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

வளரி கவிதை இதழின் 14-ம் ஆண்டு விழாவை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதி சென்னையில் ஐம்பெரும் விழாவாக இவ்வமைப்பு சிறப்பாக நடத்தியது.

இவ்வமைப்பின் தமிழ் மாநிலத் தலைவர், மருத்துவர் தென்றல் வரவேற்க, வளரி ஆசிரியர் அருணா சுந்தர்ராசன் விழாவின் நோக்க உரையாற்றினார்.

14-ம் ஆண்டு விழா மலரை  வெளியிட்ட பின், சிறப்பு அம்சமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூறு பெண் கவிஞர்களின் பங்களிப்பில் உருவான 'மகடூஉ 100' கவிதை தொகுப்பை கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி வெளியிட, கவிஞர் இராபியத் பெற்றுக் கொண்டார்.

'கவிப்பேராசன் மீரா விருது’களை பேராசிரியர் முனைவர் தமிழரசி, சுகன்யா ஞானசூரி ஆகியோருக்கு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வழங்கினார். மீரா நினைவாக மறத்தமிழ் வேந்தனுக்கு 'போர்க்களப் பாவலர்'  விருதும் வழங்கப்பட்டது.

இவ்வமைப்பைச் சேர்ந்த கனடாவின் சாரதா எழுதிய 'அம்மு அம்மாவுக்குச் சொன்ன', சிறீவித்யாவின் 'நினைவுச் சிறகுகள்', சுதாவின் 'சொல்மேல் படரும் பொருள்', வளரி துணையாசிரியர் சுகன்யாவின் 'மனோகரப் பார்வை' ஆகிய நூல்களை கவிஞர்கள் பாலைவன லாந்தர், மருத்துவர் ரேவதி, அருண்மொழி, மருத்துவர் வனிதா வெளியிட்டார்கள்.

ஜெயபாஸ்கரன், பழ.நெடுமாறன், ஆண்டாள் பிரியதர்சினி

கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி பேசும்போது "இது ஓர் அற்புதமான தருணம். பெண்கள் நிறைந்த இந்த மேடையில் வீற்றிருப்பது பெருமைக்குரிய விடயமாகும். நமது வாழ்வை நிமிர்த்திக் கொள்ளவும், மனத்தை உற்சாகப்படுத்திக் கொள்ளவும், நமது உரிமைகளை வென்றெடுத்து கொள்வதற்குமான வரிகளை படைத்துச் சென்ற முன்னோடிகளின் முகங்களை இங்கு காணுகிறேன். பெரியாரின், பாரதியின், பாரதிதாசனின், அம்பேத்கரின் இன்னும் சொல்லப்போனால் நெடுமாறன் அவர்களின் பிரதிகளும் இங்கே காணக்கூடியதாக இருக்கிறது.

இந்த 'மகடூஉ 100' தொகுப்பின் மூலம் 100 புதிய பெண் கவிஞர்களை தமிழ் உலகிற்கு வளரி அறிமுகப்படுத்தியுள்ளது. 'மகடூஉ 100' கவிதைகள் புதிய ஐந்தாம் திசையைச் செதுக்கியிருக்கின்றன. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களோடு ஆறாம் பெரும் சக்தியாகப் பெண்ணை அடையாளம் காட்டுகின்றன. பெண்மையை அடையாளம் காட்டுகின்றன.

ஆண்டாள் பிரியதர்சினி

எவ்வளவுதான் எங்களை அடக்கி வைத்தாலும் ஃபீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுவோம் என்று இந்த வளரி பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் நெடும்பரப்பு இனிமேல் 'மகடூஉ 100' க்கு முன்னால், 'மகடூஉ 100'க்குப் பின்னால் என வகைப்படுத்தப்படும்" என்றார்.

கவிஞர் ஜெயபாஸ்கரன் பேசும்போது, "இந்த விழா முழுக்க முழுக்க சமூகத்திற்கும், இலக்கியத்திற்கும், தமிழுக்கும், குறிப்பாக பெண்களுக்கு பேரூக்கம் தருகின்ற விழா என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது. நான் அறிந்தவரை பெண்களை இப்படிக் கொத்து கொத்தாக ஆதரித்து அவர்களைக் கலை, இலக்கிய மயப்படுத்தி, சமூகத்தில் மதிப்பு மிக்கவர்களாக அடையாளப்படுத்துகின்ற பணியை வளரியைத் தவிர வேறு எந்த அமைப்பும் செய்யவில்லை" என்றார்.

ஜெயபாஸ்கரன், பழ.நெடுமாறன், ஆண்டாள் பிரியதர்சினி

பழ. நெடுமாறன் பேசும்போது, "உலகம் முழுக்கப் பரவியிருக்கின்ற தமிழ்ப்பெண் கவிஞர்களை ஒருங்கிணைத்து அவர்களின் கவிதைகளை நூலாக்கி அவர்களை ஊக்குவித்திருப்பது மட்டுமல்ல, மற்ற பெண்களையும் ஊக்குவிப்பதை நண்பர் அருணா சுந்தர்ராசனின் சிறந்த தொண்டாகக் கருதுகிறேன்.

புதுமைப்பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை மகாகவி பாரதி கனவு கண்டு பாடியிருக்கிறார். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்கிற அந்த பாடல் அனைவரையும் எழுச்சிகொள்ளச்செய்யும். அந்தப் பாடலின் வடிவமாக ஆண்டாள் பிரியதர்சினி உரையாற்றியிருக்கிறார். ஐயாயிரம் ஆண்டுக்கால பழமை கொண்ட நம் இனத்தில் பெண் கவிஞர்கள் என்பது மிகவும் குறைவுதான்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை அளித்து அதன் மூலமாக தமிழுக்குச் செம்மொழி தகுதி பெற்றுத் தந்திருக்கிற சங்க காலப் புலவர்களின் எண்ணிக்கை நானூற்று எண்பதுக்கும் குறைவு. அதில் ஒளவையார் உள்பட 31 பேர்தான் பெண்கள்.

ஆனாலும், ஒளவையாருக்கு மூவேந்தர்களும், மக்களும் அளித்த மரியாதை அளப்பரியது. சேர குலத்தில் இரண்டு பங்காளிகள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டபோது, எக்குடி தோற்பினும் தோற்பது நம் குடியே என்று இடித்துக் கூறியவர் ஒளவையார்" என்று விரிவாகப் பேசினார்.

100 பெண் கவிஞர்களின் கவிதைகள்

முகநூல் பக்கத்தில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் அதிக அளவில் வெற்றி பெற்ற பெண் கவிஞர்களுக்குக் கேடயங்களும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நூலாசிரியர்களின் ஏற்புரையோடு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் சிறீவித்யாவின் நன்றியுரையுடன் மிக சிறப்பாக நடந்த இவ்விழா புதிய இலக்கிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/rFEPx34
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*