`பருவநிலை மாற்றம்’ குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்- கனிமொழி!

0

இந்த கருத்தரங்கில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

’பருவநிலை  மாற்றமும் சுற்றுபுறச் சூழலும்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது.  வரவேற்றுப் பேசிய நபார்டு வங்கியின் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், “விவசாயிகளின் முன்னேற்றம், விவசாயிகளுக்கான கடன் வசதிகள், வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது.

சுரேஷ் ராமலிங்கம் - நபார்டு மேலாளர்

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஊக்குவித்தல்,  மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் வேலை வாய்ப்பை அதிகரித்தல் போன்ற பல பணிகளை முனைப்புடன் செய்து வருகிறது நபார்டு வங்கி. இயற்கை வளங்களின் அழிவே பருநிலை மாற்றத்திற்கானக் காரணம். பருவநிலை மாற்றத்தை எப்படி எதிர் கொள்ளுதல், சுற்றுபுறச் சூழலை காத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்குவதே இக்கருத்தரங்கின் நோக்கம்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், “தமிழகம் முழுவதும் மரங்கள் வளர்ப்பிற்கென பசுமை இயக்கமும் தொடங்கப்பட்டு மரங்கள் நடப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மன்னார் வளைகுடாவின் தெற்கு எல்லைப் பகுதிகளில் அமைந்திருப்பதுதான் ’வான் தீவு’. கடந்த 2018-ம் ஆண்டில் ஊன்றப்பட்ட பனை விதைகள் முளைத்து தற்போது அரை அடி முதல் 2 அடி வரை வளர்ந்துள்ளது.

செந்தில்ராஜ் - ஆட்சியர்

இதைப் போல தூத்துக்குடி கடற்பகுதியில் உள்ள ’காசுவாரி தீவு’, ‘ நல்ல தண்ணிதீவு’ பகுதிகளிலும் பனை விதைகள் ஊன்றப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊன்றப்பட்டுள்ளன” என்றார்.

 அமைச்சர் கீதாஜீவன், “இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அமைச்சரவையில் வனத்துறையுடன் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தனித்துறை தொடங்கப்பட்டு காலநிலை மாற்றம், அதனை சரி செய்யும் பணியினை தமிழக அரசு செய்து வருகிறது.” என்றார்.

நிகழ்வில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “பல்துறை சார்ந்த வளர்ச்சி, மனித குலத்தின் பெருக்கம், கான்கிரீட் கட்டிடங்களின் அசுர வளர்ச்சி, வேகமாக அழிந்து வரும் காடுகள், பெருகி வரும் நெகிழிகள் இவை ஏற்படுத்தி வரும் பருவநிலை  மாற்றங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கடும் வறட்சி, அதிக மழை, பனி, சூறாவளி, புயல், காட்டுத்தீ, கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்றத்தினால்தான் காற்று, மழை, வெயில்,குளிர் என அந்தந்த பருவங்களில் நிகழக்கூடியவை பருவம் மாறி நிகழ்கிறது. இதனால், பேரிழப்புகள் ஏற்படுகின்றன.

அமைச்சர் கீதாஜீவன்

மக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.  விவசாயமும் பாதிக்கப்படுகிறது. தூத்துக்குடி மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இதில், சில தீவுகளின் பரப்பளவு, கடல் அரிப்பினால் குறைந்துள்ளது. செயற்கைத் தடுப்புகளால் பாதுகாத்து அதன் பரப்பளவினை அதிகரிக்க கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனிமனிதக் கடமை என ஒன்றுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும்” என்றார்.

காலநிலை மாற்றத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்? என்ற தலைப்பில் பேசிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சூழலியலாளர் பொன்ராஜ் தங்கமணி, “இன்று பள்ளிக்கூடம் முதல் பாராளுமன்றம் வரை ஆராய்ச்சியாளர்கள் முதல் ஐ.நா.சபை வரையிலும் உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் முக்கியமான சிக்கல், காலநிலை மாற்றமும் அதனால் ஏற்படும் தாக்கமும் ஆகும்.  இந்த நூற்றாண்டில் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் இந்த சவாலை எதிர்கொண்டு, சமாளித்து அடுத்தகட்டம் நோக்கி நகர்வதும் நமது குறிக்கோளாக  இருக்க வேண்டும். அதற்காக நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு கவனம் செலுத்த வேண்டிய முக்கியக்கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. 

புத்தக வெளியீடு

உலகில் பெரும்பான்மையான நாடுகள் புவிவெப்பமயமாதலின் தாக்கத்தினை நன்கு உணர்ந்துள்ளனர். ஆனால், அதற்கானத் தீர்வினை எவ்வளவு தூரம் தங்களால் செய்ய முடியும் என்பதுதான் அவர்களிடம் முக்கிய விவாதமாக உள்ளது. தீர்வை நோக்கிய நடவடிக்கையாக உலகளாவிய அளவில் கடந்த 1988-ம் ஆண்டு, உலக வானிலை மையமும், ஐ.நா சபைக்கான சுற்றுசூழல் நிரல் அமைப்பும் இணைந்து தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு ஒன்றை உருவாக்கியது.

இது ஐ.நா பொதுச்சபையாலும் அங்கீகரிக்கப்பட்டது. பசுமை இல்ல வாயுக்களின் அளவினை நிலை பெற வைத்து அதன் மூலம் மனிதனின் செயல்பாடுகளினால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தை தடுக்க வேண்டும் என்பதுதான் இதன் முக்கியக் குறிக்கோள். இதன் மூலம் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் உலகளாவிய அளவில்  கையெழுத்திடப்படும் காலநிலை மாற்றம் சம்மந்தமான ஒப்பந்தங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

கலந்து கொண்ட மாணவர்கள்

புவி  வெப்பமயமாதல் சிக்கலுக்கு முக்கியமான தீர்வு நிலையான வளர்ச்சி இலக்குகள்.  உலகிலுள்ள அனைவருக்கும் சிறந்த மற்றும் நிலையான எதிர்காலத்தினை அடைவதற்கான ஒரு திட்டமாக வகுக்கப்பட்டதுதான் நிலையான வளர்ச்சிக் கொள்கைகள். ஐ.நா பொதுச்சபை கடந்த 2015-ம் ஆண்டு உலகத்தை மாற்றுவதற்கான 17 இலக்குகளை நிர்ணயித்து வரும் 2030-க்கும் அடைவதே நோக்கம் எனவும் கூறப்பட்டது. இதில், மலிவான தூய சக்தி, நிலையான வளர் சமூகம், பொறுப்பான தயாரிப்பும் பயன்பாடும், சுற்றுச்சூழல் செயல்பாடு ஆகியவை காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையது” என்றார்.

கடல்பாசிகளின் முக்கியத்துவமும் கார்பன் சீக்வெஸ்ட்ரேஷன் சிறப்புக் குறிப்புகளும், பருவநிலை மாற்றமும் சுற்றுபுறச்  சூழலும், வேளாண்மைத் துறையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம், காலநிலை மாற்றம் தரும்  உடல்நலச் சீர்கேடு உள்ளிட்ட தலைப்புகளில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விவசாயிகள், மாணவ மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JM0bv8h
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*