திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் மனைவி கலைச்செல்வி. வயது 46. இந்த தம்பதியருக்கு 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு முருகன் இறந்துவிட மகள்களை படித்து ஆளாக்குவதற்காக கூலி வேலைக்குச் சென்று குடும்பச் சுமையை ஏற்றார் கலைச்செல்வி. வறுமையில் அவர்கள் வாழ்க்கை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வேளையில், கடந்த 1-ம் தேதி மாலை சாலையில் நடந்துச் சென்றபோது, இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்தார் அவர். உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், கலைச்செல்வியின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. சூழ்நிலையை உணர்ந்த அவரின் 2 மகள்களும் தாயின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தனர். அதன்படி, நேற்றையை தினம் அரசு மருத்துவமனையிலேயே 15 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் அறுவைச் சிகிச்சை தொடங்கியது.
கலைச்செல்வியின் இதயம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சென்னை வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூர் ஸ்ரீநாராயணி மருத்துவமனைக்கும், கல்லீரல் மற்றும் 2 கண்கள் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அவர் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றிருக்கிறார்கள். அதேபோல, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், இதுவே முதல் முறை என்கிறார்கள் மருத்துவர்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/HTMDEeU
via
