தஞ்சாவூரில் நேற்று இரவு பெய்த கனமழையில் வல்லம் அருகே குடியிருப்புப் பகுதியில் மழை நீர் சூழந்தது. மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அறுவடைக்குத் தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
தஞ்சாவூர் முழுவதும் நேற்று இரவு திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பெரும் சத்தத்துடன் தொடர்ந்து இடி இடித்ததால் வீட்டுக்குள் இருந்தவர்களே அச்சப்படக்கூடிய நிலைக்கு ஆளானார்கள். கனமழையுடன் காற்று வீசியதால் பல இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்தது. மழை காரணமாக வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்தது.
வல்லம், பெரியார் நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரியார் நகர்ப் பகுதியில் மழை நீர் செல்ல வழியில்லாததால் வீடுகளில் வெள்ளநீர் சூழந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது. பாதாளச் சாக்கடை பணிகளின்போது சாலையோரத்திலிருந்த வடிகால்கள் தூர்ந்து போனதால் மழை நீர் வடியாமல் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துவிட்டதாக அந்தப் பகுதியினர் குற்றம்சாட்டினர்.
இது குறித்து லூயிஸ் என்பவர், ``எங்கப் பகுதியில கூலி வேலை செய்யக்கூடிய அடிதட்டு மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு எந்த அடிப்படை வசதிகளும் அரசால் செய்து தரப்படுவது இல்லை. பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற்றபோது சாலையில் இருபுறமும் இருந்த வடிகால் வாய்க்கால்கள் தூர்ந்துவிட்டன.
அவற்றை தூர்வார வேண்டும் என வல்லம் பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை தெரிவித்தும் பலன் எதுவும் இல்லை. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையில் மழை நீர் ஓடுவதற்கு வழியில்லை. இதனால் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது. இதனால் எங்கள் பகுதி முழுவதும் முட்டிக்கால் அளவுக்கு மழை நீர் சூழ்ந்துவிட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள்ளிருந்த குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியது.
மழை நீர் வடிகால் முறையாக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. வல்லாம் பேரூராட்சி நிர்வாகம் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. அடுத்த மழைக்காவது நாங்க பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்" என்றார்.
இதே போல் பூதலூர் அருகே உள்ள கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/OHUIedc
via
