'எனக்கு வேண்டாம்; இவருக்காவது மாவட்டச் செயலாளர் பதவி தாங்க' - திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட நிலவரம்

0

தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் கே.எஸ்.மூர்த்திக்கு இந்தமுறை மாவட்டச் செயலாளர் பதவி இல்லை என்று முடிவாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில், 'எனக்குதான் இல்லை; இவருக்காவது கொடுங்க' என்று நாமக்கல் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ ராமலிங்கத்துக்கு அவர் சீட் கேட்டு மனுதாக்கல் செய்ய வைத்திருப்பதாக சொல்லி, ஒரு பரபர டாக் ஓடிக்கொண்டிருக்கிறது.

'மதுரா' செந்தில்குமார்

அமைப்புரீதியாக நாமக்கல் தி.மு.க மேற்கு மாவட்டச் செயலாளராக கே.எஸ்.மூர்த்தி இருந்து வருகிறார். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இந்தப் பதவியில் இருக்கும் தனக்கு, இந்தமுறையும் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று நினைத்தார். அதற்காக, காய்நகர்த்தியும் வந்தார். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளை அ.தி.மு.கவிடம் இழந்தது, நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளராக ஸ்திரமாக செயல்படாதது என்று பல விவகாரங்கள், அவரது மாவட்டச் செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுத காத்திருந்தன.

இந்த நிலையில், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்புமனுத்தாக்கல் செய்ய, கடந்த 23 - ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. இதற்காக, கே.எஸ்.மூர்த்தி சென்னையில் முகாமிட்டார். ஆனால், கட்சி தலைமை இந்தமுறை அவரை பதவியில் தொடரவைக்க விரும்பவில்லை என்று அவருக்கு தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கடைசி நேரத்தில், 'எனக்கு வேண்டாம்; இவருக்காவது மாவட்டச் செயலாளர் பதவி கொடுங்க' என்றபடி, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளருமான ராமலிங்கத்தை வேட்புமனுத்தாக்கல் செய்ய வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.கவினர் சிலர்,

"தனக்குதான் பதவி என்று நம்பிக்கையோடு கே.எஸ்.மூர்த்தி இருந்தார். ஆனால், தனக்கு இல்லை என்றதும், அதிர்ச்சியானார். அவர் மாவட்டச் செயலாளராக பத்து வருடங்களுக்கு மேல் இருந்தாலும், அவர் பதவியில் இருந்த காலங்களில் அ.தி.மு.கதான் ஆட்சியில் இருந்தது. கடந்த 2011 - 16 வரை அவர் பரமத்தி வேலூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தபோதும், அ.தி.மு.கதான் ஆட்சியில் இருந்தது. அதனால்தான், 'அ.தி.மு.கவோடு ரகசிய டீலிங் வச்சுக்கிட்டார்' என்று அவர்மீது புகார் முன்வைக்கப்பட்டது. ஆனால், கே.எஸ்.மூர்த்தி, 'இந்த ஒருமுறை எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுங்க' என்று கேட்டுப்பார்த்தாராம். ஆனால், கட்சி தலைமை ஸ்ட்ரிக்டாக, 'இல்லை. 'மதுரா' செந்திலுக்குதான் இந்தமுறை' என்று சொல்லிவிட்டதாம். அதோடு, 'மதுரா' செந்திலை மட்டும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய கட்சி தலைமை சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முன்னாள் பள்ளிப்பாளையம் ஒன்றிய செயலாளர் வெப்படை செல்வராஜ், மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்

இதற்கிடையில், தனக்கு பதவி கிடைக்கவிடாமல் செய்தது, நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார்தான் காரணம் என்று நினைத்த கே.எஸ்.மூர்த்தி தரப்பு, ராஜேஸ்குமாரின் அரசியல் எதிரியான நாமக்கல் எம்.எல்.ஏ ராமலிங்கத்தை மனுத்தாக்கல் செய்ய வைத்ததாக சொல்றாங்க. சமீபத்தில், கே.ஆர்.என்.ராஜேஸ்குமாருக்கும், ராமலிங்கத்துக்கும் இடையில் கோஷ்டி அரசியல்கானம் ஓடிகிட்டு இருக்கு. முதலைப்பட்டியில் அமைக்கப்பட இருக்கும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியை தனக்கு வேண்டிய கான்ட்ராக்டருக்கு தர வேண்டும் என்று பரஸ்பரம் இருவருக்கும் இடையில் பிரச்னை வெடித்தது. இதனால், இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவர் மட்டம் போடுவது, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் இவர் ஆப்சன்ட் ஆவதுனு இவர்களின் யுத்தம் பெரிதானது. இந்த நிலையில்தான், கே.எஸ்.மூர்த்தி, 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற அடிபடையில், ராமலிங்கத்தை மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்ய வைத்தாராம்.

ராமலிங்கம் வசிப்பது, கட்சி, எம்.எல்.ஏவாக இருப்பது எல்லாம் கிழக்கு மாவட்ட தி.மு.க எல்லைக்குள்தான் என்றாலும், கே.எஸ்.மூர்த்தி சொன்னவுடன் மனுத்தாக்கல் செய்தாராம் ராமலிங்கம். இதற்காக, நகரம், ஒன்றியம், செயற்குழு, பொதுக்குழு என்று மேற்கு மாவட்டத்தில் பதவிகளில் இருக்கும் அநேகம் பேர், ராமலிங்கத்துக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தன்னால் பதவியை பிடிக்காமுடியாவிட்டாலும், தான் கைகாட்டிய ராமலிங்கத்துக்காவது மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று கே.எஸ்.மூர்த்தி மலைபோல நம்பி இருக்கிறாராம். ஆனால், கட்சி தலைமை 'மதுரா' செந்தில்குமார்தான் மாவட்டச் செயலாளர்' என்பதில் உறுதியாக இருக்கிறதாம். இந்த தகவலை கேள்விப்பட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.கவினர் பலரும் சனிக்கிழமையில் இருந்து 'மதுரா' செந்தில்குமாரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, சமூகவலைதளங்களிலும் வெளிப்படையாக அவரை மாவட்டச் செயலாளராக அழைத்து, வாழ்த்து தெரிவித்து, பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ராமலிங்கம் தரப்பு கிச்சன் கேபினட் மூலம் மாவட்டச் செயலாளர் பதவியை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறாராம். அதேபோல், வெப்படை செல்வராஜூக்கு முதல்வரின் ஆசி இருப்பதாகவும் சொல்றாங்க.

வெப்படை செல்வராஜ்

ஆனா, உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளரான 'மதுரா' செந்தில்குமார்தான் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர்னு அடித்து சொல்றாங்க. தமுன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, நாமக்கல்லை அமைப்புரீதியாக மேற்கு, கிழக்கு என்று இரண்டாக பிரித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளராக ஆன காந்திசெல்வன், மேற்கு மாவட்டமும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக, தனது ஆதரவாளரான கே.எஸ்.மூர்த்தியை மேற்கு மாவட்ட செயலாளராக பதவிக்கு வரவைத்தார். அதே பாணியில் தான் கைகாட்டும் ராமலிங்கத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார் கே.எஸ்.மூர்த்தி. ஆனால், தனக்கும் பதவி கிடைக்காத நிலையில், தான் முன்னிறுத்தும் ராமலிங்கத்துக்கும் கிடைக்காமல் போனா, கே.எஸ்.மூர்த்தி தரப்பு ரொம்ப மனமுடைந்து போய்விடும்" என்றார்கள்.

அதேநேரம், இதுபற்றிய உள்விவகாரங்கள் குறித்து பேசிய தி.மு.க புள்ளி ஒருவர்,

"ராமலிங்கத்தை வேட்புமனுதாக்கல் செய்ய வைத்தது கே.எஸ்.மூர்த்தி இல்லைனு சொல்றாங்க. ராமலிங்கத்தை கட்சி தலைமை, 'கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் தொகுதி எம்.எல்.ஏவா இருந்துகிட்டு, மேற்கு மாவட்டத்துக்கு எதுக்கு பதவி கேட்கிறீங்க?. மேற்கு மாவட்ட கட்சி பதவியை பார்ப்பீங்களா, நாமக்கல் சட்டமன்றத் தொகுதி பணிகளை பார்ப்பீங்களா?. மனுவை வாபஸ் வாங்குங்க'னு கடிந்துகொண்டதாம். நாளை அவர் மனுவை வாபஸ் வாங்குவார் என்று சொல்லப்படுது. ராமலிங்கத்துக்கு கட்சி தலைமையிடம் இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்தவே, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் இப்படி ஒரு சூழ்ச்சியை செய்ததாகவும் சொல்றாங்க. நாளைக்கு தெரிந்துவிடும், நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கு தேர்தல் உண்டா, இல்லையா என்பது" என்றார்.

கே.எஸ்.மூர்த்தி (நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர்)

இதுகுறித்து, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.எஸ்.மூர்த்தி தரப்பில் பேசினோம்.

"அண்ணன் கட்சிக்காக உண்மையாக உழைத்திருக்கிறார். வார்டு, ஒன்றிய சேர்மன், ஒன்றிய செயலாளர்னு படிப்படியாக வளர்ந்துதான், மாவட்ட செயலாளர் பதவிக்கு வந்தார். நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் கட்சியை வளர்க்க, அரும்பாடுபட்டிருக்கிறார். அவருக்கு பதவி இல்லைங்குறது எங்களுக்கு வருத்தமா இருக்கு. அதேநேரம் எங்கண்ணன், ராமலிங்கத்தை மனுதாக்கல் செய்ய சொல்லவில்லை. மேற்கு மாவட்ட கட்சி நிர்வாகிகள், அவரை அப்படி பண்ண வச்சாங்க. ராமலிங்கத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்" என்றார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/VyGne4d
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*