``நான் நாகேஷூடன் இனி நடிக்கவே மாட்டேன்!" - மனோரமாவின் சபதம் @ 1974

0

சில விஷயங்களே யாரிடமாவது எப்போதாவது மனம் திறந்து பேசித்தான் ஆக வேண்டும். அப்படிப் - பேசினால் மனத்திலிருக்கும் பாரம் ஓரளவிற்குக் குறையும், மனமும் நிம்மதியடையும், நான் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

படவுலகிலும் கதாநாயகியாகத்தான் நுழைய வேண்டும் என்றிருந்தேன். ஆனால், விதி வேறு விதமாக நினைத்துவிட்டது என் படவுலக வாழ்க்கையும் மாறி விட்டது: கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த என்னை, கவிஞர் கண்ணதாசன் தான், எடுத்துக் கொண்டிருந்த 'மாலையிட்ட மங்கை’ என்ற படத்தில், காக்கா ராதாகிருஷ்ணனின் ஜோடியாக, சிரிப்பு வேடத்தில் நடிக்க வைத்தார்.

ஆமாம், கவிஞர்தான் என்னை சிரிப்பு நடிகையாக்கியது: 'சிரிப்பு நடிகையாக நன்றாக நடித்தேன்’ என்ற பெயர் அப்படத்தின் மூலம் கிடைத்தவுடன், கதாநாயகி வேடத்தை மறந்துவிட்டேன்! ஏனென்றால், கலையுடன் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற மற்றோர் எண்ணமும் எனக்கு இருந்ததுதான் காரணம்.

Manorama

'ஊமையன் கோட்டை' என்ற படம் கண்ணதாசன் தயாரித்தது, என்ன காரணத்தாலோ வெளியிடப்படலை. அதில் சுந்தரவடிவு என்ற வேடத்தில், மிக அற்புதமாக நடித்திருந்தேன். அந்தப் படம் திரையிடப்பட்டிருந்தால், நான் ஒரு நாயகியாக மீண்டும் மாறியிருந்திருக்கலாம். விதி யாரை விட்டது, என்னை மட்டும் விடுவதற்கு?

'மாடர்ன் தியேட்டர்ஸார்' என்னை 'கொஞ்சும் குமரி' படத்தில் கதாநாயகி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். முதலில் என்னை எதற்கு கதாநாயகி வேடத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள் என்று புரியவில்லை. பிறகுதான், சென்ற திரு. சுந்தரம் அதைப் கூறினார். 'கொஞ்சும் குமரி' உன்னுடைய தொண்ணுாற்று ஏழாவது படமாக அமைகிறது. அதனால் நீ கதாநாயகியாக நடிக்க வேண்டும். மேலும், தொண்ணூற்று எட்டாவது, தொண்ணூற்று ஒன்பதாவது, நூறாவது படங்களிலும் நீ கதாநாயகியாகவும், மனோகர் கதாநாயகனாகவும் நடிக்க வேண்டும். 'மாடர்ன் தியேட்டர்ஸ்’ படம்தான் உன்னுடைய படமாகவும் இருக்க வேண்டும், அதுவும் நீ நாயகியாக நடித்த படமாக இருக்க வேண்டும்' என்று கூறினார்.

திரு. சுந்தரம் இப்படிக் கூறிவிட்ட பின்பு, மறுப்புச் சொல்ல யாருக்கு மனம் வரும்? ஒப்புக் கொண்டேன். ஆனால்? விதி விளையாட ஆரம்பித்தது. 'கொஞ்சும் குமரி' படம் திரையிடப்பட்டது. என் பெரு மதிப்பிற்குரிய 'பெரியவர்' உடல் நோய்வாய்ப்பட்டு மறைந்தார். என்னை, அவர் மகளாகப் பாவித்த சுந்தரம், என்ன விட்டு விட்டுப் போய் விட்டார்.

என் கதாநாயகிக் கனவும் மறைந்தது: சுந்தரம் கண்டிப்புடன் வளர்க்கப்பட்டார், பிறகு பெரிய கண்டிப்புக்காரராக வளர்ந்தார். அவரைக் கண்டாலே பயந்து நடுங்குவார்கள். நானும் முதலில் அப்படித்தான் நடுங்கினேன். பல நடிகைகளிடம் பேசாதவர், அப்போது தான் மாடர்ன் தியேட்டர்ஸில் காலடி எடுத்த வைத்த என்னிடம் பேசினார்.

காரணம்? கண்டிப்புக்காரரின் உள் மனத்தில் பாச உணர்ச்சியும், அன்பு உணர்ச்சியும் வளர்ந்து வளர்ந்து கடைசியில் அதை அடக்க முடியாமல், வெளிக் கொணர்ந்த போதுதான் நான் பெரியவரைச் சந்திக்க நேர்ந்தது. என் மேல் அன்பைப் பொழிய ஆரம்பித்தார். கண்டிப்புடன் வளர்கிறவர்களின் கடைசிக் காலம் சாதா மற்றவர்களின் அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் காலமாகத்தான் அமையும்.

இதை நான் பலரிடம் கண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கண்டிப்பு அவசியம்தான். ஆனால், கண்டிப்பே வாழ்க்கையாகிவிடக் கூடாது! கண்டிப்பு என்றவுடன் இன்றைய இளைய தலைமுறையினரிடம் அந்தச் சொல் பற்றிய எண்ணமே காணப்படாத பொழுது, நான் வருத்தமடைகிறேன். காரணம், எங்களுடைய கலையுலக வாரிசுகள் நல்ல முறையில் வருவதைக் காண விழைகிறோமே தவிர, வேறு முறையில் அல்ல!

உஷா "இந்த இளைய தலைமுறை நடிகை ஒரு பேட்டியில், நான் அவருடன் பேசுவதில்லை என்பதை வருத்தப்பட்டுக் குறிப்பிட்டிருந்தார். எவ்வளவு பெரிய பொய் அது? 'கண்மணி ராஜா' படத்தில், இவர் என்னுடைய மகளாக நடிக்கிறார், இப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்று நானே அக்கறை எடுத்து நடிக்கச் சொல்லிக் கொடுப்பேன்.

அவருடைய வளர்ச்சிக்கு உதவப் போனால்... நான் அவருடன் பேசுவதே இல்லை என்றல்லவா ஒரு குண்டை-அதுவும் ஒரு பெரிய குண்டைப் போடுகிறார்!

உஷா இப்படி ஏன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அவரிடம் இதைப் பற்றிக் கேட்டால்: 'நான் கூறவில்லை. பத்திரிகையாளர்களே இப்படி எழுதி விட்டார்கள்’ என்று பத்திரிகையாளரின் மேல் பழியைப் போடுவார்.

முதலில் பேட்டியில் ஒன்றைக் கூறிவிட்டு, அதற்கு எதிர்ப்பு என்று வந்தால், பத்திரிகையாளரின் மேல் பழி போடுவது இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு வழக்கமாகி விட்டது. இப்படி இவர்களுக்கு விளம்பரம் வேண்டியிருந்தால் கிடைத்து விட்டுப் போகட்டும். அதனால் எனக்கு ஒன்றும் இல்லை: 'திருமலைத் தென்குமரி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த இந்த உஷா நடிகைக்கு, நான் பலமுறை புத்தி கூற வேண்டியதாகிவிட்டது. இவர் மலையாள நடிகையாதலால் மேல்தாவணி அடிக்கடி விழுந்து கொண்டிருப்பதைப் பற்றிக் கவலையே படமாட்டார். இதனால் பலர் கண்களும் இவரை மொய்க்க ஆரம்பித்தன. உடனே, ஒரு பின்னை (Safety pin) எடுத்து அவர் முந்தானயையும் ரவிக்கையையும் சேர்த்து வைத்தேன். இதில் என்ன தவறு? ஆனால்? என்னுடைய நண்பர் ஒருவர் இவரைச் சந்தித்தபோது உஷா கூறினராம்: 'மனேரமாவிற்கு எப்போதுமே அதிகப்பிரசங்கித்தனம்தான். என் முந்தானை நழுவினால் இவருக்கு என்ன? எனக்குப் பலர் முன்னிலையில் புத்தி கூறி முந்தானையைப் பற்றி ஒரு வியாக்கியானமே கூறி விட்டார். மலையாளப் படவுலகில் இப்படியெல்லாம் யாரும் எதுவும் கூற மாட்டார்கள்!'

நாங்கள் பத்தாம்பசலிகள்தான்! அதனால் பரவாயில்லே. இந்த அளவிற்குக் கலைத்தாயின் ஆசியைப் பெற்ற நாங்கள், பத்தாம்பசவிகளாகவே இருப்பதில் வெட்கம் ஒன்றுமே இல்லை. ஆலிங்கனம் செய்து கொள்வதும், கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொள்வதும்தான் நட்பு’ என்றால் - எனக்கு அது தேவையே இல்லை.

நான் எல்லோருடனும் நடிக்கிறேன். நடித்துக் கொண்டும் வருகிறேன். ஆனால், நாகேஷூடன் மட்டும் நடிக்க மாட்டேன்! காரணத்தையும் நானே கூறி விடுகிறேன்! நாகேஷ் இல்லாத படமே அப்போது இல்லை. நான் அப்போது அவ்வளவு பிரபலமாக இல்லையாயினும், பல படங்களில் அவருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், ஒரு முக்கிய காரணத்திற்காகப் பல தயாரிப்பாளர்களிடம் என்னை அவர் நடிக்கும் படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கூறிவந்தார். அவர் கூற்றுக்கு அன்று படவுலகில் நிறைய மதிப்பிருந்தது. எனக்குப் படங்கள் இல்லாமல் செய்த பாக்கியம் நாகேஷிற்குக் கிடைத்தது!

அருள் பிலிம்சார் 'நவக்கிரகம்’ நாடகத்தைப் பார்த்த பின்பு, அதைப் படமாக்கக் கதையை வாங்கிக் கொண்டார்கள். நாடகத்தில் நடித்த நானே, படத்திலும் 'அகிலாண்ட்ம்' என்ற அதே வேடத்தில் நடிக்க திரு.பாலசந்தரும், ரு. அரங்கண்ணலும் என்னை ஒப்பந்தம் செய்தனர்.

'நவக்கிரகம்’ நாடகப் பாத்திரத்தை நான் என்றுமே மறக்க முடியாது. படத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருந்தேன். மனோரமாவை மனோரமாவே மறக்கலாம்; ஆனால், மனோரமா ஒரு நாளும் அகிலாண்டத்தை மறக்க மாட்டாள்... மறக்க முடியாது!

'நவக்கிரகம்’ படத்தில் நாகேஷ் நடிப்பதாகப் பிறகு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அவருடன் 'ஜோடி'யாக நடிக்க சந்தர்ப்பம் இல்லை என்பதால், நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் நாகேஷ்? நான் அந்தப் படத்தில் நடிக்கவே கூடாது என்று கூறிவிட்டார், நாகேஷ். வேறு வழியின்றி தயாரிப்பாளரும், இயக்குநரும் என்னை நீக்கிவிட்டு, ராகிணியை ஒப்பந்தம் செய்தார்கள். அன்று நான் அழுத அழுகைதான் இன்று தென்னாட்டில் காவிரியாக ஓடுகிறது!

Manorama

அன்று நான் தூங்கவில்லை! அன்று மட்டும் இல்லை. இன்றைக்கும் அந்த வேடம் கைநழுவிப் போனதற்காக - அதுவும் நான் செய்யாத குற்றத்திற்காக - மனம் வருந்தி அழுகிறேன், துடிக்கிறேன். அப்போதுதான் ஒரு சபதம் செய்தேன்:  இனி, நான் நாகேஷூடன் நடிக்க மாட்டேன் என்ற சபதம்தான் அது. காலம் மாறியது; நாகேஷும் மாறினார். ஆனால், என் சபதம் என்றுமே மாறாது. 'வெள்ளி விழா' படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. அதில் நாகேஷ் நடிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிந்த பின்பு, நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

முதலில் நாடக நடிகர் திரு. ஏ. ஆர். எஸ்-ஸுடன் நடித்தேன். ஆனால், இயக்குநர் பாலசந்தருக்குக் காட்சிகள் திருப்தி தரவில்லை. 'மனோரமா! நாகேஷே மீண்டும் அந்த வேடத்தில், 'வெள்ளி விழா' படத்தில் நடிக்கிறேன் என்கிறார்.

நீ அவருடைய ஜோடியாக நடித்தாலும் பரவாயில்லையாம். நீ சிறிது விட்டுக் கொடுத்தால்...' என்று பட சம்பந்தப்பட்டவர்கள் கேட்டார்கள். ஆனால், நான் விட்டுக் கொடுக்கவில்லை. வேண்டுமென்றால், 'நாகேஷ் நடித்துக் கொள்ளட்டும்’ என்று கூறிவிட்டேன். என் மனத்திற்கினிய வேடத்தைப் பறித்தவருக்கு நான் எதற்கு விட்டுக் கொடுக்க வேண்டும்? நான் சாகும் வரை என் சபதமும் இருக்கும். . நாகேஷுடன் நான் ஒருகாலும் நடிக்க மாட்டேன்.

இது சபதம்தான்; பழிக்குப் பழி அல்ல. அகிலாண்டத்தை என்னிடமிருந்து பிரித்த போது நான் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கிறேன்! எனக்கு வாரிசு இப்படவுலகில் யார் என்று பலர் கேட்கிறார்கள். எனக்கு வாரிசு... ரமாபிரபாதான். இவர் நல்ல நகைச்சுவை நடிகை மட்டுமல்ல, ஒரு நல்ல கேரக்டர் நடிகையும் கூட! ஒரு விஷயம் உலகிலேயே சிரிப்பு நடிகை என்று என்னைப் போல யாரும் இல்லை; பார்த்தீர்களா? இந்திப் பட உலகில் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு நகைச்சுவை நடிகையென்று யாருமே இல்லை, ஹாலிவுட்டில் கூட, நகைச்சுவை நடிகை இல்லை! நான் கிட்டத்தட்ட முந்நூற்றைம்பது படங்களுக்குமேல் நடித்திருக்கிறேன். பலர் என்னை விழாக் கொண்டாடுமாறு கூறியும் நான் மறுத்து விட்டேன். எனக்கு விழாவெல்லாம் கொண்டாடப் பிடிக்காது. அது எனக்கு 'அலர்ஜி'

பேட்டி: சியாமளன்.

(31.03.1974  தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)


from தமிழ் சினிமா https://ift.tt/jBtIL3J
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*