மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனிடையே விழா ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "ராஜ ராஜ சோழன் இந்து அரசனாக ஆக்கப்படுவது கலை இலக்கியம் மட்டுமின்றி சினிமாவிலும் நடைபெற்று வருகிறது" என்று பேசியது விவாதப் பொருளாக மாறியது. இது குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேட்டபோது அவரது கருத்தையும் அவர் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமௌலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்துப் பேசியிருக்கிறார். அந்நிகழ்வில் பேசிய அவர், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் உள்ள இந்து மதத்தின் சித்திரிப்பு குறித்துத் தெரிவித்திருக்கிறார்.
"இந்து மதம், இந்து தர்மம் இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்து தர்மம் என்றால் மதமல்ல. ஏனென்றால் இந்து தர்மமானது இந்து என்ற ஒரு மதம் உருவாவதற்கு முன்பிருந்தே இங்கே இருக்கிறது. அது ஒரு வாழ்வியல் கோட்பாடு, ஒரு தத்துவம். நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நான் இந்து அல்ல, ஆனால் நீங்கள் தர்மத்தை எடுத்துக் கொண்டால், நான் நிச்சயம் இந்துதான்!
பலர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இந்து மதம் தொடர்பான ஒன்றாக நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. ராஜூ கதாபாத்திரம் இறுதியில் துறவி வேடம் பூண்டிருக்கும். பகவத் கீதையிலிருந்து ஒரு சமஸ்கிருத வாசகத்தையும் அவர் சொல்லுவார். மேலோட்டமாகப் பார்த்தால், பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு உபதேசித்ததைப் போன்ற ஒன்றாக, இந்து மதம் சார்ந்த ஒன்றாக இந்தக் காட்சி தோன்றலாம். ஆனால், அதன் உள்ளடக்கமும் அர்த்தமும் அனைத்து இந்தியர்களுக்குமானது. அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும், எந்த இடத்தில் பிறந்திருந்தாலும் அவர்களுக்குமானதுதான். ஏனென்றால், அது இந்த வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கவேண்டும் என்று போதிக்கிறது. முடிவை எதிர்நோக்காமல் ஒரு செயலைச் செய்யவேண்டும் என்கிறது. இதைத்தான் இந்து தர்மமும் போதிக்கிறது. எனவே, நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.
from தமிழ் சினிமா https://ift.tt/tuj8D9o
via Umn news Tamil
