பேய் ஓட்டுவதாக வீட்டுக்குள் மாந்திரீக பூஜை; நடுங்கிய கிராமம்; கதவை உடைத்து 6 பேரை மீட்ட போலீஸ்!

0

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் தசராபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியர் தவமணி-காமாட்சி. இவர்களுக்கு பூபாலன், பாலாஜி என 2 மகன்களும், கோமதி என்ற ஒரு மகளும் இருக்கிறார்கள். மூத்த மகன் பூபாலன் சென்னை மாநகரக் காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அவருக்குத் திருமணமாகி மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். அதேபோல, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பூபாலனின் தங்கை கோமதிக்கு திருமணம் நடந்திருக்கிறது. அவர் கணவர் பிரகாஷ், மின்வாரியத்துறையில் பணிபுரிந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கோமதி மனநலம் பாதிக்கப்பட்டவரைப்போல நடந்துகொண்டிருக்கிறார்.

உடைக்கப்படும் கதவு

ஆனால், அவரின் குடும்பத்தினர் கோமதிக்கு பேய் பிடித்துவிட்டதாக நினைத்து, மந்திரவாதி ஒருவரை சந்தித்து யோசனைக் கேட்டிருக்கிறார்கள். அந்த மந்திரவாதியோ, பேய் ஓட்டுவதற்கான சில வழிமுறைகளைச் சொல்லி அனுப்பியிருக்கிறார். சென்னையிலிருந்து விடுப்பு எடுத்துகொண்டு வந்த அண்ணன் பூபாலன், தன் நிறைமாத மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு தங்கைக்கு நடக்கும் பூஜையில் கலந்துகொண்டிருக்கிறார். அதன்படி, தசராபேட்டையிலுள்ள தங்கள் வீட்டில் கோமதியை அமரவைத்து அவரின் பெற்றோர், சகோதரர்கள் இருவர், கணவர் ஆகியோர் சேர்ந்து பேய் ஓட்டுவதற்கான பூஜைகளை செய்யத் தொடங்கினர். இந்த பூஜை கடந்த 3 நாள்களாக நடந்துவந்ததாகக் கூறப்படுகிறது.

கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததாலும், உள்ளே இருந்து ஆக்ரோஷமாக சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாலும் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே இருந்திருக்கிறார்கள். இதனிடையே, உறவினர்கள் சிலர் ஆரணி தாலுகா காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து இன்று மாலை வரவழைத்தனர். போலீஸார் விரைந்து வந்து, அந்த வீட்டின் கதவை தட்டியபோது, ‘யாராக இருந்தாலும் கதவை திறக்க முடியாது’ என்ற மிரட்டல் வார்த்தை மட்டுமே உள்ளே இருந்து வந்தது. இதையடுத்து, கதவின் லாக்கை உடைப்பதற்காக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட பின் கூடுதல் பாதுகாப்புக்காக அதிரடி படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட குடும்பத்தினர்

இதையடுத்து, ஜே.சி.பி இயந்திரம் மூலம் கதவு உடைக்கப்பட்டபோது, உள்ளே இருந்த குடும்பத்தினர் 6 பேரும் ஆக்ரோஷமாக போலீஸாரை தாக்க முயன்றனர். ஒருவழியாக அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்த நிலையிலும், அடங்காத அந்த 6 பேரும் போலீஸார்மீது பாய்ந்து கடிக்க முயன்றனர். அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து நின்று வேடிக்கைப் பார்த்தனர். இதையடுத்து, அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்திருக்கிறார்கள். பூஜை நடந்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, மாந்திரீக பொருள்கள் சிதறிக் கிடந்தன. மஞ்சளும், குங்குமமும் கலந்த தண்ணீர் வீடு முழுவதும் தெளிக்கப்பட்டிருந்தன. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/C7YgLuR
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*