புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சில தினங்களுக்கு முன்பு நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ”கவர்னர் தமிழிசை சூப்பர் முதல்வராக இருப்பதை படிப்படியாக நிரூபித்து வருகிறார். தற்போது ஆளுநர் மாளிகையில் மக்கள் குறைகேட்பை தொடங்கியுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. மக்களால் தேர்வான அரசை அவர் அவமதிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. கிரண்பேடி காலத்தில் உருவான நிலை இன்னும் தொடர்கிறது. கூட்டணி அரசில் பா.ஜ.க படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி என்.ஆர்.காங்கிரஸை டம்மியாக்குகிறது. இணக்கமாக இருப்பது போல செயல்பட்ட கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமியின் முதுகில் குத்துகிறார். தாங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் கவர்னர் மூலம் ஆட்சி செய்வதை வழக்கமாக்கியுள்ளது பா.ஜ.க. புதுவை அரசுடன் இணைந்து செயல்படுவதாக நாடகமாடி, கவர்னர் தமிழிசை இரட்டை ஆட்சி நடத்துகிறார். ஆனால் முதல்வர் ரங்கசாமியோ தனக்கு முதல்வர் நாற்காலி மட்டும் போதும் என செயல்பட்டு வருகிறார்.
ஆளுநர் மாளிகையில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வை தொடங்கியவுடனே, கூட்டணியிலிருந்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியேற வேண்டாமா? ஆளுநர் மாளிகையில் மக்களை நேரடியாக சந்திப்பதை பா.ஜ.க ஏற்கிறதா என்பதை தெரிவிக்கவேண்டும். புதுவையைப் போன்று தெலங்கானா ஆளுநர் மாளிகையில் மக்களை சந்திக்கும் திராணி கவர்னர் தமிழிசைக்கு உள்ளதா? தி.மு.க-வில் வாரிசு அரசியல் என்று குறிப்பிடும் கவர்னர் தமிழிசை, முதலில் அவர் முதுகை பார்க்கவேண்டும்” என்று கவர்னர் தமிழிசையை கடுமையாக சாடியிருந்தார். அவருக்கு பதிலளித்து கவர்னர் தமிழிசை செய்தியாளர்களுக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில், “மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர், சகோதரர் நாராயணசாமி அவர்களுக்கு வணக்கம். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் அவர்கள் எந்த துறையில், எந்த பதவியில் இருந்தாலும் மக்கள் சேவைதான் பிரதானமான பணி என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.
புதுச்சேரியிலும் செயலர்கள், மாவட்ட ஆட்சியர், துறை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அலுவலகப் பணிகளை விடுத்து மக்களைச் சந்திக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி, அவர்களின் குறைகளைக் கேட்க வேண்டுமென தலைமைச் செயலரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதற்கான சுற்றறிக்கை அனுப்பும்படியும் கூறியிருக்கிறேன். அவரும் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார். அதேபோல, நானும் என்னை சந்திக்க விரும்பி, முன்பதிவு செய்யும் பொதுமக்களை சந்தித்து வருகிறேன். மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள முடியாதவர்கள், ஒரு தினத்தை குறிப்பிட்டால் என்னை சந்திக்க வசதியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் மாதத்தில் இரண்டு நாள்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறேன். இது யாருடைய அதிகாரத்திலும் தலையிடுவதாக ஆகாது. மக்களை சந்திக்கும் பழக்கம் எனக்கு நெடு நாட்களாகவே இருந்து வருகிறது. தெலங்கானா மாநிலத்தில் மக்களை சந்திக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அதற்காக தெளிவுபடுத்துகிறேன். தெலங்கானா மாநிலத்திலும் நான் மக்களை தொடர்ந்து சந்தித்து வருகிறேன்.
பெண்களையும், மாணவர்களையும் சந்திப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கொடுத்திருக்கிறேன். நான் பதவி ஏற்ற முதல் வாரத்திலேயே `பிரஜா தர்பார்' என்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவேன் என்று அறிவித்தேன். இது யாருடைய, எந்த நிகழ்வின் தொடர்ச்சியும் அல்ல. நானே முடிவெடுத்து சந்தித்து வருகிறேன். தெலங்கானா மக்கள் என் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கூறியதைப் போல அங்கு யாரும் என்னை விரட்டவும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. அங்கு என்னுடைய பணி தீவிரமாகவே இருக்கிறது. இந்த கடிதத்தோடு, தெலங்கானா மாநிலத்தில் நான் மூன்றாம் ஆண்டில் செய்த அன்றாடப் பணிகள் பற்றிய 498 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தங்களது மேலான பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். மூன்று ஆண்டுகளுக்கும் தனித்தனியாக புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும் மூன்றாம் ஆண்டில் அண்மையில் வெளியிடப்பட்ட புத்தகம் என்பதால் இதனை அனுப்பி வைக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் அந்த சாதனைப் புத்தகத்தின் அட்டைப் படத்தையும் இணைத்திருக்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/cxI7tjq
via
