புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ்கள் கூட இல்லையென்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றம் சுமத்தியிருந்தார் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா. இந்நிலையில் நேற்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை தள்ளுவண்டியில் படுக்க வைத்து தள்ளிச்சென்ற வீடியோ புதுச்சேரி வாட்ஸ்-அப் குழுக்களில் பரவியது. அதனுடன், ’ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால் பார்சல் வண்டியில் அழைத்துச் செல்லும் அவலம்’ என்ற குறிப்பும் இடம்பெற்றிருந்தது.
ஆனால் அந்த வீடியோவை பார்த்தவர்கள், இது புதுச்சேரி இல்லையென்றும், வடமாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ’ என்றும் பின்னூட்டம் இட்டனர். பின்னர் அது புதுச்சேரியில் எடுக்கப்பட்ட வீடியோ என்று தெரிந்ததும், அதிர்ச்சியில் உறைந்தனர் பொதுமக்கள். புதுவையில் இருந்து ஹவுராவுக்கு வாரம்தோறும் ’புதுச்சேரி – ஹவுரா’ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த ரயில் ஹவுராவில் இருந்து நேற்று காலை புதுவை ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலில் கொல்கத்தாவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். ரயில் புதுவை ரயில் நிலையத்தை நெருங்கியபோது, அந்த குடும்பத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரயிலில் இருந்து இறங்கிய அந்த சிறுவனின் குடும்பத்தினர், சிறுவனை பிளாட்பாரத்தில் படுக்க வைத்துவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து புதுவை சுகாதாரத்துறைக்கு சொந்தமான 108 ஆம்புலன்ஸ் ரயில் நிலையத்துக்கு வந்தது. ஆனால் அந்த ஆம்புலன்சில் இருந்த ஸ்ட்ரெச்சர் உடைந்திருந்ததால், அதை பிளாட்பாரத்துக்கு எடுத்துச் செல்ல முடியவில்லை.

அதனால் ரயில்வே நிலையத்தில் பார்சல்களை வைத்து தள்ளும் தள்ளுவண்டியில், சிறுவனை படுக்க வைத்து ஆம்புலன்சுக்கு தள்ளிச் சென்றனர். அதன்பிறகு அந்த சிறுவனை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்டுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு வேறொரு இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளியை, வேட்டியில் படுக்க வைத்து ஆம்புலன்ஸுக்கு தூக்கிச் சென்ற அவலமும் அரங்கேறியிருக்கிறது. “மூன்று மாதங்களுக்கு முன்பே ஸ்ட்ரெச்சர் உடைந்துவிட்டது என்று அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய ஸ்ட்ரெச்சர் வாங்குவதற்கு ரூ.8,000/- வரை செலவாகும்” என்கிறார்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/q1jHNGO
via
