பி.டி.ஆர் கறி விருந்தின் விளைவு... ஒற்றுமை கூட்டத்துக்கு உத்தரவிட்ட தலைமை! - மதுரை திமுக பரபர

0

மதுரை தி.மு.கவில் நடைபெற்று வரும் கோஷ்டி அரசியல், சில நாள்களுக்கு முன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடத்திய விருந்து நிகழ்ச்சியாலும் அதில் அவருடைய பேச்சாலும் உச்சத்துக்கு சென்றது. இது கட்சியில் இன்னொரு தரப்பை கொந்தளிக்க வைத்த நிலையில், கட்சித் தலைமையின் கடுமையான உத்தரவால் செயற்குழுக் கூட்டம் என்ற பெயரில் ஒற்றுமை கூட்டம் நடத்தப்பட்டது.

கோ.தளபதி-பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை தி.மு.கவில் கோஷ்டி அரசியல் என்பது புதிதல்ல. நீண்டகாலமாக இருந்து வருகிறது. மு.க.அழகிரி கோஷ்டி தற்போது அமைதியான நிலையில் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2016-ல் அரசியலுக்கு வந்த பின்பு மீண்டும் கோஷ்டி அரசியல் தொடங்கியது.

கடந்த 13-ம் தேதி பி.டி.ஆர் நடத்திய கறி விருந்து நிகழ்ச்சி மாநகர செயலாளர் கோ.தளபதிக்கு தகவல் தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டதால் பெரும்பாலன தி.மு.க நிர்வாகிகள் புறக்கணித்ததும், அந்த நிகழ்வில் பி.டி.ஆர் பேசிய பேச்சும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பி.டி.ஆர்

இந்த நிகழ்ச்சியும், பி.டி.ஆர் பேசியதும் கோ.தளபதி, பொன்.முத்துராமலிங்கம், அமைச்சர் பி.மூர்த்தி ஆதரவாளர்களை கோபமடையச் செய்தது. இதனால் அவர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதியிடம் புகார் தெரிவித்தார்கள். இரண்டு தரப்பையும் அழைத்து விசாரித்தவர்கள், 'உங்கள் கோஷ்டி அரசியல் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்ய வாய்ப்பாக அமைந்துவிடும். தொண்டர்கள் சோர்ந்து விடுவார்கள். எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய கன்டன்ட் கொடுக்காதீர்கள். உடனே மதுரையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி ஒற்றுமையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துங்கள்' என உத்தரவிட, தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் வருகை தரும் முதலமைச்சரை வரவேற்க செயற்குழு கூட்டம் என அறிவிப்பு செய்து உடனே எற்பாடுகளை செய்தார் மாநகரச் செயலாளர் கோ.தளபதி.

சட்டசபை கூட்டம் நடக்கவுள்ள நிலையில் சென்னையில் இருந்த பி.டி.ஆருக்கு இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தகவல் சொல்லப்பட, உடனே மதுரை கிளம்பி வந்தார். கட்சித் தொண்டர்கள் மத்தியில் இக்கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை அண்ணாநகர் தனியார் அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி இரண்டே இரண்டு தீர்மானங்களை வாசிக்க, மாநகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கி பேசும்போது, "ஒரு வார்த்தை மெல்லும், ஒரு வார்த்தை கொல்லும். எனவே கட்சியினர் கவனமாக பேச வேண்டும். ஏனென்றால் பத்திரிகைக்காரர்கள் நாம் பேசுவதில் எதையாவது எடுத்து தலைப்பு செய்தியாக்கி விடுவார்கள்." என்றார்.

பொன்.முத்துராமலிங்கம் பேசும்போது, " கடந்த காலத்தில் தி.மு.க சந்தித்த பிரச்னைகளைவிட தற்போது நம் முதலமைச்சர், சந்திக்கின்ற சந்திக்கப்போகின்ற பிரச்னைகள் கடினமானது. முன்னாலே சந்தித்த எதிரிகள் நேரடியாக எதிர்த்தனர். இன்று நாம் சந்திக்கும் எதிரிகள், சாணக்கிய தந்திரம் கொண்டவர்கள். இதுபோன்ற வஞ்சனையுள்ள எதிரிகள் உள்ள காலகட்டத்தில் நம்முடைய செயல் வீரர்கள் ஏற்றுக்கொண்ட கோட்பாட்டில் ஒற்றுமையாக களத்தில் நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தேர்தல் என்பது வரும் போகும். அதைப்பற்றி கவலை இல்லை. என்னுடைய அனுபவத்தில் பல படிக்கட்டுகளை பார்த்தவன்." என்றார்.

இறுதியாக பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "பொதுவாழ்க்கைக்கு, பொது நலனுக்காக வருகின்ற ஒவ்வொரு தொண்டரும் தனி நபர் அரசியல் செய்யக்கூடாது. ஜனநாயக முறையில் விவாதிப்பது எந்தளவுக்கு நல்லதோ, அதுபோல் தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதுதான் சிறப்பான குணம்.

அந்த அடிப்படையில்தான் தலைவர் வருகைக்காக நடத்தப்படும் கூட்டம் குறித்து எனக்கு தகவல் சொல்லப்பட்டவுடன் உடனே கிளம்பி வந்தேன்.

நமக்கு இரண்டு இலக்குகள்தான். இயக்கத்தோட கொள்கைகள் அடிப்படையில் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும். அதை செய்ய கழகமும், மாவட்ட கழகமும் சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்கு நம் தலைவர் கரத்தை பலப்படுத்த வேண்டும். அடுத்த இலக்கு, நம் ஆட்சி நடக்கும் இக்காகாலத்தில் மதுரைக்கும் மாவட்டத்துக்கும் என்னென்ன திட்டங்களையெல்லாம் கொண்டுவர முடியுமோ அதையெல்லாம் கொண்டு வந்து மக்களின் வாழ்க்கையை, வேலை வாய்ப்பை, முன்னேற்றத்தை உறுதி செய்யணும். இந்த இரண்டு இலக்குகளையும் செய்யத்தான் நமக்கு பொறுப்பு அளித்திருக்கிறார் நம் ஒப்பற்ற தலைவர்.

தி.மு.க செயற்குழு கூட்டம்

புரட்சித்தலைவர் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் , என்னைப்போன்ற அடிப்படை தொண்டனுக்கு நிதியமைச்சர் பதவியை வழங்கி இந்தளவுக்கு ஊக்கம் கொடுத்து செயல்பட வைக்கிறார். அதுபோல் உங்கள் அனைவருக்கும் பொறுப்பு கொடுத்திருக்கிறார். அந்த பொறுப்பை சரியாக செய்தீர்களென்றால் சுயமரியாதை உள்ளவர்களாக நாங்களும் இருப்போம். நீங்களும் இருப்பீர்கள்.

பத்து வருடத்துக்கு பிறகு தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. அடுத்து நாடாளுமன்றத் தேர்தலும் அதன் பிறகு சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. அண்ணன் பொன்.முத்துராமலிங்கம் சொன்னதுபோல் தேர்தல் வரும் போகும். ஆனால், பொதுவாழ்வில் உள்ளவர்கள். ஒரு தேர்தல் வெற்றியினால் நிறைவடைய முடியாது. ஒரு தோல்வியினால் பொதுவாழ்க்கையை கைவிட முடியாது.

தனிப்பட்ட முறையில் சொல்கிறேன். இந்த இயக்கம் 1916-ல் தென்னிந்திய நலச்சங்கமாக தொடங்கிய காலத்திலிருந்து என் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, நான் என எங்கள் குடும்பம் முழு ஈடுபாட்டுடன் அர்ப்பணிப்புடன் இந்தப் பணியில் இருக்கிறோம். சூழ்நிலைகள் மாறினாலும் என அடிப்படைக் கொள்கையையோ தன்மையோ மாறவே இல்லை.

காலத்துக்கு அவசியம் என்பதால் எங்க வீட்டுக்கு கேட் போட்டிருக்கிறோமே தவிர கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கு என்றைக்குமே கேட்டே இல்லை. எப்போதும் திறந்தே இருக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம். விருந்தாளியாக நடத்தப்படுவீர்கள். அந்த அடிப்படையில் அனைவரும் இணைந்து தலைவருக்கு வலு சேர்க்கும் வகையில் செயல்படுவோம்" என்றார்.

திடீரென்று நடந்த இந்த ஒற்றுமைக்கூட்டம், மதுரை மாநகர தி.மு.கவினருக்குள் எந்த மாதிரியான விளைவைத் தரும் என்பது போகப்போகத் தெரியும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/wKZWxae
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*