ஆரணி: பேச மறுத்த பள்ளி மாணவி; கண்டித்த பெற்றோர் - விபரீத முடிவெடுத்த இளைஞர்!

0

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்திருக்கும் கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, கம்பி கட்டும் கூலித்தொழிலாளி. 20 வயதாகும், இவரின் இளைய மகன் சாம்ராஜ், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். கடந்த 1 மாதத்துக்கு முன்பு திடீரென வேலையை விட்டுவிட்டு சொந்த கிராமத்துக்கே வந்துவிட்ட சாம்ராஜ், கடந்த 13-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் பிளஸ்-2 மாணவி ஒருவரை யாருக்கும் தெரியாமல், படவேடு மலைக்கோட்டை கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மாணவி பள்ளிக்கு வராதது குறித்து அவரின் தந்தைக்கு போன் செய்து தகவல் கேட்டிருக்கிறார் பள்ளி தலைமை ஆசிரியர். தன் மகள் பள்ளிக்குப் புறப்பட்டு வந்தாளே, வேறு எங்குச் சென்றிருப்பாள் என்று அதிர்ச்சியுடன் தேடியிருக்கிறார் மாணவியின் தந்தை.

சாம்ராஜ்

மாலை பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்புவதைபோல இயல்பாக வீட்டுக்கு வந்த மாணவியை, கோபத்திலிருந்த அவர் தந்தை ‘எங்குச் சென்றாய்?’ என்று கேட்டு அறைந்திருக்கிறார். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜை காதலிப்பதாகவும், தன்னை அவர் கோயிலுக்கு அழைத்துச்சென்றதாகவும் மாணவி கூறினார். தந்தை கண்டித்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ஓடிச்சென்று குதித்திருக்கிறார். அக்கம், பக்கத்தினர் மாணவியை உடனடியாக மீட்டதால் அவர் உயிர்ப் பிழைத்துவிட்டார். இதையடுத்து, மாணவிக்கு அறிவுரைக் கூறிய பெற்றோர், அவர் பிளஸ்-2 முடித்தவுடன் உறவினர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்கவும் பேசி முடிவெடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதையறிந்த சாம்ராஜ் தன் நண்பர்களுடன், நேற்று முன்தினம் மாணவியின் வீட்டுக்கு வந்து மிரட்டியிருக்கிறார். மாணவி பேச மறுத்தபோதும் பழித்தீர்ப்பதாக எச்சரித்திருக்கிறாராம். இதனால், ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை, ‘‘என் முன்னாலேயே என் மகளை மிரட்டுறீயா?’’ என்று ஆவேசப்பட்டு, சாம்ராஜை அடித்து அங்கிருந்து விரட்டியிருக்கிறார். காதல் முறிந்துபோனதால் மன வேதனையில் இருந்த சாம்ராஜ், தன் வீட்டுக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாலை மறியல்

சடலத்தை மீட்ட இளைஞரின் உறவினர்கள், களம்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், ‘‘சம்பந்தப்பட்ட மாணவி பிளஸ்-2 தான் படிக்கிறார். மைனர் பெண் அவர். அவர்கள் தரப்பில் புகார் அளித்திருந்தாலே சாம்ராஜ் ‘போக்ஸோ’ சட்டப்பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பார். ஆனாலும், மாணவியின் தந்தை அவரை அடித்தது தவறு. எனவே, இதுசம்பந்தமாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறோம். போராட்டத்தை கைவிடுங்கள்’’ என்று சொன்னதும், கூட்டம் கலைந்தது. போலீஸார், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/pJSNDCx
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*