கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. அந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன், தேவர் ஜெயந்தி விழா நடந்து கொண்டிருப்பதால் தென் மாவட்டங்களில் போலீஸார் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நெல்லை காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனங்களை மறித்துச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மறித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் இருவரையும் சோதனையிட்டனர். அப்போது அவர்கள் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக இருவரையும் விசாரணைக்காக பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் இருவரும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (20), பால்துரை (24) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கெனவே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அதனால் இருவரும் அனுமதியற்ற கைத்துப்பாக்கி எடுத்து வந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டுத் துப்பாக்கி மூலம் ஏதேனும் சதிச் செயலில் ஈடுபடத் திட்டமிட்டார்களா என்பது பற்றி விசாரித்தனர். அத்துடன், எதிரிகள் யாரையாவது கொல்லும் நோக்கத்துடன் வந்தார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்தது. பின்னர் இருவரும் கைதுசெய்யப்பட்டதுடன், நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/q6g23Re
via
