தூத்துக்குடி: முன்விரோதம்; தீராத பகையுணர்வு - உறவினரை `லிஃப்ட்' கேட்பது போல் வெட்டிய சிறுவன்!

0

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், மீரான்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவருக்கு லதா என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். கார்த்திக் ராஜாவும் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவனும் நெருங்கிய உறவினர்கள். இருவருமே மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். உறவினர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி மது அருந்துவது வழக்கமாம். மது அருந்தும்போது இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்படுவதும், பின்னர் சமாதானமாகி ஊர் சுற்றுவதும் வாடிக்கையாக இருந்து வந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கார்த்திக் ராஜாவின் மற்றொரு உறவினரான சம்பத் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறுவன் ஓட்டிவந்த பைக் மோதியதாம்.

உயிரிழந்த கார்த்திக் ராஜா

இதில் சம்பத் படுகாயமடைந்தார். பைக்கில் மோதியது பற்றி கார்த்திக் ராஜா, அவர் தம்பி கனராஜ், சம்பத்தின் பேரன் மூன்று பேரும் சிறுவனை அழைத்து விசாரித்து தாக்கியிருக்கின்றனர். இதனால் கோபமடைந்த சிறுவன், கார்த்திக் ராஜாவை  பார்க்கும் போதெல்லாம் முறைத்தபடியே சென்றிருக்கிறார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு கார்த்திக் ராஜாவை முறைத்த சிறுவனை அழைத்துப் பேசியதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவு விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து கார்த்திக் ராஜா, பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது வழியில் நின்று கொண்டிருந்த சிறுவன் கையசைத்து பைக்கை நிறுத்தச் சொல்லி வீடு வரை ’லிஃப்ட்’ கேட்டிருக்கிறார்.  அவருக்கு கோபம் தணிந்து விட்டதாக நினைத்த கார்த்திக் ராஜா முகேஷை பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். சிறிது தூரம் சென்றபோது பைக்கை நிறுத்தச் சொன்ன சிறுவன், அரிவாளால் கார்த்திக் ராஜாவின் தலைப்பகுதியில் வெட்டினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கார்த்திக் ராஜா, சுதாரித்துக் கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் ஓடியிருக்கிறார். சிறுவனும் பின் தொடர்ந்து சென்று கார்த்திக் ராஜாவின் உடலில் பல இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார். 

விளாத்திகுளம் காவல் நிலையம்

இதனையடுத்து கார்த்திக் ராஜாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கார்த்திக் ராஜாவை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கார்த்திக் ராஜாவின் உறவினர்கள் சாலை  மறியலில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பாதற்றமும் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலைசெய்த சிறுவனை போலீஸார் கைதுசெய்தனர். ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த தகராறினை மனதில் வைத்துக் கொண்டு 16 வயது சிறுவன், உறவினரையே அரிவாளால் வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   



from மாவட்ட செய்திகள் https://ift.tt/lBMFw5z
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*