`ஆதி திராவிடர், பழங்குடியினர் கல்வி சார்ந்த 13 திட்டங்களுக்கு பூஜ்ஜியம் நிதி!' - ஆர்.டி.ஐ தகவல்

0

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் கல்வி சார்ந்த 33 திட்டங்களில் வெறும் 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, மற்ற 13 திட்டங்களுக்கு பூஜ்ஜிய நிதி ஒதுக்கப்படுவதாக ஆர்.டி.ஐ மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான திட்டங்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திக், "கடந்த 2021-22 நிதியாண்டு பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.4,142 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில் கல்வி சார்ந்த 33 திட்டங்கள் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதிலுள்ள 20 திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.1,423 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது.

கார்த்திக்

மீதமுள்ள 13 திட்டங்களுக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யப்படவில்லை. பூஜ்ஜியம் நிதி ஒதுக்கீடு என்றளவில் அலட்சியம் காட்டியிருக்கின்றனர்.

குறிப்பாக, தமிழக முதலமைச்சரின் மெரிட் விருது, மேல்நிலைப் பள்ளி மாணவியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் திட்டம், பள்ளிகளில் லேப் உபகரணங்கள் கொள்முதல், பள்ளிகளுக்கான சிறப்பு பரிசு திட்டம் உள்ளிட்ட 13 முக்கிய திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தவில்லை என்று தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்திருக்கிறது.

ஆதிதிராவிடர் நலத்துறை நிதி

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசு பட்ஜெட் ஒதுக்கீடு செய்யும்போது ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை பொதுமக்கள் வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அரசும் தெரிவிக்க முன்வருவதில்லை. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைப் பயன்படுத்தாமல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி நிதி செலவு செய்யாமல் அரசு கஜானாவுக்குத் திருப்பி ஒப்படைக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் சில மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்தது.

எனவே, தமிழக அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கிய நிதியை, கல்வி சார்ந்த அனைத்து திட்டங்களுக்கும் முழுமையாக பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/wfxZlFG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*