தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர், கட்சியில் உறுப்பினராக இல்லாதவர்களை ஓ.பி.எஸ், மாவட்ட செயலாளராக நியமனம் செய்திருப்பதாக பேசியியிருக்கிறார். அத்துடன் ஓ.பி.எஸ் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரை கடும் விமர்சனம் செய்ததும் இரு தரப்பினரிடமும் விவாதத்துக்கு உள்ளாகியிருப்பது தஞ்சை அ.தி.மு.க வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா, `தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.கவை இணைத்து விடுவேன்’ என்கிறார். எடப்பாடி பழனிசாமி, `இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார். ஓ.பி.எஸ், `எடப்பாடி பழனிசாமியை தனியாக கட்சி தொடங்கி கொள்ளுங்கள்’ என்கிறார். `அவரவர் தலைமையில் இயங்ககூடிய கட்சியில் இருந்தபடியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்’ என டி.டி.வி தினகரன் கூறுகிறார்.
தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு நாளுக்காக அ.ம.முகவினர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோரின் போட்டோவுடன் ஒன்றிணைவோம், வெற்றிபெறுவோம் என போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். இது போன்ற நிகழ்வுகளால் அ.தி.மு.கவின் முதுகெலும்பு என அனைவராலும் சொல்லப்படும் அடிமட்ட தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வைத்திலிங்கத்திடம் நெருக்கமாக இருந்த பலர் எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பதுடன் வைத்திலிங்கத்திற்கு எதிராக தீவிரமாக களமாடி வருகின்றனர். குறிப்பாக வைத்திலிங்கத்தால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏவான மறைந்த தங்கமுத்துவின் குடும்பத்தினர் எடப்பாடி அணியில் இருந்து கொண்டு வைத்திலிங்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இது குறித்து மூத்த அதிமுக நிர்வாகி சிலரிடம் பேசினோம், ``வைத்திலிங்கம் தங்கமுத்துவால் வளர்க்கப்பட்டவர். சசிகலா குடும்பத்தினர் பரவலாக கோலோச்சிய சமயத்தில் அவர்களுக்கு பணிந்து போகாததால் சசிகலா குடும்பத்தினரின் பார்வை வைத்திலிங்கம் மீது விழுந்தது. அவரும் பெரும் வளர்ச்சியடைந்தார். அத்துடன் துரை.கோவிந்தராஜன், தங்கமுத்து போன்ற சீனியர்களை வைத்திலிங்கம் ஓரம்கட்டினார். அதுவே 2016-ல் வைத்திலிங்கம் தோற்பதற்கு காரணமாக அமைந்தது.
தங்கமுத்து மறைவிற்கு பிறகு கூட அவரின் குடும்பத்தினர் மேலே வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் வைத்திலிங்கம். இதனால் தங்கமுத்து மகன் டாக்டர் தங்க.கண்ணன், தம்பி ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டும் அதனை தடுத்து விட்டார். ஒரு முறை பிரசாரத்தின் போது, `தஞ்சையின் தங்கம் தங்கமுத்து’ என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாயாலேயே பாராட்டப்பட்டவர் ஆனாலும் அவருக்கான வளர்ச்சி வாய்க்கவில்லை.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க-வின் மாவட்ட செயலாளராக இருந்த போது அம்பாசிடர் காரில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்து கட்சியை வளர்த்த தங்கமுத்துவை, வைத்திலிங்கம் ஓரம்கட்டியதன் காரணம் இப்போது வரை புரியவில்லை என புலம்பி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதுவே தங்கமுத்து குடும்பத்தை சேர்ந்த நிர்வாகிகளாக இருக்க கூடியவர்கள் வைத்திலிங்கத்தை எதிர்ப்பதற்கு காரணமாக அமைந்தது.
அ.தி.மு.க சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தங்கமுத்துவின் தம்பியும், தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான ராஜமாணிக்கம், அதன் வெளிப்பாடாக தன் ஆதங்கத்தை கொட்டியிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற மோதல்கள் நிலவி வரும் சூழலில் அ.தி.மு.க இணைப்பு சாத்தியமாகுமா என்பதே தஞ்சாவூர் மாவட்ட தொண்டர்களின் கேள்வியாக இருக்கிறது.
ஆர்ப்பாட்டத்தில் ராஜமாணிக்கம் பேசியதாவது, ``ஓ.பன்னீர்செல்வம் ஒரு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டினார். அதில் அவர் பேசும் போது தனியே கட்சி ஆரம்பியுங்கள் என எடப்பாடி பழனிச்சாமிக்கு சவால் விடுகிறார். நாங்கள் எதற்கு தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும். இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் உள்ளது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. என்பது அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றால் நீங்கள் தனியாக கட்சி ஆரம்பியுங்கள்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் 88 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார். அப்படி அவர் நியமனம் செய்த மாவட்ட செயலாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக உள்ளார்களா. அ.தி.மு.க.விக்கு துரோகம் செய்த பண்ருட்டி ராமச்சந்திரனை வைத்து கொண்டு பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களே கிடையாது.
ஓ.பி.எஸ் ஆதாரவாளரான வைத்திலிங்கம் தனக்கு பிடிக்காதவர்கள் பலரை கட்சியை விட்டு நீக்கினார். வைத்திலிங்த்தை கட்சியில் ஆளாக்கிய முன்னாள் தஞ்சை எம்.எல்.ஏ தங்கமுத்துவுக்கு நன்றியை மறந்து துரோகம் செய்தார். முன்னாள் கொறடாவான மறைந்த துரை.கோவிந்தராஜன் தஞ்சை மாவட்டத்தில் பட்டி தொட்டிக்கெல்லாம் சென்று அ.தி.மு.கவை வளர்த்தார் அவருக்கு வைத்திலிங்கம் துரோகம் இழைத்தார். அவர் பெயரை போட்டால் நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று சொன்னவர் வைத்திலிங்கம்.
பகுதி செயலாளர் சரவணன், ஒரத்தநாடு மா.சேகர், வழக்கறிஞர்கள் தங்கப்பன், முருகேசன் உள்ளிட்ட பலரையும் கட்சியிலிருந்து ஒரங்கட்டினார். பட்டுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ சேகருக்கு தொகுதியில் சீட் கிடைக்க கூடாது என்பதற்காக கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினார். வைத்திலிங்கத்தால் ஆயிரக்கணக்கானோர் கட்சியை விட்டு வெளியேறினர். தற்போது சென்னையில் இருந்தபடி வைத்திலிங்கம் என்னவெல்லாமோ பேசுகிறார். தஞ்சை மண்ணில் வந்து அவரால் பேச முடியுமா? இங்கு எல்லோருக்கும் உண்மை என்னவென்று தெரியும்.
வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட சிலர் மட்டுமே பன்னீர்செல்வம் அணியில் உள்ளனர். ஆனால் உண்மையான அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் இயங்கி வருகிறது. தஞ்சை மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையாக உள்ளது” என்றார்.
`வைத்திலிங்கம் கட்சிக்காக உழைத்ததனாலேயே அம்மா அவரை உயர்த்தி அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை தந்து அழகு பார்த்தார். நாங்கள் நடத்த கூடிய கூட்டங்களில் ராஜமாணிக்கத்தின் பேசியதற்கு பதிலடி கொடுப்போம்’ என வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் கூறி வருவது தஞ்சாவூர் அ.தி.மு.க வட்டாரத்தில் சூட்டை கிளம்பியிருக்கின்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/8mnMgYr
via
