பாம்பு தீண்டி உயிரிழந்த தாய்; சோகத்திலும் கிராம உதவியாளர் தேர்வெழுதிய மகள்!

0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குருமலை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவரின் மனைவி பசுபதி. இருவரும் விவசாயக்கூலி தொழிலாளர்கள்.  இவர்களுக்கு கனகரத்தினம் என்ற ஒரே மகள். கனகரத்தினத்தின் கணவர் இருளப்பன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவினால்  உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 8-ம் வகுப்பு படித்து வரும் வசந்த் என்ற மகனும், 3-ம் வகுப்பு பயிலும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். கணவரை இழந்த நிலையில், கனகரத்தினம் தன் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

உயிரிழந்த பசுபதி - மகள் கனகரத்தினம்

கடந்த 6  நாள்களுக்கு முன்பு, வயல் வேலைக்குச் சென்றபோது எதிர்பாராத விதமாக பசுபதியை விஷப்பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. இதனயடுத்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பசுபதி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 3-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கனகரத்தினம் ஏற்கெனவே கிராம உதவியாளர் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று (4-ம் தேதி) அத்தேர்வு நடந்தது. தாய் இறந்த நிலையிலும் அத்தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிவடைந்த பின்னர் தன் தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். ``என் கணவர் உடல்நலக்குறைவால அஞ்சு வருஷத்துக்கு முன்னால இறந்துட்டாரு. ரெண்டு பிள்ளைகளை வச்சுக்கிட்டு குடும்பத்த நடத்த ரொம்ப சிரமப்பட்டேன்.

எனக்கு ஆறுதல் சொல்லி எங்க அம்மா, அப்பாதான் என்னை பார்த்துக்கிட்டாங்க. அதுல பெருசா வருமானம் கிடையாது. இருந்தாலும் பிள்ளைகளைப் படிக்க வைக்க நானும் சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்து என்னால முடிஞ்ச பணத்தை குடும்பச் செலவுக்காக அம்மாகிட்ட கொடுத்து வந்தேன். கிராம உதவியாளர் தேர்வுக்கு ஏற்கெனவே  அப்ளை செஞ்சிருந்தேன்.

கோவில்பட்டி

தேர்வுக்காக ரெண்டு மாசமா படிச்சிக்கிட்டு இருந்தேன். ராத்திரி நேரத்துல படிக்கும் போது எங்க அம்மாதான் காபி போட்டுக் கொடுத்து பக்கத்துலயே உட்கார்ந்திருப்பாங்க. `இந்த வேலை கிடைச்சுச்சுன்னா உன் பிள்ளைகள் எதிர்காலம் நல்லா இருக்கும்மா. எந்த சூழ்நிலை வந்தாலும் பரீட்சையை கண்டிப்பா எழுதணும்மா’னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா, இப்படி எங்க அம்மாவே என்னை விட்டுப் போவாங்கன்னு நான் நினைக்கல.

அம்மாவை விட தேர்வு ஒண்ணும் பெருசு இல்ல. ஆனா, எங்க அம்மா சொன்ன அந்த வார்த்தைக்காக மனசை தேத்திக்கிட்டு தேர்வை எழுதுனேன். தேர்வு அறையை விட்டு வெளிய வந்ததுமே வெடிச்சு அழுதுட்டேன்” எனச் சொல்லி விம்மி அழுதார் கனகரத்தினம். தாய் இறந்த நிலையிலும் தேர்வு எழுதிவிட்டு தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். தாயின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதது அனைவரையும் நெகிழ்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.  



from மாவட்ட செய்திகள் https://ift.tt/JN7Og9m
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*