பக்கத்து வீட்டில் புகுந்த கஞ்சா வியாபாரி; காவலுக்கு நின்ற மனைவி! - தாய், மகளுக்கு நேர்ந்த கொடூரம்

0

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்தவர் பகுடு என்கிற பாஸ்கரன், வயது 33. கஞ்சா வியாபாரியான இந்த நபர் ஏற்கெனவே நான்கைந்து பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும், பின்னர் இவருடன் வாழப்பிடிக்காமல் அந்தப் பெண்கள் பிரிந்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது, துர்கா என்ற 30 வயது பெண்ணுடன் குடும்பம் நடத்திவருகிறார் அவர். கஞ்சா விற்பனை தொடர்பாகவும் பகுடு பாஸ்கரன் மீது சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் விவரிக்கிறது போலீஸ். இந்த நிலையில், தனது பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் கணவரைப் பிரிந்த பெண்ணுடன் பாஸ்கரன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தாய், மகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அடைக்கலம் தேடி ஆற்காடு பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.

பகுடு பாஸ்கரன்

அந்தப் பெண் அருகிலுள்ள கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். அவர் மகள் அரசுப் பள்ளி ஒன்றில் பிளஸ்-டு படிக்கிறார். அந்தப் பெண் வேலைக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் பாஸ்கரன் வலியச் சென்று பேச்சுக்கொடுப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டுவந்திருக்கிறார். ஆதரவுக்கு யாருமில்லாததால் அந்தப் பெண்ணும் தனக்கு நேர்ந்த இன்னல்களை பொறுத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாஸ்கரன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில், பாஸ்கரனின் மனைவி துர்காவுக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே ‘ஏதோ’ தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், பழிவாங்கும் நோக்கத்தில் இருந்தார் துர்கா.

கணவன் சிறையிலிருந்து கடந்த மாதம் 27-ம் தேதி வெளியே வந்ததும், ‘பக்கத்து வீட்டுப் பெண்ணை ஏதாவது செய்ய வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். ஏற்கெனவே அந்தப் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலிருந்த பாஸ்கரன் ‘இதுதான் சமயம்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். மனைவி வகுத்துகொடுத்த திட்டத்தின்படி, 28-ம் தேதி நள்ளிரவு, கணவன், மனைவி இருவரும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினர். வீட்டுக்குள் மகளுடன் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண் எழுந்து வந்து கதவை திறந்தார். அப்போது, வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, தாயையும் மகளையும் தாக்கியிருக்கிறார்கள். பின்னர், கத்தியைக் காட்டி அவர்களின் வாயை பொத்தி கை, கால்களையும் கட்டிப் போட்டிருக்கிறார்கள். பின்னர், பாஸ்கரனின் மனைவி துர்கா, கதவை வெளிப்புறமாக சாத்திவிட்டு காவலுக்கு நின்றிருக்கிறார்.

துர்கா

உள்ளே இருந்த பாஸ்கரன் கஞ்சாவை புகைத்துவிட்டு முதலில் 17 வயது பள்ளி மாணவியிடம் ஆடைகளை கழற்றச்சொல்லி அத்துமீறியிருக்கிறார். இதனை தனது செல்போனிலும் போட்டோ மற்றும் வீடியோவாகப் பதிவுசெய்திருக்கிறார். இதையடுத்து, அந்த மாணவியை வீட்டின் கழிவறைக்குள் தள்ளி பூட்டிருக்கிறார். பின்னர், மாணவியின் தாயிடமும் அதேபோல பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார். ‘இதுபற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் தீர்த்துக்கட்டிவிடுவேன்; இருவரின் நிர்வாண வீடியோக்களையும் லீக் செய்துவிடுவேன்’ என மிரட்டிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார் பாஸ்கரன். செய்வதறியாமல் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நினைத்து கலங்கி நின்றி தாயும், மகளும் ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். அதிர்ச்சியடைந்த போலீஸார், போக்சோ உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து தலைமறைவாக இருந்த பகுடு பாஸ்கரனையும், அவரின் மனைவி துர்காவையும் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/a0LwCnJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*