தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. இவரின் நண்பர் சில்வர்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து. இருவரும் கட்டடத் தொழிலளிகள். கட்டடத் தொழிலுக்குச் சென்றபோது இருவரும் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்களாம். சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில்தான் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கமாம். இந்த நிலையில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், கோபமடைந்த பூல்பாண்டி, சிறிய கல்லை எடுத்து மாரிமுத்து மீது வீசியுள்ளார். பதிலுக்கு அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து பூல்பாண்டியின் தலையில் போட்டுள்ளார் மாரிமுத்து. இதில் தலையில் பலத்த காயமடைந்த பூல்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுபோதையில் நண்பர் உயிரிழந்தது கூடத் தெரியாமல் அங்கிருந்து கிளம்பிய மாரிமுத்து, அருகில் உள்ள டாஸ்மாக் பாருக்குள் சென்று நண்பரின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதைப் பற்றி சொல்லியுள்ளார்.
பதறிப்போன பார் ஊழியர்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லியுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர். அதுவரையிலும் மதுபோதையில் டாஸ்மாக் கடை முன்பாக நின்று கொண்டிருந்தார் மாரிமுத்து. “நானும் பூல்பாண்டியும் ப்ரெண்ட்ஸ்தான். அவன் என் மேல சின்ன கல்லைத் தூக்கிப் போட்டான். நான் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டேன். சும்மாதான் போட்டேன். மயக்கத்துலதான் இருக்கான். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா காப்பாத்திடலாம், பொழச்சுக்குவான்” என போலீஸாரிடம் சொல்ல அதிர்ந்துபோனார்கள் போலீஸார்.
இதுதொடர்பாக மாரிமுத்துவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பாழடைந்த கட்டடத்தின் மாடியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதே பகுதியில் வழிப்பறிச் சம்பவமும் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். திருட்டு பைக் விற்ற பிரச்னையில் கொலை, தவறான மின் இணைப்பால் கொலை என கடந்த 3 நாள்களில் 4 கொலைச் சம்பவங்கள் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/g1JyCkU
via
