தஞ்சை பெரியகோயிலுக்குள் செல்லாமல் திரும்பிய சேகர் பாபு; சென்டிமென்ட் காரணமா... திமுக சொல்வதென்ன?

0

தஞ்சாவூர், பெரியகோயில் உலகப்புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது. உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. தினமும் உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரியகோயிலுக்கு வந்து செல்கின்றனர். பிரதோஷ தினத்தில் பெரியகோயிலிலுள்ள மகா நந்திக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து கலந்துகொள்கின்றனர்.

பெரியகோயில்

பெரியகோயிலுக்கு வருபவர்களின் எண்னிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பெரியகோயில் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தஞ்சாவூருக்கு வரும் தி.மு.க அமைச்சர்கள் பலரும் பெரியகோயிலுக்குள் செல்லாமல் திரும்பிவிடுகின்றனர். பதவி பறிபோய்விடும் என்ற பயத்தின் காரணமாகவே அமைச்சர்கள் இப்படி தவிர்ப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் பெரியகோயிலுக்கு உள்ளே செல்லாமல் தவிர்த்திருப்பது, தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இது குறித்து பெரியகோயில் ஆர்வலர்கள் தரப்பில் பேசினோம். நம்மிடம் பேசியவர்கள், ``தஞ்சாவூர் பெரியகோயிலின் அழகு, பிரமிக்க வைக்கும் கட்டுமானம் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும் மெய்சிலிர்க்கப் பேசி வருகின்றனர். பொதுமக்கள் தொடங்கி இந்திய அளவில் உயர் பொறுப்பிலிருக்கும் பலரும் பெரியகோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கின்றனர்.

பெரியகோயில் அருகில் அமைச்சர் சேகர் பாபு, அதிகாரிகள்

ஆனால், அரசியல்வாதிகள் கோயிலுக்கு வந்தால் அவர்களுடைய பதவி பறிபோய்விடும் என்ற சென்டிமென்ட் பல காலமாக நிலவி வருகிறது. வதந்தியாகப் பரவிய இந்தத் தகவல், அரசியலில் இருப்பவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பதவி பறிபோகும் என்பதற்கு உதாரணமாக, தேவையில்லாத சில சம்பவங்களையும் பேசுகின்றனர்.

தஞ்சாவூர் பெரியகோயில்

இந்த நிலையில், தற்போது இருக்கும் தி.மு.க அமைச்சர்கள் பெரியகோயில் செல்லாமல் புறக்கணிப்பதன் மூலம், அந்த சென்டிமென்ட் பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது தெளிவாக உணர முடிகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பெரியகோயில் சார்பாக நடைபெறும் மகா சிவராத்திரி விழாவுக்கு இடம் தேர்வு செய்வதற்காக வந்தார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்தனர். பெரியகோயில் சுற்றுச்சுவரை ஒட்டியிருக்கும் பெத்தண்ணன் கலையரங்கத்தினைப் பார்வையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள்வரை அங்கு இருந்தவர், கோயில் உள்வளாகத்துக்குள்கூட செல்லவில்லை. பெரியகோயில் வாசல்வரை வந்தவர், கோயிலுக்குள் செல்லாமல் திரும்பினார். அதைத் தொடர்ந்து, கும்பகோணத்தில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ஊர்த் திரும்பினார்.

இதைப் பார்க்கும்போது, அவருக்கு நேரம் இருந்திருப்பது தெரிகிறது. ஆனால், பதவி பறிபோய்விடும் என்ற பயத்தாலேயே அவர் கோயிலுக்குள் செல்வதை தவிர்த்திருக்கிறார். இதே போல் கடந்த ஐப்பசி மாதம் ராஜராஜ சோழன் சதய விழா நடைபெற்றது. கோயிலுக்கு வெளியில் இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பிலும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

ஆனால், தஞ்சாவூரின் பொறுப்பு அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதில் கலந்துகொள்ளவில்லை. இதே போல் சதய விழா தினத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பதாக இருந்தது. அதற்காக, செய்தி மக்கள் தொடர்புதுறை அதிகாரிகள் மாலையுடன் காத்திருந்தனர். ஆனால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை, திடீரென அமைச்சர் அதனை தவிர்த்து விட்டார்.

பெரியகோயிலுக்கு அருகில் அமைச்சர், தி.மு.க எம்.எல்.ஏக்-கள்

பின்னர், அமைச்சர்கள் அன்பில் மகேஸ், வெள்ளக்கோவில் சாமிநாதன் இருவரும் கும்பகோணத்தில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ராஜராஜ சோழன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதையெல்லாம் பார்க்கும்போது, பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட் தி.மு.க அமைச்சர்களிடம் ஆழமாகவே இருக்கிறது என்பது தெரிகிறது. அதனாலேயே கோயிலுக்குள் செல்வதையும், பெரியகோயில் தொடர்பான நிகழ்ச்சிகளையும் தவிர்க்கின்றனர்" என்றனர்.

இது தொடர்பாக திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வும், மத்திய மாவட்டச் செயலாளருமான துரை.சந்திரசேகரனிடம் பேசினோம். நம்மிடம் பேசியவர், ``மகா சிவராத்திரி நடத்துவது தொடர்பாக மூன்று இடங்களை அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டார். கோயிலுக்குள் நிகழ்ச்சி எதுவும் இல்லாததால் உள்ளே செல்லவில்லை" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/DPi0eaA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*