வேலூர்: நடுரோட்டில் மனைவியை சரமாரியாக குத்திக் கொன்ற கணவன் - குடியால் சீரழிந்த குடும்பம்!

0

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகிலிருக்கும் அழிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் (42). கட்டட மேஸ்திரியான இவர், ஏற்கெனவே திருமணமானவர். தினமும் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தியதால், முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய உறவினர் மகளான புனிதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தினார். இந்தத் தம்பதிக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில், தினமும் மதுபோதையில் 2-வது மனைவியையும் அடித்து உதைப்பது என சித்ரவதை செய்திருக்கிறார் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் - புனிதா

அதோடு, வேறு சில ஆண்களுடன் தொடர்புப்படுத்தி அவரது நடத்தைக் குறித்தும் தவறாகப் பேசி வந்திருக்கிறார். இதனால், மனவேதனையடைந்த புனிதா, சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனிடையே, மதுபோதையில் ஒருநாள் ஜெய்சங்கர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்திருக்கிறார். இதனால், பதறிபோன புனிதா தன்னுடைய கணவனை மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக்கொண்டது முதல், படுத்த படுக்கையாகக் கிடந்த அவர் குணமாகும் வரை அனைத்துவிதமான பணிவிடைகளையும் செய்திருக்கிறார்.

அதோடு, குடும்ப வருமானத்துக்காக சின்னவரிகம் கிராமத்திலுள்ள ஷூ கம்பெனியிலும் வேலைக்குச் சேர்ந்து, மீண்டும் கணவனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். உடல்நலம் தேறியப் பின்னர் ஜெய்சங்கர் மீண்டும் மதுகுடித்து விட்டு வழக்கம்போல மனைவியிடம் தகராறு செய்துவந்தார். இதனால், அவர்களது இல்லற வாழ்க்கையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்றிரவு ஷூ கம்பெனியில் வேலையை முடித்துவிட்டு பஸ்ஸில் வந்து அழிஞ்சிக்குப்பத்தில் இறங்கினார் புனிதா.

கொலை காட்சிகள்

பேருந்து நிறுத்தம் அருகே அவருடைய கணவன் ஜெய்சங்கர் மதுபோதையில் கத்தியுடன் காத்திருந்தார். சாலையில் நடந்துசென்ற மனைவியை மறித்து கத்தியால் சரமாரியாக குத்தினார். அப்போது, சாலையில் நடந்துசென்ற பலரும் வேடிக்கைப் பார்த்தனரே தவிர, அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஒருவர்கூட முன்வரவில்லை. ஒரேயொரு பெண் மட்டுமே குத்துப்பட்டு கிடந்த புனிதாவை அருகில் சென்று பார்க்கிறார். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட புனிதா ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதுதொடர்பாக, மேல்பட்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, ஜெய்சங்கரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தையின் இந்தக் கொடூரச் செயலால் 2 குழந்தைகளும் ஆதரவின்றி பரிதவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குடியால் ஒரு குடும்பமே சீரழிந்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/RO4deug
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*