குடியரசு தினவிழா: பெற்றோர் இல்லாத மாணவர்களின் கலை நிகழ்ச்சி, நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!

0

தஞ்சாவூரில் நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில் அரசு காப்பகத்தில் உள்ள, பெற்றோர் இல்லாத ஆதரவற்ற மாணவர்களின் சிலம்பம், யோக உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதை பார்த்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும், `கலக்கிட்டீங்க...’ என நேரில் பாராட்டியது அந்த மாணவர்களை நெகிழச் செய்தது.

தஞ்சாவூரில் குடியரசு தினவிழா

நாட்டின் 74வது குடியரசு தினவிழா இன்று இந்தியா முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தஞ்சாவூரில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தன் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கலந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சமாதானப் புறா மற்றும் வண்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் வியக்க வைக்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக பெற்றொர் இல்லாத மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. சமூக பாதுகாப்பு நலத்துறையின் கீழ் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள பெரும்பாலான மாணவர்களுக்கு பெற்றோர் இல்லை.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குடும்பத்தினருடன்

அந்த மாணவர்களுக்கு வேண்டியவற்றை அரசு செய்து பாதுகாத்து பராமரித்து வருகிறது. ஆதரவற்ற மாணவர்கள் ஒவ்வொருவொரும் தனித்திறனில் சிறந்து விளங்குகின்றனர். இந்நிலையில் குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற, அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

பெற்றோர் இல்லாத 40 ஆதரவற்ற மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து சிலம்பம், யோகா உள்ளிட்டவற்றை நேர்த்தியாக ஐந்து நிமிடங்களுக்கு மேல் பலரும் வியக்கும் வகையில் செய்து அசத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் எழுந்து சென்று அவர்களை தட்டிக்கொடுத்து `கலக்கிட்டீங்க’ எனப் பாராட்டினார்.

ஆதரவற்ற மாணவர்களுடன் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார்

அப்போது மாணவர் ஒருவர், `இதையெல்லாம் பார்க்க எங்க பெற்றோர் இல்லை’ எனக் கூற அங்கிருந்த பலரும் கண்கள் கலங்கினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், `ஒவ்வொரு வருட நிகழ்ச்சியிலும் பெற்றோர் இல்லாத நிலையிலும் இந்த மாணவர்கள் கலக்குகின்றனர்’ எனக்கூறி அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நெகிழ்ச்சியுடன் முடிந்தது நிகழ்வு!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Zw6EFXG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*