பிரசவித்த 3 மணி நேரத்தில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய பெண்; குவியும் பாராட்டு!

0

பீகார் மாநிலம், பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்மணி குமாரி, வயது 22. இவர், தனது சொந்த ஊரான கட்டோரி கிராமத்தில் படித்துக் கொண்டிருந்தார். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத நிலையில், அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.


 திருமணத்திற்குப் பின்னர், சொந்த ஊரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பைல்வா என்ற கிராமத்தில் ருக்மணி குமாரி வசித்து வந்தார்.

ருக்மணி குமாரி

இந்த நிலையில், மீண்டும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடிவு செய்து, ருக்மணி அதற்காக விண்ணப்பித்தார். அதே நேரம், நிறைமாத கர்ப்பிணியாகவும் அவர் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) அவர் கணிதத் தேர்வை எழுதினார். அடுத்த நாள் அறிவியல் தேர்வு எழுத வேண்டிய நிலையில், அவருக்கு பிரசவ வலி உண்டானது. எனினும், பிரசவத்தால் தேர்வு தடைப்படக்கூடாது; அறிவியல் தேர்வை எழுதியாக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்; இதனை தன் குடும்பத்தாரிடமும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த புதன் கிழமை காலையில் 3 மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வு மையத்திற்குச் சென்ற ருக்மணிக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் ருக்மணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதேநேரம், தேர்வெழுத வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்த ருக்மணி, தனது விருப்பத்தை டாக்டர்களிடம் தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிறப்பு அனுமதி பெற்று மருத்துவ வசதிகளுடன் அறிவியல் தேர்வினை எழுதினார்.

தேர்வு

பிரசவம் முடிந்த ஓரிரு மணி நேரத்தில் தேர்வெழுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, அதை வெற்றிகரமாக முடித்த ருக்மணியின் முடிவை, கல்வி அதிகாரிகள் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.

தேர்வுக்கு முக்கியத்துவம் தந்துள்ளதோடு, தன்னம்பிக்கையுடன் பெண்கள் கல்வி பயில வேண்டும் என்பதற்கும் ருக்மணி சிறந்த உதாரணம் என்று பலரும் புகழ்ந்துள்ளனர்.



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*