``அரவை இயந்திரம் இல்லாமல் நான் இல்லப்பா!’’ - இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan

0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

2கே கிட்ஸ் பலருக்கு அரவை நிலையம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. கோதுமை (மாவு) மிளகாய்த்தூள் அரைக்க அம்மாவுடன் அரவை நிலையத்திற்கு சென்று இருப்பார்களா? குறைந்தபட்சம் வறுத்த காஃபி கொட்டை அரைக்கும் இயந்திரத்தையாவது பார்த்திருப்பார்களா?! என்பது சந்தேகம் தான்.

அழகிய பழைய நினைவுகளை மீட்டெடுப்பது ஒருவித சுகமே... அரவை நிலையத்துக்கு சென்று உலர் மாவு அரைத்து வந்த நினைவுகள்... மனம் துள்ளிக் குதித்து அந்தக் காலத்திற்கே செல்கிறது.

வளவனூர் கடைத் தெருவில் " ராஜ விலாஸ் தாத்தா" . (அவர் முழு பெயர் நினைவில் இல்லை இப்படி சொல்லி சொல்லி தான் அழைத்ததாக நினைவு,) என்பவர் அரவை நிலையம் வைத்திருந்தார். எங்களுக்கு உறவு முறையும் கூட..

Representational Image

மிளகாய், பூசுமஞ்சள், கோதுமை, சத்துமாவு , காபி கொட்டை (வறுத்ததை) அரைத்து தர இப்படி சின்னதும் பெரிதுமாய் நிறைய அரவை இயந்திரங்கள் கம்பீரமாய் வீற்றிருக்கும். சுற்றுவட்டாரத்தில் பலரும் இங்குதான் அரைக்க வருவார்கள். சனி, ஞாயிறு (அரை நாள் மட்டும்) விடுமுறை நாட்களில் அம்மா கொடுக்கும் பொருட்களை அரைத்து வர நானே செல்வேன்.

நான் மிஷினுக்கு செல்ல மூன்று காரணங்கள்.

ஒன்று...

தாத்தா வீட்டுத் தோட்டத்தில் தொட்டாச் சிணுங்கிச் செடி நிறைய இருக்கும்.. மிஷினில் கூட்டம் அதிகம் இருந்தால், அரைக்கும் பொருட்களை வைத்துவிட்டு தாத்தாவிடம் சொல்லிவிட்டு  தோட்டத்திற்குச் சென்று செடிகிட்டபோய்.. இலை மீது ஒற்றை விரலை வைக்க.. வெட்கப்பட்டு தன் இலைகளை சுருக்கிக் கொள்வதைப்பார்க்க ரொம்ப பிடிக்கும். தொட்டாச்சிணுங்கி யின்வெட்கம் வேற லெவல்.. அதை தொட்டுப் பார்த்து அதன் வெட்கத்தை ரசிப்பதற்காகவே சென்ற காலம் அதெல்லாம்.

தொட்டாச் சிணுங்கி

இரண்டாவது..


தாத்தாவின் அரவை  நிலையத்திற்கு அருகில்.. கண்ணாடி போட்ட கூண்டுக்குள் பல வகையான நிறங்களில் வெண்ணை பிஸ்கட்டுகளை ஒரு பெரியவர் விற்றுக் கொண்டிருப்பார். நாலணாவிற்கு நான்கு பிஸ்கட் தருவார். மேலே மெரூன்நிற கோட்டிங்கில் சதுர வடிவில் வட்ட வடிவமாய்.. சக்கரம் போல்  வட்ட வடிவத்தில் நடுவில் ஒரு திராட்சை வைத்து.. இப்படி பல பிஸ்கட்டுகள் வைத்திருப்பார். எத்தனை வயசு ஆனாலும் இந்த பிஸ்கட்டை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதை வாங்கி அப்படியே வாயில் வைத்து பல்லில் கடிபடாமல் மெதுவாய் கடிக்க ( உரிய)... அது அப்படியே கரைந்து உள்ளுக்குள் போகும் அட அட .. அமிழ்தினுமினிது...என்று கவியே பாடலாம்..

மூன்றாவது ..

ஐஸ் வண்டி .. ஐஸ் வண்டியின் அருகில் சென்று தலையை விட்டு தேடி எடுத்து குச்சி ஐஸ்(சேமியா ஐஸ்) வாங்கி, ஐஸ் கரைவதற்குள்... கடிக்காமல் ருசித்தது...

ஆக இந்த மூன்று காரணங்களுக்காகவே நான் அரவை நிலையத்திற்குச் சென்று(தானியங்கள், பூசு மஞ்சள்.. இப்படி எதுவாக இருந்தாலும்) அரைத்து வருவேன்.

அதிலும் மிளகாய் தூள் அரைக்கும் போது ஒரு வாசம் வரும் பாருங்கள். இந்த பதிவை எழுதும்போது கூட அந்த வாசம் அப்படியே என்னை சுற்றி.. காற்றலையில்... மிதந்து வருகிறது. காய்ந்த குண்டு மிளகாய், தனியா மிளகு சீரகம் ,கருவேப்பிலை பச்சை கடுகு, விரளி மஞ்சள் இப்படி ஒவ்வொன்றின் வாசமும் ..ஆஹா...

குச்சி ஐஸ்

அதேபோல் கோதுமை மாவு.. அம்மா பஞ்சாப் கோதுமையைக் கழுவி காய வைத்து .. அதனுடன் நான்கு கிலோ கோதுமை என்றால் கால் கிலோ வெள்ளைக் கொண்டைக்கடலை மற்றும் 100 கிராம் பாதாம் பருப்பு சேர்த்து தான் அரைக்கத் தருவார். சப்பாத்தி சுவையில் அள்ளும். நான் இன்று வரை இப்படித்தான் அரைக்கிறேன்.

நீங்கள் ஆயிரம் தான் சொல்லுங்கள் சின்னஞ்சிறு வயதில் எந்த கஷ்டங்களும் இன்றி சிறகுள்ள சிட்டுக்குருவியாய் சிறகடித்து பறந்த அந்த நாட்கள் அவ்வளவு அழகு .

மொத்தத்தில் திரும்பக் கிடைக்காத பொக்கிஷங்களில் முதலிடம் கடந்த காலத்துக்கு தான்!

பி.கு(ஒரு சிறு வித்தியாசம் இப்போது நான் அரைக்க செல்லும் அரவை நிலையத்திற்கு அருகில் மாலை வேளையில் விதவிதமாய் பஜ்ஜி மற்றும் சாண்ட்விச் போடறாங்க.. நிச்சயம் இரண்டு பஜ்ஜி சாப்பிடாமல் வந்ததாக சரித்திரமே இல்லை . அட போங்க பாஸ்.. வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்படறதே விரும்பியதை சாப்பிடறதுக்குத்தான்.. எனர்ஜி பூஸ்டர்...நான் சொல்றது சரிதானே!

எது எப்படியோ அரவை இயந்திரம் இல்லாமல் நான் இல்லப்பா!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*