மும்பையில், 8 முதல் 11 வயதுள்ள நான்கு பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனையை வழங்கி, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு, மும்பையைச் சேர்ந்த பள்ளி ஒன்றில், ஐந்தாம் வகுப்பு படித்த இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஆறாம் வகுப்பு படித்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு, அப்பள்ளி ஆசிரியர் சாருதத்தா ரவீந்திர பொரோல் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். குழந்தைகளின் தோளில் கை வைப்பது, கால் பாதத்தை சீண்டுவது, தொடையில் கிள்ளுவது உள்பட பல்வேறு வகையான சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளில் ஒருவர், மற்றொரு ஆசிரியரான மீனாட்சி என்பவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவிகளிடம் புகார் எழுதி வாங்கி அந்த ஆசிரியர், அதனை தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோருக்கு தெரிய வரவே, ஒரு குழந்தையின் பெற்றோர் 05.03.2016-ல் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர், ஆசிரியர் பொரோல் பள்ளிக்கு வரவில்லை. அதே நேரம், பள்ளி நிர்வாகம் அவருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணையை வழங்கியது. அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த 11.03.2016ல், பொரோல் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 354A மற்றும் 509 பிரிவுகளின் கீழும், போக்சோ சட்டப் பிரிவுகள் 8 மற்றும் 10-ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு மும்பை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பொரோல் தரப்பில் வாதிடும் போது, ’ஆசிரியர் மீனாட்சிக்கும் தனக்கும் இருந்த முன் பகையால், பொய்யாக புகார் அளிக்கச் செய்துள்ளார். பாலியல் சீண்டல் சம்பவம் நடந்த தேதிகள் குறிப்பிடப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை தாமதமாகப் பதியப்பட்டது. சாட்சி சொன்ன மாணவி ஒருவரை விசாரிக்கவில்லை’ என்று, வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அதே நேரம், ’ஆசிரியர் மீனாட்சிக்கும், பொரோலுக்கும் இடையிலான சிக்கல் இருப்பது குறித்து எவ்வித புகாரும் பள்ளி நிர்வாகத்திடம் இல்லை. இந்த குற்றச்சாட்டு அற்பத்தனமானது’ என்ற நீதிமன்றம், குழந்தைகளின் வாக்குமூலத்தின்படி, சந்தேகத்திற்கிடமின்றி பொரோல் பாலியல் குற்றவாளி என்று அறிவித்தது.
``நம் சமூகத்தில், பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைப்பதில்லை. இப்படியான சம்பவங்கள் நிகழ்வதால் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். மற்ற பெண் குழந்தைகள் கல்வி கற்பதையும் இது பாதிக்கிறது.
எனவே, குற்றச்செயலையும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கப்படுகிறது" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், ஆசிரியர் பொரோலுக்கு ஐந்து வருட கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 3,000 தொகையையும் கட்டச் சொல்லி தீர்ப்பு அளித்தது.
- நிலவுமொழி செந்தாமரை
from விகடன்
Umn news
