`பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா...?'- இலங்கைப் போராளி சந்திரிகா சொல்வது என்ன?

0

இலங்கையில் சிங்கள ராணுவத்தால், தமிழ் மக்களுக்கு நடந்தேறிய, நடக்கின்ற அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும் ஒருபோதும் மறைக்கவோ, மறக்கவோ முடியாது.

இலங்கையில் சிங்கள அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் 1983-2009-ம் காலகட்டத்தில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண் போராளி சந்திரிகாவை நேர்காணல் செய்தோம்...

பெண் போராளி சந்திரிகா

சந்திரிகா, இலங்கையில் பிறந்தவர், தமிழ் மக்களின் அவல நிலைகளை உணர்ந்து தன்னை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்டவர். போராட்டத்தின்  இறுதிக்காலத்தில்  சந்திரிகா லண்டனில் குடியேறினார்.

ஆனாலும் அவர், சர்வதேச அளவில் பல அமைப்புகளுடன் இணைந்து ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், நீதிக்காகவும் தொடர்சியாகக் குரல் கொடுத்து வருகிறார். 

``ஈழ விடுதலைப் போராட்டத்தில்  உண்மையிலேயே பெண்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டதா?''

``நான் ஈழ விடுதலைக்காக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து அவ்வமைப்பின்  அரசியல் பிரிவில் செயல்பட்டேன். எங்களுடைய பெண் போராளிகள் இருவேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப்  போராட வேண்டி இருந்தது. தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் (பெண் விடுதலை) போராடினோம். ஒரு நாட்டின் சுதந்திரம்  முழுமையடைய வேண்டுமென்றால்,  பெண்கள் சுதந்திரமாக இயங்குவது அவசியம். 'பெண்களும் ஆண்களுக்கு நிகரான வீரத்தைப் பெற்றவர்கள்' என்ற பாரதியின் புதுமைப் பெண் சிந்தனைக்கு விடுதலைப் போராட்டத்தில் எங்கள் இயக்கத் தலைவர் செயல் வடிவம் கொடுத்தார்.

விடுதலைப்புலிகள் கொடி

விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டபோது, எங்களுடன் பயணித்த ஆண் தோழர்களால் சிறு தொல்லைகளைக்கூட எதிர்கொள்ளவில்லை. சக தோழர்கள், எங்களிடம் மிகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் பழகினர். விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட நிழல் அரசின் கீழ் பாதுகாப்பாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தோம். எங்கள் பெண்களை உலக அளவில் நட்சத்திரமாகக் காட்டியது எங்களுடைய விடுதலைப் போராட்டமும் இயக்கத் தலைவரும்தான்''.

''கவிதை, கட்டுரை் எழுதும் ஆர்வமுடைய தங்களின் எழுத்துகள், எதை நோக்கியதாக இருக்கின்றன?''

''ஈழப் பெண்களின் கவிதைகள் போர்க்களத்தின் உள்ளிலிருந்தும் வெளியிலிருந்தும் எழுதப்பட்டவை. கேப்டன் கஸ்தூரி, கேப்டன் வானதி, மேஜர் பாரதி போன்ற போராளிப் பெண் கவிஞர்கள், போர்க்கள அனுபவங்களை வீரச்செறிவுடன் மனிதாபிமானக் குரல்களுடன் எழுதினார்கள்.

இலங்கைத் தமிழர்கள்

நான் ஈழத்துக் காதல்,சோகம் என்ற தலைப்பில்  ஆல்பம்  வெளியிட்டுள்ளேன். எங்கள் மண்ணின் வீரமும், வலியும் நிறைந்த பாடல்கள் இந்த ஆல்பத்தில்  இடம்பெற்றிருக்கும். உலகத்தில் உள்ள பெண்கள் மீதான அனைத்து ஒடுக்குமுறைகள்  குறித்தும், பெண் விடுதலையை வலியுறுத்தியும் பல  கவிதைகள்  எழுதியுள்ளேன்.'' 

``இலங்கை இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் இந்திய அளவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும், சர்வதேச அளவிலும் அக்கறை காட்டப்படுகிறதா?'' 

''ஈழப் படுகொலையை  பற்றி அனைவருமே பேச மட்டும்தான் செய்கிறார்கள். எவரும் தீவிரமாகச் செயல்படுவது போல் தெரியவில்லை. எங்கள் பிரச்னைகளை சில அரசியல் தலைவர்கள் உணர்வுபூர்வமாகப் பேசினாலும், பெரும்பாலான அரசியல் கட்சிகள் வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமே பேசுகிறார்கள். இலங்கையைத் தாயகமாகக் கொண்ட எண்ணற்றவர்கள், இன்று பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நாங்கள் அனைவரும் ஈழத்துக்காக இன்றுவரை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.''

பெண் போராளி சந்திரிகா

''இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்கள் எப்படி இருக்கின்றன. அரசாங்கத்தின் செயல்பாடுகள் திருப்தி தரும் வகையில் உள்ளனவா?"

''இனப்படுகொலையிலிருந்து தப்புவதற்காக தமிழகத்தில் தஞ்சமடைந்த அகதிகள், தமிழகத்தின் அகதி முகாம்களில் கடும் துயரங்களை அனுபவித்துவருவது யாருக்கும் தெரிவதில்லை. உயர் கல்வி, குடியுரிமை என பலவும் மறுக்கப்படுகின்றன. அகதி என்பதை ஒரு வழக்குச் சொல்லாக நாம் பயன்படுத்திய போதிலும், சட்டப்படி இங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்லர்.

அவர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவின் உள்ளே நுழைந்திருக்கும் 'சட்டவிரோதக் குடியேறிகள்' என்பதே இந்திய அரசு அவர்களுக்கு வழங்கியிருக்கும் தகுதி. இந்திய அரசு இங்குள்ள  மக்களையே வறுமையிலிருந்து விடுவிக்க எந்த முயற்சியும் எடுக்காதபோது, அகதிகளின் உரிமைகளை மீட்டெடுத்து சமூகநீதியை நிலைநாட்டுமா என்பது கேள்விக்குறி. இன்னும் சொல்லப்போனால் முகாம்களில் உள்ள என் மக்களை வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர்கள் பார்ப்பதற்கே அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.''

பிரபாகரன்

''இன்றைக்கு பொருளாதார ரீதியிலும் இலங்கை பெரும் துன்பங்களைச் சந்தித்துவருகிறது. நிலைமை இந்த அளவுக்கு மோசமானதற்கு என்ன காரணம்?''

''மதவாதம், இனவாதம் இரண்டையும் பல ஆண்டுகளாக கையில் வைத்துக்கொண்டு சொந்த நாட்டையே ஆட்சியாளர்கள் சுரண்டியதுதான் காரணம். மதவாதம், இனவாதம் இவை இரண்டும் மனிதனின் அடிப்படைக் குணமான மனிதாபிமானத்தை முற்றாக இழக்கச் செய்கின்றன. இவை என்றுமே நாட்டின் வளர்ச்சியை முன்னோக்கி இழுத்துச் செல்லாது. மதவாதம், இனவாதம் அகியவற்றை ஒரு நாடு கையிலெடுத்தால், அதனால் ஏற்படும் கலவரங்களால் கடுமையான பொருளாதார நெருக்கடியை ஒரு நாடு சந்தித்தே ஆகவேண்டும். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டுதான் இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிகளும், அரசியல் மாற்றங்களும்.''

''மலையகத் தமிழர்களின் நிலை இலங்கையில் எப்படி உள்ளது?''

''இந்தியாவிலிருந்து  கூலித்தொழிலாளிகளாக  இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களே, மலையகத் தமிழர்கள். இலங்கை மலைகளில் வேலை செய்யும் அவர்களுக்கு, எத்தனையோ அநீதிகள் நித்தம்  இழைக்கப்படுகின்றன.  அடிப்படை  உரிமைகள்கூட  மறுக்கப்பட்டு  கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. பல வருட காலமாக லைன்-வீடுகள் என்று அழைக்கப்படும் சிறிய, நெரிசல் மிகுந்த வீடுகளிலேயே இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மிக மோசமான சுகாதார மற்றும் சமூக பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.''

Refugees / Representational Image

''மீண்டும், இலங்கையில் தமிழ்மக்களுக்கான   விடுதலைப் போராட்டம் ஏற்படுமா?'' 

 ''சிங்கள ராணுவத்தால் எங்கள் மக்கள் அனுபவித்த, அனுபவிக்கும் வேதனைகளை என்னால்  வார்த்தைகளால்  விவரிக்க முடியவில்லை, எங்கள் மக்கள் மிகவும் நலிவுற்றுள்ளனர். மீண்டும் ஆயுதம் தாங்கிய போராட்டம், ஈழத்தில் சாத்தியமில்லை. ஆனால்,  ஜனநாயக முறையிலும், சர்வதேச அரசியல் தளத்திலும் எங்களது போராட்டம் தொடரும்.''

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார். இது பற்றி உங்களின் கருத்து என்ன?

இயக்கத் தலைவர் உயிருடன் இருப்பதாக தொடர்ந்து வதந்தி பரவுகிறது, வதந்தியைப் பரப்பியவர்களின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் என்னால் ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். எங்கள் தலைவர், ஈழத்து மக்களை அளவுகடந்து நேசிப்பவர். எந்த மண்ணின் மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தாரோ, அவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு எங்கேயும் போயிருக்க மாட்டார். அவரது உயிர்அவர் நேசித்த மண்ணில்தான் பிரிந்திருக்கும்.



from விகடன்
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*