
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மெலட்டூர் கிராமத்தை பூர்விகமாகக்கொண்டவர் ஜெயம்மாள். இவர் பிறந்த வருடம் அநேகமாக 1924 அல்லது 1925 ஆக இருக்கலாம். இவருக்கு மிகவும் சிறு வயதிலேயே வைத்தியநாதன் என்பவருடன் திருமணம் நடந்தது.
ஜெயம்மாளுக்கு திருமணம் நடந்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்து 40 நாட்களே ஆன நிலையில் ஜெயம்மாளின் கணவர் வைத்தியநாதன் இறந்தார். மிகவும் இள வயதிலேயே பிறந்து 40 நாட்களே ஆன ஒரு கைக்குழந்தையுடன் ஜெயம்மாள் விதியின் கொடுமையால் தனியாக விடப்பட்டார்.
செய்வதறியாது திகைத்து நின்ற ஜெயம்மாளுக்கு அவரது சகோதரியின் குடும்பம் சிறிது ஆதரவாக இருந்தது. தனது கணவர் இறக்கும் போது ஜெயம்மாள் 7 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தார்.
இனி தான் படித்து வேலைக்கு சென்று குழந்தையை வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் அந்தச்சிறு குழந்தையை தன் சகோதரியின் வீட்டில் திருச்சிராப்பள்ளியில் விட்டு விட்டு மதராஸிற்கு (தற்போது சென்னை) படிக்கச்சென்றார்.
நாட்கள் உருண்டோடின. ஜெயம்மாள் மதராஸில் ராமகிருஷ்ணா மிஷன் நடத்திய பள்ளியில் SSLC படித்து தேர்வானார். பிறகு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் சேர்ந்து தேர்ச்சி பெற்று ஆசிரியையாக தகுதி பெற்றார்.
இதற்கிடையில் ஜெயம்மாளின் குழந்தை திருச்சியில் தனது பெரியம்மாவின் வீட்டில் பல கஷ்டங்களுக்கு இடையில் ஒரு பள்ளியில் சேர்ந்து படித்து வந்தது. அந்த குழந்தைக்கு தினமும் ஒரு வேளை உணவு மட்டுமே கிடைத்தது. ஜெயம்மாளுக்கு ஒரு புறம் கணவரை இழந்த சோகம். அதையும் தாண்டி தன் குழந்தையை விட்டு பல ஆண்டுகள் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை. இறைவன் கண் திறக்கும் நேரம் வந்தது. ஜெயம்மாளுக்கு திருச்சியிலேயே அந்தக்காலத்தில் ஒரு சிறந்த பள்ளியாக விளங்கிய E.R ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக வேலை கிடைத்தது. இது அரசாங்க உதவி பெற்ற பள்ளியாதலால் நல்ல சம்பளமும் கிடைத்தது.
ஜெயம்மாள் டீச்சர் சிறிது சிறிதாக வாழ்க்கையில் முன்னேறத்தொடங்கினார். தனது மகனை SSLC வரை படிக்க வைத்து ஒரு வங்கியிலும் வேலை வாங்கிக்கொடுத்தார். மகனுக்கு திருமணமும் நடத்தி வைத்தார். தானும் பள்ளியில் மிகவும் கடுமையாக உழைத்து சிறிது சிறிதாக பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியையாக அதே பள்ளியில் பணி அமர்த்தப்பட்டார். ஜெயம்மாள் டீச்சருக்கு மூன்று பேரக்குழந்தைகள். அவர்களையும் தானே முன்னின்று வளர்த்தார். பேரன்கள் மூவரும் நன்றாகப்படித்து நல்ல வேலையில் அமர்ந்தனர். ஜெயம்மாள் டீச்சர் தனது வாழ்க்கையின் கடைசி வரை எந்த வித சுகத்தையும் அனுபவிக்காமல் தனது குடும்பத்திற்காகவும் தான் வேலை பார்த்த பள்ளிக்காகவுமே உழைத்து தனது 82 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அவர் வாழ்வு ஒரு பாடம்
ஜெயம்மாள் டீச்சர் அவர்கள் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்த சில நல்ல விஷயங்கள் –
தினமும் அதிகாலையில் எழுவார்
எப்பொழுதும் அரை வயிற்றுக்கே உண்பார். உணவுக்கட்டுப்பாட்டில் மிகவும் கவனமாக இருந்தார்.
நேர்மை, கடமை மற்றும் நேரம் தவறாமை
கடின உழைப்பாளி. தனது சிறு வயதிலிருந்து கடைசி வரை ஓயாமல் பள்ளிக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைத்துக்கொண்டே இருந்தார்
சமூக சிந்தனை, தன்னால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு எப்பொழுதும் செய்தார்.
அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொள்வார். அதே சமயம் தேவையான நேரத்தில் கண்டிப்பாகவும் நடந்து கொள்வார்.
விருந்தோம்பலில் அவருக்கு நிகர் அவரே. வீட்டிற்கு வரும் அனைவரையும் பாசத்துடன் உபசரிப்பார்.
பண வசதி வந்த பிறகும் கூட கடைசி வரை எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். எப்பொழுதும் பேருந்தில் தான் பயணிப்பார்.
அதீத தெய்வ பக்தி கொண்டவர். திருச்சியில் வாழ்ந்த இவர், திரு ஆனைக்கோவில், சமயபுரம், வெக்காளியம்மன் கோவில் மற்றும் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கும் ஒவ்வொரு வாரமும் சென்று பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.
தான் பட்ட கஷ்டத்தை யாரிடமும் அவர் கூறியதில்லை. அவரைப்போல் மன உறுதியும் தைரியமும் உள்ளவர்களைக் காண்பது மிகவும் அரிது.
கடமையை மீறிய பாசத்தால் தனக்கு வயதான போதும் தனது மகனின் குடும்பத்திற்கு கடைசி வரை உதவியாகவே இருந்தார்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஜெயம்மாள் டீச்சர் போன்று கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்களின் வாழ்க்கை வரலாறு இந்த தலைமுறையினருக்கு ஒரு சிறந்த பாடம். சின்னச்சின்ன பிரச்னைகளுக்கே துவண்டு விடும் நாம் ஜெயம்மாள் டீச்சரின் வாழ்க்கையை நினைவில் கொண்டு மன உறுதியுடனும் தைரியத்துடனும் நம் இலட்சியத்தில் உறுதியாக இருந்து கடுமையாக உழைத்து வாழ்க்கையில் வெல்வோம்!
(இது உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
from விகடன்
Umn news
